Thursday, August 23, 2007

சிறிலங்காவே ஆசியாவில் அதிக வட்டி விகிதம் உள்ள நாடு: "த புளும்பேர்க்" இணையத்தளம்!

உலகத்தின் கடன் சந்தைகளில் சிறிலங்காவின் நிதி நிலமை மிகவும் மோசமாக உள்ளதனால் சிறிலங்காவின் கடன் மீளச் செலுத்தும் தன்மைக்கான தரம் மேலும் குறைக்கப்படலாம் என்று "பிற்ச்" தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளதுதாகவும், ஆசியாவிலேயே அதிக வட்டி விகிதம் கூடிய நாடாக சிறிலங்கா திகழ்வதாகவும் "த புளும்பேர்க்" இணையத்தளம் தனது பத்தியில் தெரிவித்துள்ளது.


அதன் தமிழ் வடிவம் வருமாறு:

இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட தரப்படுத்தலில் சிறிலங்கா பிபி அல்லது முதலீட்டுக்கான தரத்திற்கு மூன்று தரம் குறைவாக தரப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களே இந்த தரக்குறைவிற்கான காரணம்.

இழப்புக்களைச் சந்தித்த அமெரிக்காவின் வீட்டுக்கடன் திட்ட கொடுப்பனவு நிறுவனங்களின் நிதி சந்தையும் கடந்த மாதம் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இது குறைந்த வட்டிவீத முதலீட்டாளர்களை முதலீடுகளை தவிர்க்கத் தூண்டியுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் தொடர்ச்சியாக, எதிரான தரப்படுத்தல்களே வெளிவந்து கொண்டுள்ளன என்ற இந்த அமைப்பின் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட குழுவின் தலைவரான போல் ராவ்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்தும் கவலையை அளிக்கின்றன. பரந்த பொருளாதார கொள்கையின் சூழ்நிலை தற்போதைய உலக நிதிச்சந்தையின் நெருக்கடி நிலைமையின் பிரகாரம் முன்னேற்றமாக இல்லை என்ற அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் உறுதியற்ற பொருளாதார கடன் சந்தை சிறிலங்காவை மேலும் கடினமான பாதையில் தள்ளியுள்ளது.

ஏனெனில் அனைத்துலகத்தில் இருந்து அதிக நிதியை பெறுவதனால் ஆசியாவில் சிறிலங்காவே அதிக கடன், செலவுகள் உள்ள நாடாகும்.

தெற்காசியாவின் தீவான சிறிலங்கா கடந்த ஒகஸ்ட் 2 ஆம் நாள் ஜேபி மோகன் சேஸ் அன் கோ (JPMorgan Chase & Co), பார்கிளேஸ் கபிற்ரல் (Barclays Capital), எச்எஸ்பிசி கோல்டிங்ஸ் (HSBC Holdings Plc) ஆகிய நிதி நிறுவனங்களின் உதவியுடன் பிணைகளைச் செலுத்தி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனைத்துலகத்தில் பெற முனைந்துள்ளது.

20 மில்லியன் மக்களை கொண்ட சிறிலங்காவில் கடந்த இருபது வருட கால போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பேச்சுக்கள் கடந்த ஆண்டு ஒக்ரோபரில் முறிவடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும், அரச படையினருக்கும் இடையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த வருடத்தில் இருந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரான்டட் அன் புவர்ஸ் (Standard & Poor's) என்ற அமைப்பும் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான தனது தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது. அது சிறிலங்காவை பி பிளஸ் (B+) ஆக தரப்படுத்தி உள்ளது. அதாவது இது முதலீட்டுக்கான தரத்தில் இருந்து நான்கு தரம் குறைவானதாகும். ஏதிர்மறையான இந்த வெளிப்பாடுகள் நாட்டின் தரத்தை குறைப்பதை அதிகரிக்கச் செய்யும்.

ஜூலை மாதம் விலையேற்றம் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவின் வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒகஸ்ட் 14 ஆம் நாள் மாற்றம் இன்றி 10.5 ஆக பேணி வருகின்றது. இதுவே ஆசியாவின் அதி உயர் வட்டிவிகிதமாகும்.

அதிகளவான நிதிக் கொள்வனவுகள், நாட்டில் நடைபெற்று வரும் மோதல்கள் என்பன 26 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது. அது கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் கால் பகுதியில் மெதுவாகவே அதிகரித்து உள்ளது.

படைத்துறை கொள்வனவுகள், விடுதலைப் புலிகளுடனான மோதல்கள், எரிபொருள் விலையேற்றம் என்பன விலையேற்றத்தை மோசமாக்கியுள்ளதுடன் மத்திய வங்கியின் விலைக் கட்டுப்பாட்டு நோக்கத்தையும் அச்சுறுத்தி வருகின்றது.

நோர்வேயின் மேற்பார்வையில் உருவான போர் நிறுத்தத்தில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி கண்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் மற்றும் அவரது கொள்கை வகுப்பாளர்களும் இந்த ஆண்டு முடிவுக்குள் நாட்டின் விலையேற்றத்தை ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர். அவர்களே கடந்த ஆண்டில் கடன் கொள்முதல்களை 1.25 விகிதத்தாலும், இந்த வருடம் பெப்ரவரி 23 ஆம் நாள் 0.5 விகித்தாலும் அதிகரித்தவர்கள்.

விலையேற்றத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவது சிறிலங்காவிற்கு முக்கியமானது. அதுவே அதன் கடன் சேவைகளின் செலவுகளை குறைக்கும் என்று "பிற்ச்" தரப்படுத்தல் அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: