Monday, August 27, 2007

44 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை!!!

சிறிலங்காவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த, ஐ. நா. மனிதபிமான விவகாரங்களின் விசேட பிரதிநிதி, சேர் ஜோண் ஹேல்ம்ஸ் கொழும்பில் கூறிய சில கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும் ஐ. நா. வுக்கும் இடையில் மீண்டும் ஒரு வீரிசலை ஏற்படுத்தியிருந்ததை நாம் யாவரும் அறிவோம். மீக நீண்ட காலமாக, ஐ. நா. வுடன் மட்டுமல்லாது வேறு பல சர்வதேச நிறுவனங்களுடனும், பல முக்கிய புள்ளிகளுடனும் சிறிலங்கா மோதி வருவது என்பது சரித்திரம். ஐ. நா. வின் முன்னாள் செயலாளர் திரு கோபி அணான், ஐ. நா. வின் விசேட ஆலோசகர் அலன் றோக் உட்பட வேறு பலர் சம்பந்தப்பட்ட சம்பவங்களை இவற்றில் அடங்கும்.

இச் சம்பவங்கள் யாவும் எப்படி உருவாகின்றன? இவற்றை யாரால், எந்த சந்தர்பத்தில் உருவாக்கப்படுகின்றன என்பதை ஆராய்வது மிக அவசியம். நாம் இவ் ஆய்வை ஆரம்பிக்க முன் மிக சுருக்கமாக கூற விரும்புவது என்னவெனில், சேர் ஜோண் ஹேல்ம்ஸின் அறிக்கையும், சிறிலங்கா அரசின் சார்பில் பல அமைச்ர்களினால் வெளியிடப்பட்ட மறுப்பு அறிக்கைகளும், ஜனவரி 2006 பின்னர் சிறிலங்காவில் கொல்லப்பட்டுள்ள மனிதபிமான பணிப்பாளர்களை பற்றியதும், சிறிலங்கா மனிதபிமான பணிப்பாளர்களுக்கு பாதுகாப்பானதா? ஆகிய விடயம் மட்டுமே! இவை தவிர மற்றைய சர்வதேச நிறுவனங்களும் அதன் மனிதபிமான பணிப்பாளர்களை மீதான தாக்குதல்கள் பற்றியோ, அல்லது தற்பொழுது இடம் பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றியது அல்லா என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஐ. நா. மனிதபிமான விவகாரங்களின் விசேட பிரதிநிதி என்ற அடிப்படையில், சிறிலங்காவுக்கான தனது விஜயம் செய்த வேளையில், ஜோண் ஹேல்ம்ஸ் கொழும்பில் 'றோயிட்டர்" செய்தி நிறுவனத்திற்கு ஆகஸ்ட் 8ம் திகதி வழங்கிய செவ்வியில், 'ஜனவரி 2006 பின்னர் சிறிலங்காவில் 34 மனிதபிமான பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மனிதபிமான பணிப்பாளர்களின் பாதுகாப்பை பொறுத்தவரையில் உலகில் சிறிலங்கா மிகவும் மோசமான நிலை உள்ளதாகவும் கூறினார்".

இச் செய்தி வெளியாகியதும், சிறிலங்காவின் பிரதமர் திரு ரட்ணசிறி விக்கிரமாநாயக்கா பாரளுமன்றத்தில் ஆகஸ்ட் 10ம் திகதி, 'சேர் ஜோண் ஹேல்ம்ஸின் அறிக்கையை தாம் நிரகரிப்பதாகவும், இவ் அறிக்கை தமது அரசாங்கத்தை எதிர்பவருக்கு ஆதரவு சோப்பதாக உள்ளதாக", கூறினார்.

பிரதமரின் அறிக்கையை தொடர்ந்து, சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சினால், ஆகஸ்ட் 11ம் திகதி, வெளியிடப்பட்ட அறிக்கையில், 'ஜோண் ஹேல்ம்ஸின் அறிக்கை பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாகவும்,, தமது கணிப்பின் பிரகாரம் 17 பிரான்ஸ் நிறுவனத்தின் மனிதபிமான பணிப்பாளர்களுடன், 2 செஞ்சிலுவைச் சங்க ஊழியர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆகையால் மொத்தமாக 19 மனிதபிமான பணிப்பாளர்களே கொல்லப்பட்டுள்ளதாகவும்,, அப்படியானால் ஜோண் ஹேல்ம்ஸ் எப்படியாக 34 பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறமுடியும்" என கேள்வி எழுப்பினார்கள்.

சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை வெளியாகி மூன்று தினங்களின் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரும், மத்திரியுமான திரு கேகலிய ராம்புக்கால, ஆகஸ்ட் 14ம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், '17 பிரான்ஸ் நிறுவனத்தின் மனிதபிமான பணிப்பாளர்களுடன், 2 செஞ்சிலுவைச் சங்க ஊழியரும், 1 டென்மார்க் நிறுவனத்தின் நிலக் கண்ணி அகற்றுபவருமாக சேர்த்து, மொத்தமாக 20 மனிதபிமான பணிப்பாளர்களே கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆகையால் மிகுதி 14 பற்றிய விபரங்களை தாம் ஜோண் ஹேல்ம்ஸிடம் வினாவியுள்ளதாக" செய்தியாளரிடம் கூறினார்.

இது இவ்வறிருக்கா, ஏரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல், சிறிலங்காவின் நெடுச்சாலை அமைச்சர், திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை கூறியதாவது, 'நான் கூறுவேன், ஜோண் ஹேல்ம்ஸ் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஓர் முழு பயங்கரவாதி என. நான் எண்ணுகிறேன் எல்.ரி.ரி.ஈ. இவருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்களென"! உண்மை என்னவெனில், மிக நீண்ட காலமாக வேறுபட்ட சிறிலங்க அரசாங்கங்களினால், இது போன்ற மிரட்டல் அறிக்கைகள் வெளியீடுவதன் மூலம், சிறிலங்காவின் உண்மை நிலையை சுதந்திரமாக கூறும் சகல முக்கிய புள்ளிகளினதும், சர்வதேச நிறுவனங்களின் கருத்துக்ளை அடக்கி நசுக்கி வருகிறர்களென்பதே.

இவ்வேளையில், ஐ. நா.வின் பொதுச் செயலாளர் திரு பன் கி-மூனின் பேச்சாளரான மிசல் மொன்ரஸ் அவர்கள், ஆகஸ்ட் 16ம் திகதி நடத்திய தமது நாளந்த செய்தியாளர் சந்திப்பில், 'பத்திரிகை செய்திகளின் பிரகாரம், ஜோண் ஹேல்ம்ஸ் அவர்கள் சிறிலங்காவினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நாம் இதை ஓர் தேவையற்ற ஏற்க முடியாத செயலாக பார்க்கிறோம். ஐ. நா.வின் பொதுச் செயலாளர், மனிதபிமான விவகாரங்களின் விசேட பிரதிநிதி ஜோண் ஹேல்ம்ஸின் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். இதை மட்டுமே என்னால் தற்போதைய நிலையில் கூற முடியும்", என்றார்.

ஐ. நா.வின் பேச்சாளரின் சுருக்மான அறிக்கையை தொடர்ந்து, திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையினால் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு, ஆகஸ்ட் 19ம் திகதி கொடுத்த செவ்வியில், 'ஐ. நா. வின் பிரதி நிதி என்னை பற்றியோ, சிறிலங்காவை பற்றி கூறுவதையிட்டு எனக்கு அக்கறையே இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் ஜோண் ஹேல்ம்ஸ, எல்.ரி.ரி.ஈ. யிடம் லஞ்சம் பெறும் ஒரு பயங்கரவாதி தான்! ஐ. நா.வின் பொதுச் செயலாளர் என்ன சொல்கிறார் என்பதை பற்றி எனக்கு அக்கறையில்லை. எந்த வெளிநாட்டவரும் எமது நாட்டுக்கு வந்து, எமக்கு எதிராக வேலை செய்ய அனுமதிக்க முடியாது", என தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசினுடைய விருப்பம் என்னவெனில் - ஆட்கள் காணமல் போகும் விடயத்தில் சிறிலங்கா உலகில் இரண்டாவது இடத்திலிருந்த போதிலும், நாளாந்தம் ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை, படு கொலைகளை அரச படைகளும் ஒட்டுப்படைகளும் மோசமான முறையில் அரச மன்னிப்புடன் மேற்கொள்ளப்படும் வேளையிலும், வெளிநாட்டவர்கள் தம்மை பற்றி நல்ல விதமாக போற்றிப் புகழ வேண்டும் என்பதே!
ஜோண் ஹேல்ம்ஸ் கூறிய விடயமான 34 மனிதபிமான பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளது, ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகவிருந்தால் - நாம் சில விடயங்ககை உண்ணிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது.

(1) ஜனவரி 2006க்கு பின்னர் கொல்லப்பட்ட மனிதபிமான பணிப்பாளர்களுடைய தொகையை, சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சு 19 ஆகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சளர் 20 ஆகவும் கூறியுள்ளனர். ஆகையால் இவர்களுக்கு இடையிலேயே இந்த புள்ளி விபரங்கள் பற்றி சரியான தகவல் இல்லாததை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
உண்மையை கூறுவதனால், ஜனவரி 2006க்கு பின்னர் இன்று வரை, 44 மனிதபிமான பணிப்பாளர்கள் சிறிலங்காவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுடைய பெயர், சம்பவம் தினம், அவர்கள் வேலை செய்த ஸ்தாபனம் போன்ற விபரங்களை தமிழர் மனிதர் உரிமை மையம் ஆகிய எம்மால் இத்துடன் வெளியிடுகிறோம்.

சிறிலங்காவை பொறுத்தவரையில் கொலை செய்யப்படும் முறைகள் வேறுபடுகின்றனா. கடத்தப்பட்டோரில் 98 வீதத்தினர் காணமல் போயுள்ளனர். கடத்தப்பட்டோர் மோசமான சித்திரவதைக்காகும் பொழுது இவர்கள் கொல்லப்படுகின்றனர். இதேவேளை கடத்தப்பட்டவர்கள் பற்றி ஒர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு எந்த செய்தியும் கிட்டதா கட்டத்தில், கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டோர்களாக கணிக்கப்படுகின்றனர்.

(2) சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சினுடையதும், சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரினதும் அறிக்கைகளை மேலும் நாம் உண்ணிப்பாக ஆராயும் இடத்து சிறிலங்காவில் 19-20 மனிதபிமான பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கருதும் இடத்து, இச் சம்பவங்கள் பற்றி இன்று வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? இது வரையில் எத்தனை குற்றவாளிகளை நீதி மன்றத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்? அப்படியானல் தற்பொழுது அங்கு நடைபெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்த, ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? உண்மையை கூறுவதனால் இவர்கள், அரச படைகளினதும், ஒட்டுப்படைகளினதும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி வருவதற்கான ஆதரங்களே நிறைய காணப்படுகின்றனா.

இவ்வேளையில், ஆகஸ்ட் 15ம் திகதி, சிறிலங்காவின் ஜனதிபதி மகிந்த ராஜபக்சாவினால் ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் ஸ்தபானத்தின் மாகாநாட்டில் ஆற்றிய உரையில், எப்படியாக சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை மூடி மறைத்துள்ளார் என்பதை நாம் ஒரு கணம் பார்ப்பது சாலச் சிறந்தது. ராஜபக்சா தனது உரையில் கூறியதவாது, 'எமது நாட்டின் காவல் துறையும், பாதுகாப்பு படையினரும் உலகில் மிக ஓழுக்காமானவர்களும், மனித உரிமையை மதிப்பவர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவுறுத் விரும்புகிறேன். தற்செயலாக அவர்கள் ஏதும் தவறு செய்தால், சரியான முறையில் அவர்கள் விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சிறிலங்காவின் காவல் துறை, பாதுகாப்பு படை பற்றி; மிகவும் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதையும், உலகில் பலர் இவற்றை ஏற்றுக்கொள்வதையிட்டு, நான் மிகவும் மனம் வருந்துகிறேன்" எனக் கூறினார்.

(3) சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரும், மத்திரியுமான கேகலிய ராம்புக்கால, ஆகஸ்ட் 14ம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியதவாது, 'மிகுதி கொலைகளை எல்.ரி.ரி.ஈ. யினர் செய்திருக்கலாமென நாம் சந்தேகிக்கிறேம்"! அப்படியானால், கேகலிய ராம்புக்கால, இவர் கூறும் 20 மனிதபிமான பணிப்பாளர்களை சிறிலங்காவின் பாதுகாப்புபடைகள் தான் கொன்றுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையேல் ராம்புக்கால, எப்படியாக 'மிகுதி கொலைகளை எல். ரி. ரி. ஈ. யினர் செய்திருக்கலாமென நாம் சந்தேகிப்பதாக கூற முடியும்?

ஆகையால், பெறுமதியான சில ஆதரங்களுடன்,இங்கு சில முக்கிய விடயங்களை கூற விரும்புகிறேம்.. மனிதபிமான, மனித உரிமை செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள், சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் பட்சத்தில், உண்மை நிலைகளை மனதில் கொள்ளாது, சிறிலங்காவுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட தயாராக இருக்க வேண்டும். இதற்கு மாறாக யாரும் அங்கு நடைபெறும் மோசமான மனித உரிமை மீறல்களை மனதில் கொண்டு தமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட முன் வருவோர்களேயானால், அவர்கள் 'பயங்கரவாதியாகவோ"
இல்லையேல் 'பயங்கரவாதத்திற்கு துணை போபவர்களாக" சிறிலங்கா அரசினால் பெயர் சூட்டப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எதிர்வரும் ஐப்பசி மாதம், சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ள, ஐ. நா. வின் மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபார், இதை நன்கு மனதில் கொள்வார் என நாம் நம்புகிறோம்.

அத்துடன், நாம் கூட்டியே ஆரூடம் கூறவிரும்புவது என்னவெனில், எதிர்வரும் ஐ. நா. மனித உரிமை சபை கூட்டத் தொடரில் சிறிலங்கா விடயத்தில் எதுவித உருப்படியான நடவடிக்கைகளும் நடைபெறப் போவது இல்லை. காரணம் எதிர்வரும் ஐப்பசி மாதம், சிறிலங்காவுக்கு திருமதி லூயிஸ் ஆபார் விஜயம் செய்யவுள்ளதை காரணம் காட்டி, சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை சபையின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி விடுவார்கள். கடந்த காலங்களில் சிறிலங்காவினால் கூட்டப்பட் சர்வதேச நிபுணர்கள் குழுவை காரணம் காட்டி, ஏறக்குறைய ஒரு வருடமாக ஐ. நா. மனித உரிமை சபையின் கண்டனத்திலிருந்து சிறிலங்கா தப்பித்து கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே வேளை சர்வதேச நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகளும் செயல் இழந்துள்ளனா!

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 44 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் வி. கிருபாகரன் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:

பட்டினிக்கு எதிரான அமைப்பு (ஏ.சி.எப்) - 4 ஓகஸ்ட் 2006 (Action Contre La Faim (ACF) 4 August 2006)
1. திரு பிறிமஸ் ஆனந்தராஜா
2. திரு மதாவராசா கேதீஸ்வரன
3. திரு ஜி. சிறிதரன
4. திரு நார்மதன
5. திரு ஆர் அருள்ராஜ
6. திரு பி. பிரதீபன
7. திரு எம். றிஸிக்கேசன
8. திரு வை. கோடீஸ்வரன
9. செல்வி கே. கோவதண
10. செல்வி எஸ் றோமில
11. செல்வி வி. கோகிலவதன
12. செல்வி ஜி. கவித
13. திரு எஸ் காணேஸ
14. திரு அப்துல் லாதிப் முகமட் ஜபார
15. திரு எ. ஜாசீலன
16. திரு கே. கோணேஸ்வரன
17. திரு முரளிதரன

டெனிஸ் அகதிகள் சபை (DRC) டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் குழு (Danish Refugee Council (DRC), Danish De-mining Group DDG)
18. திரு அருமைநாயகம் ஆலோசியஸ் (23 யூலை 2007)
19. திரு சிவராசா விமலராசா (19 யூன் 2007)
20. திரு தம்பையா தர்மசிறி (11 ஜனவரி 2006)
21. திரு நாராயணமூர்த்தி காண்டீபன் (11 ஜனவரி 2006)

ஹலோ ட்ரஸ்ட் (Halo Trust a non-governmental de-mining organisation)
22. திரு நகராசா நரேந்திரன் (9 பெப்ரவரி 2007)
23. திரு சி ராஜேந்திரன் (9 ஜனவரி 2007)
24. திரு சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (4 ஜனவரி 2007)
25. திரு குணரத்தினம் லோகிதாஸ் (4 பெப்ரவரி 2006)
26. திரு சாள்ஸ் கட்சன் ரவிந்திரன் (15 நவம்பர் 2006)

ஆழிப்பேரலை வீடமைப்பு திட்டம் - 8 யூலை 2006 (Housing development for tsunami victims, funded by FORUT 8 July 2006)
27. திரு இராசையா முரலீஸ்வரன

கியூடெக் - 10 ஏப்ரல் 2006 (Human Development Centre (HUDEC) 10 April 2006)
28. திரு பத்மநாதன் சண்முகரட்ணம
29. திரு செல்வேந்திரா பிரதீபகுமார

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் - 1 யூன் 2007 (International Committee of the Red Cross (ICRC) 1 June 2007)
30. திரு சின்னராஜா சண்முகநாதன
31. திரு கார்த்தீகேசு சந்திரமோகன

அகதிகளுக்கான் மெதடிஸ் சமூக அமைப்பு - 6 ஓகஸ்ட 2007 (Methodist Community Organization for Refugees (UMCOR) 6 August 2007)
32. திரு முகமட் சாவீர் முகமட் ரீஸ்வ

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamil Rehabilitation Organisation (TRO)
33. திரு காசிநாதர் கணேசலிங்கம் (29 ஜனவரி 2006)
34. திரு தங்கராசா கதிர்காமர் (29 ஜனவரி 2006)
35. செல்வி தனுஷ்கோடி பிறேமினி (30 ஜனவரி 2006)
36. திரு தமிர்ராஜ் வசந்தராஜன் (30 ஜனவரி 2006)
37. திரு சண்முகநாதன் சுயேந்திரன் (30 ஜனவரி 2006)
38. திரு கைலாசாபிள்ளை ராவீந்திரன் (30 ஜனவரி 2006)
39. திரு அருநேசராசா சாதீஸ்கரன் (30 ஜனவரி 2006)
40. திரு கிருஸ்ணபிள்ளை கமலநாதன் (02 யூலை 2006)
41. திரு முத்துராஜா அருளேஸ்வரன் (24 மார்ச் 2007)

ஐ.நா. ஏஜென்சி - 24 ஓகஸ்ட் 2006 (UN agency UNOPS in Amparai 24 August 2006)
42. திரு பி ஜெஸ்லி யூலியன

உலக வங்கி உதவியுடன் வடக்கு கிழக்கு நிர்ப்பாசன விவசாயத் திட்டம் - 26 மே 2006 World Bank assisted North East Irrigated Agriculture Project (NEIAP) 26 May 2006
43. திரு. ரட்ணம் ரட்ணராஜ

அபிவிருத்திக்கான உலக அக்கறை அமைப்பு, திருகோணமலை - 11 செப்டம்பர் 2006 (World Concern Development Organization, Trincomalee 11 September 2006)
44. திரு ராகுநாதன் ராமலிங்கம

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு,புதினம்.

No comments: