Thursday, August 16, 2007

எமக்கான விடுதலையை ஒன்றுபட்டு போராடி அடைவதே எமக்கு முன்னுள்ள ஒரே தீர்வு!!!

ஆசிய பிராந்திய ஆதிக்கத்திற்கான நகர்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மிக நுட்பமாக தமக்கு சார்பான அரசுகளை ஆசிய பிராந்தியத்தில் உருவாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இத்தாலிய பெண்மணியான சோனியா காந்தியை மிக இலகுவாக தனது வலைக்குள் விளவைத்த அமெரிக்கா, அவருடை நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் தீவிர வலதுசாரிப் போக்குடையவருமான மன் மோகன் சிங்கை இந்தியாவின் பிரதமராக்கி இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தனதாக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நகர்வு ஆசிய அரசியல் அரங்கில் அமெரிக்கா கண்டுள்ள மிகப்பெரிய வெற்றி என குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே அமெரிக்க விசுவாசியான பாகிஸ்தான் அதிபர் பேர்வஸ் முசரப் தெற்காசியாவின் இரண்டாவது பலம் மிக்க பாகிஸ்தானை ஆட்சி செய்வது அமெரிக்காவிற்கு உவப்பானதாக இருந்த போதிலும் அந்த நிலை தற்போது இல்லை என்றே சொல்லப்படுகின்றது.

அல்கைடா அமைப்பினுள் ஏற்பட்டுள்ள பிளவுகள் அமெரிக்காவின் முதலாவது எதிரியான ஒசமா பின்லாடனை பாகிஸ்தான் அதிபர் முஸ்ரபுடன் நெருக்கம் கொள்ள வைத்துள்ளது இது அமெரிக்கா எதிர்பாராத திருப்பம்.

மறு முனையில் இலங்கையில் தீவிர அமெரிக்க எதிர்பாளர்களும் சீன ஆதரவாளர்களுமான ஜே.வி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது அவர்களின் மறைமுக ஆளுகைக்குள் இருக்கும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவிற்கு பெரிய தலையிடி தான்.

இந்த அரசாங்கத்தை எப்படியேனும் கலைத்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் அடிவருடும் அரசாங்கத்தை உருவாக்கவே அமெரிக்கா தற்போது முயல்கின்றது.

இடதுசாரிகளான ஜே.வி.பியின் ஆதரவின்றி மகிந்த ராஜபக்ச ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நிலையை உருவாக்கி அதன் மூலம் மகிந்தவின் அரசையே தமக்கு சாதமானதாக மாற்ற அமெரிக்கா போட்ட திட்டம் இதுவரை வெற்றியளிக்கவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக வெளிப்படையாக அறிப்பட்ட மிலிந்த மெரொகொடவின் மூலமாக ஆட்சியமைக்க முடியாமல் நலிந்து போய்கிடந்த ஐக்கிய தேசிய கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்தும் கூட அமெரிக்கா விரும்பிய விதமாக மகி;ந்த ராஜபக்ச வளைந்து கொடுக்கவில்லை அல்லது வளைந்து கொடுக்க முடியவில்லை.

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவியில் 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்பதும் தனது பதவிக்காலத்தின் பின்னர் தனது மூத்த புதல்வனை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதும் பண்டாரநாயக்கா குடும்பம் போல ராஜபக்ச குடும்பமும் இலங்கையின் நவீன வரலாற்றில் ஆதிக்கம் மிக்க குடும்பமாக மதிப்பு பெற வேண்டும் என்பதுவுமே முக்கியமானது.

இதனைக் கருத்தில் கொண்டே மகிந்த ராஜபக்ச தனது அரசியல் நகர்வுகளை தெளிவாக மேற்கொண்டு வருகின்றார்.

தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் ஆதரவளிக்கக் கூடிய சக்திகளாக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகியவற்றையே மகிந்த ராஜபக்ச நம்புகின்றார்.

இதனால் எதிர்காலத்திலும் இந்த கட்சிகளுக்கு விரோதமாக அவர் நடந்து கொள்ளப் போவதில்லை இந்த உண்மை அமெரிக்காவிற்கு கொஞ்சம் தாமதமாகவே புலனாகியுள்ளது.

தற்போது மகிந்தவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்ச்சிகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அண்மைய ஜோன் ஹோல்சின் இலங்கை விஜயம் மனித உரிமை கண்காணிப்பக அறிக்கை என்பவை வெறும் முன்னோடிகள் தான் முக்கிய நகர்வுகள் விரைவில் நடந்தேறும் என்பதும் அது இலங்கை அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக அனைத்துலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தும் தன்மை கொண்டதாகவே இருக்கும் என்பதும் ஊகிக்கத் தேவையற்ற உண்மைகள்.

இதில் அதிர்ச்சியூட்டும் ஒருசில விடயங்கள் வெளிவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அமெரிக்க இராஜதந்திரங்களைக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தறிபவர்கள் இதனை இலகுவாக ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

அந்த விடயம் அமெரிக்க பிராஜவுரிமை பெற்றவர்களான மகிந்த ராஜபக்சவின் இரு சகோதரர்களையும் அமெரிக்கா தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது என்பது தான்.

இதனை உறுதிப்படுத்த பல காரணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் நோக்குவது இந்த ஆய்விற்கு போதுமானது.

முதலில் பசில் ராஜபக்ச இலங்கை தொழிலாளர் காங்கிரசை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றும் விதமாக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

மிகச் சிறிய விடயம் ஒன்று பற்றி பேசுவதற்கு சென்ற மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களை மிகக் கேவலாமக அவமதித்து அதன் மூலம் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலையை பசில் ராஜபக்ச ஏற்படுத்தியிருந்தார்.

இது பசில் ராஜபக்சவிற்கும் அரசின் பங்காளிகளுக்குமிடையிலான முதலும் முடிவுமான பிணக்கு அல்ல இது போல் பல சம்பவங்கள் பல கட்சிகளுக்கும் நடந்துள்ள நடக்கவும் போகின்றன. ஆனால் அரசியல் இலாபம் கருதி அவை வெளிவருவதில்லை.

ஏற்கனவே பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் கட்சிகளுடன் முரண்பட்டு அந்த கட்சிகளின் ஆதரவை நீக்க முயற்சிப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான அவருடைய மூத்த புதல்வாரன நாமல் ராஜபக்சவால் அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

கொழும்பு சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவனான நாமல் ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேத்தலில் தனது காடையர் கும்பலுடன் சென்று தங்காலை பகுதியில் சில வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு விளைவித்தமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனது 19 வயதிலேயே தேர்தல் அரசியல் வாதிக்குரிய ஆளணி பலத்துடன் தாதாவாக வலம் வந்த நாமலின் ஒரே குறிக்கோள் மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடையும் போது இலங்கையின் இளம் ஜனாதிபதியாக தான் பதவியேற்ற வேண்டும் என்பதுவே.

இந்த குறிக்கோளுக்கு குறுக்கே வந்த பசிலை அலரிமாளிகையில் இருந்து மட்டுமன்றி நாட்டில் இருந்தே சில காலம் துரத்தியடித்திருந்தார் நாமல் ராஜபக்ச.

எனினும் குடும்ப உறுப்பினர்களின் தலையீடுகள் சமரசங்களை அடுத்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச அமெரிக்க விசுவாசம் மற்றும் நாமலின் அரசியல் அபிலாசைகளை தகர்க்கும் நோக்கில் மேற்கொண்ட ஒரு முயற்சியே தொழிலாளர் காங்கிரஸ் மீதான பாய்ச்சல் என்று சொல்லப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க இலங்கைக்கு அனைத்துலக அரங்கில் அபகீர்த்தியையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி வரும் ஆட்கடத்தல் சம்பவங்களின் பின்னணியும் அதிர்ச்சிகரமாகவே இருக்கின்றது.

ஆட் கடத்தல்களின் சூத்திரதாரி என அனைத்து தரப்பினராலும் சுட்டுவிரல் நீட்டி குற்றம் சாட்டப்பட்டு வரும் கோட்டபாய ராஜபக்சவும் அமெரிக்க பிரஜை தான்.

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் பல முனை அழுத்தங்களின் ஒரு வடிவமாக கோட்டபாய தலைமையிலான ஆட்கடத்தல்கள் நோக்கப்படுவதும் தவிர்க்க முடியாதது தான்.

ஆக மொத்தத்தில் தனது விருப்பங்களுக்கு அடிபணிய மறுத்த மகிந்த ராஜபக்சவை அடிபணிய வைக்க அவருடைய சகோதரர்களையே அமெரிக்கா தந்திரமாக கையாண்டுள்ளது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கம் பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிறுபாண்மை கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மாற்று குழு ஆகியவற்றோடு சுதந்திர கட்சியின் கணிசமான பகுதியினரும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கென பரிமாறப்பட்டுள்ள அல்லது பரிமாறப்படவுள்ள பெரும் தொகை பணம் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான செலவீனமாக காட்டப்படும்.

ஆக மொத்தத்தில் அமெரிக்கா விரும்பும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் விரைவில் தோற்றம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இன்னும் 4 வருடங்கள் பதவியி;ல் தொடரவுள்ளதால் அமெரி;க்காவின் ஆசைக்கனவுகள் நிறைவேறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஒன்றை உருவாக்க அமெரிக்கா எவ்வளவு பணத்தை செலவிடவுள்ளதோ அதை விட அதிகமாக செலவிட்டு அமெரிக்காவிற்கு எதிரான அரசாங்கத்தை உருவாக்க சீனாவும் தயாராகவே உள்ளது.

கடந்த முறை சீனாவின் ஒத்துழைப்புடன் 39 ஆசனங்களை கைப்பற்றிய ஜே.வி.பி இம்முறை தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாகவே மாறும் நிலை காணப்படுகின்றது.

ஆக மொத்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக மோதல் ஒன்றிற்கு தயாராகிவிட்டன.

களமுனை : இலங்கை
காலம் : விரைவில் அறிவிக்கப்படும்

அப்ப எங்கட நிலை…

போராடினால் தான் வாழ்க்கை என்றாகிப் போன நிலையில் எமக்கான விடுதலையை ஒன்றுபட்டு போரடி அடைவதே எமக்கு முன்னுள்ள ஒரே தீர்வு.

ஐநா வோ, அமெரிக்காவோ, இந்தியாவோ எமக்காக எதையும் செய்யப்போவதுமில்லை பேசப்போவதுமில்லை. ஆகவே எமது வாழ்க்கைக்காக நாம் போராடியே ஆகவேண்டும் என்பதே எதிர்காலம் சுட்டி நிற்கின்றது.
நன்றி>பதிவு.

No comments: