Monday, August 13, 2007

மூதூர் அரபாத் நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு!!!

திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பிரதேச கிராம அலுவலர் தெரிவித்தார்.

அரபா நகர மக்களைச் சந்திக்க வருமாறு கடந்த வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்த சிறீலங்காப் படையினர், மறுநாள் காலை அரபா நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

அரபா நகர மக்கள் வெளியேற்றப்பட்ட தகவலை திருகோணமலை பிரதேச செயலாளர் கீத்சிறி தயானந்த, சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ஆகியோரும், மூதூர் காவல்துறையினரும் மறுத்துள்ளனர்.

தமிழ் மக்களை தொடர்ச்சியான இடப்பெயர்வு அவலத்திற்குள் தள்ளிவரும் சிறீலங்கா அரசு, தற்பொழுது முஸ்லீம் மக்களையும் குறிவைத்திருப்பதாக, சிறீலங்காவின் பிரபல முஸ்லீம் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்திருந்த நிலையில், மீள் குடியேற்றத்திற்கு என பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள், மீளக்குடியேற்றப்படாது தொடர்ந்தும் கிளிவெட்டியில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

No comments: