Saturday, December 29, 2007

டோராப் படகுகளுக்கு இணையானவை விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகள்: "லக்பிம"

கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்த அதிவேக தாக்குதல் படகுகள் 23 மி.மீ. பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், கட்டளைப் படகாகவும் செயற்பட்டு வருவதுண்டு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது.
"லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

கடந்த புதன்கிழமை காலை 8:00 மணியளவில் பி-413 இலக்கமுடைய டோரா அதிவேக தாக்குதல் படகு, கடற்புலிகளின் படகுத் தொகுதியை நெடுந்தீவுக்கு தென்மேற்கு கடற்பகுதியில் அவதானித்தது. அந்தத் தொகுதியில் 16 கடற்புலிப் படகுகள் இருந்தன.

டோராப் படகுகள் தமது படகுகளை அண்மிப்பதை தவிர்ப்பதற்காக கடற்புலிகளின் படகுகள் கடற்கரையை அண்மித்தே காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடற்படையின் வடபிராந்திய கட்டளைப்பீடம் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டது.

மேலதிக டோராத் தாக்குதல் படகுகள் அனுப்பப்படும் வரையிலும் கடற்புலிகளின் படகுகளை கண்காணிக்குமாறு பி-413 டோராவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலதிகமாக அனுப்பப்பட்ட படகுகளுடன் 12 டோராப் படகுகள் கடற்புலிகளுடன் மோதுவதற்கு தயாராகின. கடுமையான சமர் ஆரம்பமாகியது. அந்த சமரின் முன்னணியில் பி-413 படகே இருந்தது.

எனினும் டோராக்களின் படகுத் தொகுதியை ஊடறுத்துச் சென்ற கரும்புலிப் படகு ஒன்று பி-413 டோராவை நோக்கிச் சென்றது. ஆனால் அது சற்று முன்னதாகவே வெடித்து விட்டது. அந்த வெடிப்பதிர்வினால் டோராப் படகு செயலிழந்தது. அதேவேளை இரண்டாவது கரும்புலிப் படகு வேகமாக வந்து மீண்டும் ஒரு தடைவ மோதி வெடித்தது. அதன் பின்னர் பி-413 டோராப் படகு வெடித்துச் சிதறியது.

இதன் போது அந்தப் படகின் கட்டளைத் தளபதி லெப். கொமாண்டார் லலித் எக்கநாயக்கவும், 11 கடற்படையினரும் கொல்லப்பட்டு விட்டனர். கட்டளைத் தளபதியின் சடலமும், கடந்த வெள்ளிக்கிழமை மற்றுமொரு கடற்படை சிப்பாயின் சடலமும் மீட்கப்பட்டன.

எனினும் இரு கடற்படையினரை விடுதலைப் புலிகள் கைது செய்துள்ளதாக கடற்படையினரின் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தினருடனும் எந்தத் தரப்பும் தொடர்பு கொள்ளவில்லை.

இதனிடையே கடற்படையினரின் தேடுதல்களின் போது இரு கடற்படையினர் மீட்கப்பட்டனர். இந்த கடும் சமரின் போது இஸ்ரேலிய தயாரிப்பான மற்றுமொரு டோராப் படகும் சேதமடைந்தது. அது பின்னர் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கட்டி இழுத்துச் செல்லப்பட்டது.

பொதுவாக கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்தப் படகுகளின் கடும் சமர்களுக்கு மத்தியில் உயர்வேகம் கொண்ட கரும்புலிப்படகுகள் இலகுவாக கடற்படையினரின் படகை அண்மித்து விடும்.

கரும்புலிகளின் படகுகள் 200 குதிரைவலு வேகமுடைய இயந்திரங்களை உடையவை. எனவே அவை மிக உயர் வேகமுடையதுடன், அலைகளுக்கு மத்தியில் வெளியில் தெரிவதும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். எனவே கடற்படையினர் அவற்றை கண்டறிந்து அழிப்பது கடினமானது.

தற்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் தற்கொலைப் படகுகள் ஸ்ரெல்த் வகையைச் சேர்ந்தவை. அவற்றை ராடார் திரைகளில் கண்டறிவது கடினமானது. அவற்றின் வெடிக்கும் முனை முன்புறம் உள்ளதனால் கடற்படைப் படகின் அடிப்பகுதியில் மோதியே அவை வெடிப்பதுண்டு.

விடுதலைப் புலிகளின் முராஜ் அதிவேக தாக்குதல் படகில் 23 மி.மீ. பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதுவே கட்டளைப் படகாக செயற்படுவதுண்டு.

இந்த சமரில் வான் படையினரின் இரு எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும், கிபீர் தாக்குதல் வானூர்திகளும் இணைந்து கொண்டன. கடற்படையினரின் அதிவேக தாக்குதல் டோரா படகானது (பி-413) அலுமினியத்திலான அடிப்பகுதியையும், அதிக வேகத்தையும் கொண்ட தாக்குதல் படகாகும்.

கடந்த 13 வருடங்களில் கொழும்பு டொக்கியாட் நிறுவனம் இத்தகைய 48 படகுகளை கட்டியிருந்தன. அவை சிறிலங்கா மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகைப் படகுகள் கரையோர சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணிகளுக்கு எனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தாக்குதல் படகாகும். இது 45 தொடக்கம் 53 நொட்ஸ் வேகமுடையது. 24 மீற்றர் நிளமான இந்த படகு 1630 கி.வற்ஸ் கொண்ட இரட்டை நீரூந்து விசை இயந்திரத்தைக் கொண்டது. இது முன்னைய டோராப் படகுகளை விட நவீனமானது. 12 கடற்படையினர் பணியாற்றும் இடவசதியும் அதில் உண்டு.

தற்போது கடற்படையினரிடம் அதிவேக தாக்குதல் படகு-III (UFAC III and IV), அதிவேக தாக்குதல் படகு-IV என்பன உண்டு. அவற்றில் 23 மி.மீ. பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது சமரின் போது அதிகூடிய வேகமான 53 நொட்ஸ் வேகத்தை எடுக்கக் கூடியதுடன் அதன் பல செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படகு சமரில் சேதமடைந்தால் அவசரமாக கட்டி இழுத்துச் செல்லும் வசதிகளையும் கொண்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Friday, December 28, 2007

அமைச்சருக்கு விழுந்த தர்ம அடி!!!

Thursday, December 27, 2007

சிறீலங்கா அமைச்சரின் மண்டை உடைந்தது, அமைச்சர் நைய்ய புடைக்கப்பட்டார்.





ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம் .

சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்திப்பிரிவு அலுவலகத்திற்குள் இன்று வியாழக்கிழமை காலை அத்துமீறிப் பிரவேசித்த அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரை கடுமையாகத் தாக்கியதையடுத்து அங்கே பெரும் களேபரம் வெடித்தது.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற அமைச்சர் மேர்வின் சில்வா பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியவாறு ரூபவாஹினி கூட்டுத்தாபன நிறுவனத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த மேர்வின் சில்வாவும், அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அது மட்டுமன்றி மேர்வின் சில்வாவின் குழுவினர் செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர். எனினும் சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்த ரி.எம்.ஜி சந்திரசேனவை மீண்டும் கடுமையாகத் தாக்கி ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர்.

மேர்வின் சில்வாவுடன் சேர்த்து குடு குழுவைச் சேர்ந்த பலரும் அங்கு முடக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகியும் இருந்தனர்.

மேர்வின் சில்வாவின் பகிரங்க மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவரை விடுவிக்கப் போவதில்லை என்று பணியாளர்கள் உறுதியாக நின்றதால் அங்கே பதற்றமும் இழுபறியும் அதிகரித்தது.

சுமார் மூன்று மணி நேரமாக அங்கு பெரும் களேபர நிலை இருந்ததால் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேர்வினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சித்த போதும் பணியாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் மேர்வின் சில்வாவை பலவந்தமாக பணியாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காவல்துறையினர் அவரது வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவினர் மீதும் அங்கிருந்த பணியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் மேர்வின் சில்வா தலையில் காயமடைந்தார். அவர் மீது சிவப்பு நிறத் திரவத்தாலும் பணியாளர்கள் வீசினர். அவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. காவல்துறையினர் அங்கிருந்த மேர்வின் சில்வாவை அழைத்துச் சென்ற பிறகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட களேபரம் முடிவுக்கு வந்தது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேர்வின் சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஊடக நிறுவனங்களும் மேர்வினின் இந்நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் அவருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.

அரசாங்கம் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

மேர்வின் சில்வா இதற்கு முதல் மேலும் பல ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தியிருப்பதாக சுதந்திர தேசிய ஊடக பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

படங்கள்: ஏ.எஃப்.பி.
நன்றி>புதினம்.

Monday, December 24, 2007

காலக்கணிப்பு.

19.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற காலக்கணிப்பு







Sunday, December 23, 2007

தமிழீழ கடற்படை.

விடுதலை புலிகளுக்கு இரண்டு கோடி ரூபா கொடுத்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை!!!

சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.
"லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:

அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்களை இந்த தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் சில ஆயுதங்களை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதில்லை.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆர்பிஜி உந்துகணை செலுத்திகளில் அமெரிக்கா தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் (EOtech HOLOsight holographic Target Acquisition Systems) சாதனங்கள் பெருத்தப்பட்டிருந்தன.

இந்த சாதனங்கள் தாக்குதல் இலக்குகளை விரைவாக கண்டறியக் கூடியதுடன் எந்த வெளிச்சத்திலும் இலக்குகளை கண்டறியக்கூடியது. மேலும் இந்த சாதனமானது எந்த கோணத்திலும் இலக்கின் மையத்தை குறிவைக்கக்கூடியதுடன், கடும் சமரின் போதும் மாற்றமடையாதது.

அவர்கள் பயன்படுத்திய சில ரைப்-69 (Type 69-1) ரக உந்துகணை செலுத்திகள் சீனத தயாரிப்பான இரவு பார்வை சாதனங்களையும் கொண்டதாக அமைந்திருந்தன.

இந்த சாதனங்கள் புறஊதா கதிர்களின் தொழிற்பாடுடையவை. மற்றுமொரு விடுதலைப்புலி உறுப்பினர் சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தியை பயன்படுத்தியிருந்தார்.

பெரும்பாலான ஆயுதங்களில் அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தி சீனத் தயாரிப்பாகும்.

இவை தவிர ரைப்-69-1 சீனத் தயாரிப்பு ஆர்பிஜி-7, ஆர்பிஜி ரைப்-61, ரெக்கரேவ் ஒலிஅமுக்கி (Type 85 silenced with Tokarev) பொருத்தப்பட்ட ரைப்-85 தாக்குதல் துப்பாக்கி, ரைப்-82 உப இயந்திர துப்பாக்கி, கியூபி இசற்-97 ரக உப இயந்திர துப்பாக்கி போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலனவை சீனாவின் நொறிங்கோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனமே பர்மிய அரசிற்கான பிரதான ஆயுத விநியோகிப்பாளருமாகும்.

விடுதலைப் புலிகளின் இந்த நவீன ஆயுதப் பாவனை படை அதிகாரிகளின் மத்தியில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கப் படை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த சாதனங்களை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பீரங்கியை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதை தளத்தில் இருந்த படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் அதனை இயக்குவதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை. எனவே எல்-70 வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்த விடுதலைப் புலிகள் எவ்வாறு கற்றுக்கொண்டனர் என்பது தொடர்பான பலமான கேள்விகள் படை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Friday, December 21, 2007

உச்ச நீதிமன்ற தீப்பை அவமதிக்கும் ஜெயலலிதா!!!

புலிகளை ஆதரித்து பேசுவது குற்றமல்ல என்னும் நீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா அவமதிக்கிறார்.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்திலிருந்து உள்ளூர் நீதிமன்றம் வரை தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்னரும் அந்தத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்கிறார்.


இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் அவரது அறியாமையையே காட்டுகின்றது. இவ்வாறு பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை ஆதரிப்பதில் தவறில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். பொடாச் சட்டத்தின் கீழ் என்னையும் மற்றும் தோழர்களையும் ஜெயலலிதா அரசு கைது செய்தது எங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய போது அதற்கு எதிராக அப்போதைய அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்து எங்களுக்கு அளிக்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு அரசியல் தலைவர் அரசியல் கருத்துக்களை கூட அவர் கூறக் கூடாது என்கிறீர்கள். பொடாச் சட்டத்தைப் பயன்படுத்தித் தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள்.

இதுபோல் பொடாச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதால்தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். பொடாச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் எங்களது விசாரணை தொடரும் என எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பாராளுமன்றமும்பொடாச் சட்டத்தைத்திரும்பப் பெற்றது. விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவதோ எழுதுவதோ குற்றமல்ல என பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்து எங்கள் மீதான பொடா வழக்கை திரும்பப்பெறுமாறு ஆணையிட்டது.

மேலும் ஜெயலலிதா ஆட்சியில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும் எழுதியதாகவும் என்மீது திண்டுக்கல், கொடைக்கானல், திருச்செந்தூர், ஆலந்தூர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டேன். உச்ச நீதிமன்றத்திலிருந்து உள்ளூர் நீதிமன்றம்வரை விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல எனத் தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்புகளை மதிக்க மறுக்கும் ஜெயலலிதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதலமைச்சராக இருந்த ஒருவர் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமலும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் புரிந்து கொள்ளாமலும் தொடர்ந்து பேசி வருவது அறியாமையின் வெளிப்பாடாகும் என்றார்.
நன்றி>தமிழ்வின்

Tuesday, December 18, 2007

தமிழர்களுக்கான விடுதலை வெகுவிரைவில் கிடைக்கும்: டியட்றி மக்கென்னல்!


தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருவதால் அவர்களுக்கான விடுதலை விரைவில் கிடைக்கும் என்று அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளரான டியட்றி மக்கென்னல் அம்மையார் தெரிவித்துள்ளார்.

டியட்றி மக்கென்னல், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு மனித உரிமைகள் ஆர்வலர்.
உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் அவர், பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்கள் மூலம் அப்பணியை ஆற்றி வருகின்றார்.
மனித உரிமைகளுக்கான அனைத்துலகக் கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைக்கான அனைத்துலக நிலையம் ஆகியவற்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் அவர் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் அனைத்துலக வேலைத்திட்டப் பணிப்பாளராகவும் உள்ளார்.

அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த அவர், அங்கு வாரமிருமுறை வெளிவரும் "நிலவரம்" வார ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்:

கேள்வி: நீங்கள் ஐரிஷ் இனத்தவர். இருந்தும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கின்றீர்கள். உங்களை இதற்குத் தூண்டியது எது?

பதில்: நான் ஐரிஷ் இனத்தவர் எனப்படுவது தவறு. எனது தந்தையார் மாத்திரமே அயர்லாந்து நாட்டவர்.

1980-களின் பிற்பகுதியில், நான் ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் அகதிகளைச் சந்தித்தேன். அவர்களுடைய கதைகளை, அனுபவங்களைக் கேட்டறிந்தேன். அதற்கு உடாக தமிழர்களுடைய வரலாறு, நடப்பு விவகாரங்கள என அதிக விடயங்களை அறிய முடிந்தது.

சந்திரிகா காலப் பகுதியில் மனித உரிமைகள் மீறல் நிலைமை மிக மோசமாக இருந்தது. தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் பங்குகொண்ட அனுபவம் காரணமாக, தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் அதற்கும் என்னால் பாரிய வித்தியாசத்தை அவதானிக்க முடியவில்லை.
இதனால் நானும் என்போன்ற பலரும் தமிழ் மக்களுக்காக ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க விரும்பினோம்.
கேள்வி: இது உங்களிந் ஈடுபாட்டின் ஆரம்பம். நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்?

பதில்: 1989 இல் சிறிலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியும் வாய்ப்பு முதன் முதலில் எனக்குக் கிட்டியது. ஆனால், 1994 இலேயே எனக்கு தமிழர் விவகாரத்தில் ஆழமாக ஈடுபட முடிந்தது.

1989-களில் சிறிலங்காவின் தென் பிராந்தியத்தில் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாக இருந்தது. சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அப்போது அறிந்து கொள்ள முடிந்தது. ஆயிரக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதேவேளை வடக்கின் நிலைமையையும் அவதானிக்க முடிந்தது.

என்றாலும் 1995 ஆம் ஆண்டிலேயே நான் முதன்முறையாக வடக்கு-கிழக்கிற்குச் சென்றேன். நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு முன்னரேயே சென்றுள்ளேன்.

1995 ஆம் ஆண்டு, போராட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, யாழ்ப்பாணம் செல்ல விரும்பினேன். போராட்டத்துக்கான காரணத்தை நியாயத்தை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள நான் விரும்பினேன். கொழும்பில் நின்று கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வடபகுதிக்குச் செல்ல முயற்சித்தேன். ஆனாலும், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

என்றாலும் 95 ஓகஸ்டில் மட்டக்களப்பு செல்லும் வாய்ப்புக்கிட்டியது. அப்போது, மைலந்தனைப் படுகொலையில் உயிர்தப்பியவர்களைச் சந்திக்க முடிந்தது. வாள் வெட்டுக்கு இலக்கான பலரோடு உரையாட முடிந்தது. அவர்களின் மனோ ரீதியான காயங்களை ஆற்ற முயற்சி செய்தேன். அவர்கள் மிகவும் வறுமையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருந்தார்கள். அவர்களுக்கு நான் உதவி செய்ய விரும்பினேன்.

மீண்டும் அந்த மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானதன் பின்னர் 2003 ஆம் ஆண்டிலேயே கிட்டியது. அப்போதும் கூட அவர்களின் நிலையில் பெரிதும் மாற்றமில்லை.

1995 முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழர் மனித உரிமைகள் மையத்தில் இணைந்து பணிபுரியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இக்காலப் பகுதியில் ஜெனீவாவில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பரப்புரைப் பணியில், தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தலைமையிலான குழுவில் இணைந்து செயற்பட்டேன்.
அதன் மூலம் எனக்கு பரவலான பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களிடையே பணிபுரிய முடிந்தது.

ஓவ்வொரு முறையும் தமிழ் மக்களைச் சந்திக்கும் போது அவர்களின் வரலாற்றைப் பற்றியும், துயரங்களைப் பற்றியும், திடசித்தத்தைப் பற்றியும் மென்மேலும் அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு நியாயம் கிட்டவேண்டும். அவர்களின் குரல் உலக அரங்கில் கவனத்துக்கு எடுக்கப்பட வேண்டும் என விரும்பினேன்.

இதனால், அனைத்துலக சமூகத்தில் தமிழர்களின் நியாயத்தை எடுத்துரைப்போரில் ஒருவராக நானும் இருக்க வேண்டும் என விரும்பினேன். தமிழர் மனித உரிமைகள் மையம் ஏனைய நிறுவனங்களோடு இணைந்து பல பணிகளைச் செய்து வருகின்றது.

கேள்வி: ஈழப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்தவரை, மனித உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம் குறிப்பிடுவதைப் போன்று மனித உரிமைகள் தனிநபருக்கானவை. பாதூக்கப்பட வேண்டியவை. அனைத்துலக ரீதியானவை.

உலகின் ஏனைய விடுதலைப் போராட்டங்களைக் கவனத்தில் எடுத்துப் பார்க்கும்போது நீதி நிலைநாட்டப்பட நீண்டகாலம் எடுத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் தேசியத்தை அங்கீகரிப்பதன் ஊடாக தேசங்கள் பிறந்துள்ளன. கிழக்குத் தீமோர் இதற்கு நல்லதொரு உதாரணம்.

கிழக்குத் தீமோர் மக்களுக்காக இங்கிலாந்து மக்கள் போராடிய போது அவர்களுக்கு விடுதலை கிட்ட நீண்ட நாள் சென்றது. ஆனால் அந்த மக்கள் சொந்தமாகப் போராடிய போது அவர்களால் தமது சொந்தச் சுதந்திரத்தைப் பெறமுடிந்தது.

தமிழர்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு சுதந்திரம் என்றோவொரு நாள் கிடைத்தே தீரும். அது வெகு விரைவில் கிடைக்கும் என நான் நம்புகின்றேன். ஏனெனில் தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருகின்றனர்.

கேள்வி: தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களாக உள்ள போதிலும் ஏன் அனைத்துலக சமூகம் இன்னமும் சிறிலங்கா அரசின் பக்கம் உள்ளது? அல்லது சிறிலங்கா அரசின் பக்கமே அவை உள்ளதைப் போல் தெரிகின்றது?

பதில்: அனைத்துலகம், சிறிலங்காவின் பக்கம் உள்ளதுபோல் தெரிகின்றது என நீங்கள் கூறியதே சரி. ஏனெனில், தமிழ் மக்களின் விடயத்தைக் கேட்கும், உண்மையைப் புரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்னவெனில், ஐ.நா. சபை போன்ற அனைத்துலக அரங்குகளில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் என்றொரு வரையறை கவனத்தில் எடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எட்டப்படுகின்றன.

சிறிலங்காவைப் பொறுத்தவரை, அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையிலேயே பல நாடுகள் ஆதரவு வழங்குகின்றன. உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வெளியாள் ஒருவர் மானபங்கப்படுத்த முனைகையில் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருமே அவரைக் காப்பாற்ற விளைவர்.

ஐ.நா.வைப் பொறுத்தவரை அது ஒரு நாடுகளின் கழகம். ஆனாலும், அரசியல் யதார்த்தம் என்பது மிகவும் சிக்கலானது. இந்த நாடுகளில் மனிதர்களுக்கு உரிமைகள் உள்ளமையை ஏற்றுக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்ல நாடுகளுக்கும் கூட சில சிறப்புரிமைகள் அடிப்படை உரிமைகள் உள்ளன.

நீங்கள் ஆரம்பத்தில் பல நாடுகள் சிறிலங்காவின் பக்கம் நிற்பது போல் தெரிகின்றது எனக் கூறியமை சரியே. இன்று பலர் உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு உதவி வருகின்றார்கள். அது தவிர இப்போது ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் சில கூட தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. தமிழர்களின் மனித உரிமைகளை மதித்து நடக்குமாறு சிறிலங்காவை வேண்டுகின்றன.

உதாரணமாக கடந்த மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் பல நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும் என விரும்பின. சிறிலங்காவில் ஐ.நா. நிரந்தரக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என அவை கோரின.

நிலைமை திருப்திகரமானதாக இல்லாவிட்டாலும், ஒரு மாற்றம் அவதானிக்கப்படுகின்றது.

மறுபுறம், தமிழ் மக்கள் தமக்கெதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக அரங்கில் எடுத்துரைக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது.

கேள்வி: லூயிஸ் ஆபரின் அண்மைய பயணம் இது விடயத்தில் செல்வாக்குச் செலுத்தும் என நினைக்கிறீர்களா?

பதில்: ஏதாவது நடக்கும் என நாங்கள் எதிர்பார்ப்போம். உண்மையில் அவரின் சிறிலங்கா பயணம் முக்கியமானது. அவர் தனது அறிக்கையில் தான் கிளிநொச்சிக்குச் செல்ல விரும்பிய போதிலும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறினார். இது போன்றே ஆழிப்பேரலையின் பின் கோபி அனான் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களுக்குச் செல்ல விரும்பிய போதிலும் அனுமதிக்கப்படவில்லை.

திருமதி ஆர்பரும் அதனையே கூறுகிறார். இது உலகம் முழுதும் உள்ள மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அவருடைய பயணத்தின் விளைவுகளை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அவரின் யாழ். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படாத மக்களுடன் கதவுக்கூடாக கைகளைப் பிணைத்தவாறு அவர் நிற்பதைக் காணமுடிந்தது. அந்த வேளையில் அவரின் மனத்துயரத்தை முகத்தில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அவரின் பயணம் என்ன விளைவைத் தரப் போகின்றது என்பதைப் பார்த்திருக்கின்றோம். அனைத்துலக சமூகத்தின் ஒவ்வொரு செயற்பாடும் அவருக்குத் தைரியத்தைத் தரும்.

கேள்வி: இலங்கைத் தீவிற்குச் சென்று தமிழ் மக்களைச் சந்தித்து விட்டு வந்தவர் நீங்கள். அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: அது ஒரு அற்புதமான அனுபவம். வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களை நேரில் சந்தித்தமையை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகின்றேன். குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் வாழும் மக்களைச் சநதித்ததை மறக்க முடியாது. வன்னியில் "செஞ்சோலை" சிறுவர் இல்லம், "காந்தரூபன்" அறிவுச்சோலை, "செந்தளிர்" என அப்பகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் செல்ல முடிந்தது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்கள், பெண்கள் ஆகியோரையும் சந்தித்தேன். சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றும் பெண்களைச் சந்தித்த போது தமிழ்ப் பெண்கள் எத்துணை மனவுறுதி உடையவர்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. அவர்களின் மனவுறுதி முறியடிக்கப்படக் கூடியதல்ல. எத்தனை இழப்புக்களைச் சந்தித்த போதிலும் எத்தனை தரம் இடம்பெயர்ந்த போதிலும் எத்தனை சவால்களை எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துவண்டு விடவில்லை.

வன்னியில் மக்கள் எவ்வளவு திடவுறுதியுடன் உள்ளார்களோ அதற்குச் சற்றும் சளைத்துவிடாத திடவுறுதியுடனேயே யாழ். குடாநாட்டில் வசிக்கும் மக்களும் உள்ளனர். இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அவர்கள் உள்ள போதிலும் அவர்கள் மனம் தளரவில்லை. அவர்களின் மனோதிடம் பாராட்டத்தக்கது.

கேள்வி: அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் பரப்புரை முயற்சிகள் போதாது என ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது எவ்வாறு மேலும் காத்திரமாக முன்னெடுக்கப்பட முடியும்?

பதில்: ஒருவிதத்தில் பார்த்தால் தமிழ் மக்களின் பரப்புரை போதாது எனக் கூற முடியாது. ஏனெனில், பல மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. பல பாரிய அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருகின்றன. பல நாடுகள் கூட இந்த விவகாரத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளன. பல பிரமுகர்கள், ஐ.நா. சிறப்புத் தூதுவர்கள் இதைப் பற்றி தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களால் நடாத்தப்படும் மனித உரிமை அமைப்புக்கள் பலம் பொருந்தியவையாக உள்ளன. அவைகள் பல நல்ல மாற்றங்களுக்கு வழி சமைத்துள்ளன.

நாம் எப்போதும் அதிகமாக நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால் பரப்புரை முயற்சிகள் போதாதது போன்று எமக்குத் தென்படலாம். இந்த வகை வேலைத்திட்டத்துக்கு அர்ப்பணிப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கு நோக்கிய வேலைத்திட்டம், நன்னடத்தை, தெளிவு என்பவை தேவைப்படுகின்றது.

கேள்வி: மத்தியப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தேவை என்கிறீர்களா?

பதில்: நான் தமிழர் இல்லை. ஆனாலும் நான் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு முழு மனதான ஆதரவை வழங்குகின்றேன். ஏனெனில் நான் அதனைப் புரிந்து கொண்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் என நான் கூறுவது பொருத்தமாயிராது. என்னால் முடிந்த வேலையை என்னுடைய கொள்ளளவிற்கு ஏற்ப, எனக்குப் பணிக்கப்பட்ட அளவில் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ப முடிந்தளவு வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், சிறப்பாகப் பணியாற்றக்கூடிய ஒரு சிலர் அப்பணியை ஆற்றாமல் இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: உண்மையில் ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்ய முடியும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் மனித உரிமைகள் விடயத்தில் அக்கறை உள்ளது. நாம் ஒவ்வொருவரும் மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்களே.

நான் நினைக்கின்றேன். லூயிஸ் ஆர்பரின் பயணத்தின் போது சிறிலங்காவில் வாழும் ஒவ்வோரு தமிழரும் தமது உணர்வை வெளிப்படுத்த முனைந்தார்கள். வெளிப்படுத்தினார்கள். இதற்குச் சமாந்தரமாக புலம்பெயர் தமிழர்களும் ஏதொவொரு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

பல நாடுகளிலே நாடாளுமன்ற விவாதங்கள் நடந்ததை, பல பிரமுகர்கள் சிறிலங்காவுக்கு பயணம் செய்ததை நாம் கண்டுள்ளோம். புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் பிரதிநிதிகளிடம் தமிழர் துயரத்தை எடுத்துரைத்ததன் விளைவே இது. அவர்கள் நிலைமைகளை விளக்கியதுடன் நேரில் சென்று பார்வையிடுமாறு கேட்டும் வருகின்றனர்.

உண்மையிலே துயருறும் மக்களுடன் ஆத்மாத்ம ரீதியில் நாம் பிணைக்கப்பட்டிருப்போமானால் நாம் நிச்சயமாக ஏதாவது செய்தே ஆவோம். ஏனெனில் அவர்களின் துயரத்தில் இருந்து தனித்து வெளியே வந்து எம்மால் இருக்க முடியாது. அவர்களின் போராட்டத்தில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது. ஏனெனில் நாம் அவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளோம்.

கேள்வி: தமிழ் மக்கள் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு கருத்து தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இது வரவேற்கப்படக்கூடிய முடிவு. ஏனெனில் நிறவெறித் தென்னாபிரிக்காவிற்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தில் பெருவெற்றி கிட்டியது. அந்தப் போராட்டத்தில் நானும் பங்கு கொண்டிருந்தேன்

புறக்கணிப்பு மிகப் பெறுமதியான ஆயுதங்களுள் ஒன்று. அது வரவேற்கப்புடக்கூடியதே.

கேள்வி: இறுதியாக, புலம்பெயர் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: முதலாவது கூறவிரும்புவது "அச்சமில்லை".

எந்தவொரு விடயத்திலும் ஈடுபடும் மக்களைத் தடுத்துவிட எதிரி பாவிக்கும் ஆயுதம் அச்சமூட்டுதலே. எனவே அச்சமடையாதீர்கள். நிமிர்ந்து நில்லுங்கள். மற்றவரோடு உரையாடுங்கள். புதிய வழிவகைகளைக் கண்டறியுங்கள். தைரியமாய் இருங்கள். நாம் நடக்கும் பாதையில் எமக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கானோர் நடந்துள்ளனர் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

மேற்குலகில் வாழும் எமக்கு பல ஜனநாயக உரிமைகள் உள்ளன. எனவே நாம் அஞ்சத் தேவையில்லலை. நிங்கள் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உங்களால் முடிந்த அனைத்தையும் துயருறும் உங்கள் சகோதரர்களுக்காகச் செய்யுங்கள்.

இந்தச் செயற்பாடுகளின் போது உங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடியவர்களை உங்களால் கண்டறிய முடியும். அயலவர்கள், அரசியல் வாதிகள் எனப் பலரை நீங்கள் ஈர்க்க முடியும். நீங்கள் விடயத்தைச் சரியாகச் செய்வீர்களானால் உங்களுக்கு உதவப் பலர் முன்வருவர்.

பனிக்காலத்தில் மரக் கிளைகளில் பனித் துகள்கள் விழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இறுதியாக விழும் ஒரு சிறு துகளே மரக் கிளையை உடைத்து விடுகின்றது.

எனவே உங்களாலும் முடியும். அதற்கான வளம் உங்களிடம் எள்ளது. அது தவிர உங்களுக்கு ஒரு அற்புதமான தலைமைத்துவமும் கிடைத்துள்ளது என்றார் அவர்.
நன்றி>புதினம்.

பணியாளர் படுகொலை: அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!!!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறை கிளைத் தலைவர் சூரியகாந்தி தவராஜா சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறைறயினரால் படுகொலை செய்யப்பட்டதனை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலக செம்பிறைச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபயசிங்க இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்டப் பணியாளரான சூரியகாந்தி தவராஜா (வயது 43) அவரது வீட்டிலிருந்து கடந்த 14 ஆம் நாள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது சடலம் கடந்த 16 ஆம் நாள் கைதடியில் மீட்கப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளராக தவராஜா பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பருத்தித்துறைக் கிளையின் தலைவராக பணியாற்றி வந்தார்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது மிகச் சிறப்பாக செயற்பட்டமைக்காக தவராஜா மிகச்சிறந்த பணியாளர் விருதையும் வென்றிருந்தார்.

அவரது படுகொலை செய்தி அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு ஜூன் முதலாம் நாள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பணியாளர்கள் இருவர் பயிற்சிநெறியில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்தபோது கொழும்பு தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை மற்றுமொரு மிலேச்சத்தனமான செயல்.

மோதலில் ஈடுபடும் இருதரப்பும் மனிதநேய பணியாளர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் உடனடி விசாரணைகள் நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Sunday, December 16, 2007

இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்துவந்தோரை பொறுப்பேற்க வேண்டிய நிலை - மேத்தானந்த தேரோ.

நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார்.

பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:-

'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது.

மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண்டியிருந்தது.

அவர்களுக்கு உணவு, வாழ்விடம் வழங்கி பாராமரிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. உலகத்தில் இவ்வாறு செயற்பட்ட ஒரே நாடு இலங்கையே ஆகும். ஆம், நாம் அடிமைகளுக்கு வாழ்வு கொடுத்தோம்.

சிங்களவர் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதாக இச்சபையில் சிலர் கூறுகின்றனர். ஆனால், இது முற்றிலும் பொய்யானது. வெறுமனே இது ஜோடிக்கபட்டட கதையாகும். மாறி மாறி வந்த சிங்களத் தலைமைகளே தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொடுத்தார்கள்.

தமிழ் மக்கள் கூட்டாக கைது செய்யபடுவதாக இங்கு குற்றம் சாட்டப்பட்டது. இது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழர்களாக பயங்கரவாதிகளாக இருப்பதால் தான் இக் கைதுப் படலம் தொடர்கின்றது. அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராகவே செயற்படுகிறது.

இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான போரட்டம் எதுவுமே கிடையாது. சிங்கள, தமிழ் மக்களுக்கிடையேயும் எப் போராட்டமும் இல்லை. போராட்டம் நிலவுவதாக கூறுவதும் கட்டுக்கதை.

இவ்வாறான ஒரு போராட்டம் இருக்குமானால் இப்பாராளுமன்றத்தினுள் தமிழ் உறுப்பினர்கள் வரமுடியுமா? அல்லது இப்பாராளுமன்றித்தினுள் தமிழ் உத்தியோகத்தர்கள் கடமையாற்ற முடியுமா?'

நன்றி>தினக்குரல்.

சிறிலங்காவைத் தவிருங்கள்: ஐ.நா. தனது பணியாளர்களுக்கு எச்சரிக்கை!!!

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதியாக சிறிலங்கா மாற்றம் பெற்றுள்ளதனால் அதனைத் தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலகு எங்கும் உள்ள தனது 13,000 பணியாளர்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா.வின் அனைத்துலக பொதுச் சேவைகள் பாதுகாப்பு மற்றும் சுயாதீன பணியாளர் அமைப்பு அடுத்த வாரம் வெளியிடவுள்ள அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத அளவிற்கு மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மீதான அண்மைக்காலத் தாக்குதல்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பன ஐ.நா.வின் பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதனைப் பாதித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் அண்மைக்காலச் சம்பவங்களை நோக்கும் போது அது சுயாதீன மற்றும் அனைத்துலக பொதுச் சேவைகளின் நடைமுறைகளை மீறி வருவதாகவே தென்படுகின்றது. தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மீதான தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து வருவது ஐ.நா.வின் செயற்பாடுகளைப் பாதித்து வருகின்றது.

உதவி நிறுவன அமைப்புக்களுக்கும், பணியாளர்களுக்குமான இணைந்த செயற்பாடுகளின் அடிப்படை உரிமைகளும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தமது பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் மெதுவாகவே ஐ.நா.வின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதும் கவலை தருகின்றது.

ஐ.நா. சபை, அதன் நிதி மற்றும் திட்டமிடல் அமைப்புக்கள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை அரசு சுமத்தி வருகின்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அமைதியாக நடைபெற்ற பேரணியில் யுனிசெஃப் உறுப்பினர்கள் பங்குபற்றியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இரு பணியாளர்களின் படுகொலைகளை அனைத்துலக சமூகமும், எல்லா ஐ.நா. அமைப்புக்களும் கூட கண்டித்திருந்தன. ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பன் கீ மூனும் அதனைக் கண்டித்ததுடன், இது ஒரு மோசமான படுகொலை எனவும் சிறிலங்காவில் வாழும் மக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பாக தான் ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அனைத்துலக பொதுச் சேவையாளர்கள் என்ற தமது நிலைக்கு பாதிப்புக்கள் எற்படாதவாறு ஐ.நா.வின் பணியாளர்கள் நடுநிலை வகிப்பதுடன் நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியிருக்கவும் வேண்டும்.

எனினும் அமைதியான அந்தப் பேரணிக்கு அரசாங்கத்தின் இந்த பதில் நடவடிக்கை பொருத்தமற்றது.

ஐ.நா.வையும், அதன் பணியாளர்களையும் குறிவைத்து தாக்குவதனை விட்டுவிட்டு இந்த ஆண்டு கடத்திப் படுகொலை செய்யப்பட்ட இரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், 2006 ஆம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் நேரத்தைச் செலவிட வேண்டும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை நீதிக்கு முன்நிறுத்தப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் கீழ் பணியாற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் என்பவரும் இதே போன்றதொரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் கருத்து அரசாங்கத்திற்கு ஆத்திரத்தை எற்படுத்தியிருந்தது. அதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் "ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி, அவர் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கியுள்ளார்" என்று தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Friday, December 14, 2007

சிறீலங்கா சுருங்குகிறது!!!







Wednesday, December 12, 2007

உலக வரைபடத்தில் ஈழத்தை குறித்துக் காட்டியுள்ள "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை!!!

உலகு எங்கும் மிகவும் பிரபல்யம் பெற்ற "தி எக்கொனமிஸ்ற்" என்ற சஞ்சிகை முதற்தடவையாக தமிழீழத்தின் வரைபடத்தை உலக வரைபடத்தில் குறிப்பிட்டு வரைந்துள்ளது.
இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" என்ற வார ஏடு வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகையின் டிசம்பர் 6 ஆம் நாளுக்கான பதிப்பில் ஈழத்தை இறைமையுள்ள நாடாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் குறிப்பிட்டுள்ளது.


http://www.economist.com/displaystory.cfm?story_id=10251282

குறிப்பாக வரைபடத்தில் உள்ள ஏனைய இறைமையுள்ள நாடுகளைப் போன்று ஈழத்திற்கும் வர்ணம், அளவுகள், அமைப்புக்கள் கொடுத்து வரையப்பட்டுள்ளன.

முன்னர் அப்பகுதி "விடுதலைப் புலிகளால் உரிமை கோரப்படும் பகுதி" என தெரிவிக்கப்படுவது உண்டு.

குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் நடத்தக் கோருவது தொடர்பாகவே "இந்தியப் படுகொலைகளை குறிப்பிடவில்லை" என்ற தலைப்பில் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

இக் கட்டுரை அச்சஞ்சிகையின் 47 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இப்பக்கத்தில் தான் ஈழத்தின் வரைபடமும் வரையப்பட்டுள்ளது.

எனினும் 48 ஆம் பக்கத்தில் மற்றுமொரு பத்தியில் சிறிலங்கா தொடர்பாக எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Tuesday, December 11, 2007

புலிகளின், தமிழீழத்தை நோக்கிய அரசியல் அபிலாசை தவறானது என நாம் கூறமாட்டோம்--பிரித்தானிய தூதுவர்!!!


ஆயுதப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என, பிரித்தானியா கூறியுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற, டட்லி சேனநாயக்கா ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்க்கொற், சிறீலங்கா அரசாங்கத்தின் அரசியல் தீர்வு முயற்சிகள், மிதவாத தமிழ் சிந்தனையாளர்களை நோக்கியவையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே பேர்ச்சுவார்த்தைகளின் மீது தனது நம்பிக்கையீனத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழலில், தனியரசை தவிர வேறு எந்த தீர்வை அரசாங்கம் முன்வைத்தாலும், அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. ஐக்கிய சிறீலங்காவிற்குள், சனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக, தம்மை அவர்கள் முன்னிறுத்த முற்படுவது, சனநாயக விரோதமான நிலைப்பாடாகும். எவ்வாறாயினும், வன்முறைகளற்ற, சனநாயக முறைகளை அவர்கள் தழுவும் வரை, எதிர்கால சமாதான முயற்சிகளில் இருந்து அவர்களை தம்மைத் தாமே ஒதுக்கிக்கொள்ளப் போகின்றார்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது, மேலதிக அழுத்தத்தை அனைத்துலக சமூகம் பிரயோகிக்கத் தவறியிருப்பதாக, இவ்வருட மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டில் சில நியாயங்கள் உள்ளன. ஆனால் சனநாயக வழியைத் தழுவி, அமைதி வழியில் அரசியல் இலக்குகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அடைய வேண்டும் என்பதே, அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். தமிழீழத்தை நோக்கிய அரசியல் அபிலாசை தவறானது என நான் கூறமாட்டேன். ஆனால் அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாளும் முறைகளை நாம் ஏற்க முடியாது.

இந்த வகையில், மிதவாதத் தமிழர்களை நோக்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இங்கு யுத்தம் தீவிரமடைவது, பிரித்தானியாவில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அகதித் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. எமது நாட்டில் உள்ள தமிழ் வணிகர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக நிதியைப் பெறுகின்றார்கள்.

இலண்டனின் வீதிகளில் தமிழ் குழுக்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன. எவ்வாறாயினும், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கும், அவர்களின் நிதி சேகரிப்புக்களை தடுப்பதற்கும், நாம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்க்கொற் கூறியுள்ளார்.
நன்றி>புதினம்.

Sunday, December 09, 2007

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொன்று விடுங்கள். இது பிரதமர் ராஜீவ்காந்தியின் உத்தரவு--ராஜீவ் செயலாளர் மறுப்பு!!!.

-தினத்தந்தி-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொல்ல தூதர் உத்தரவிட்டார் என்று அமைதிப்படை தளபதி கூறியதை, ராஜீவ்காந்தியின் செயலாளராக இருந்த ஜி.பார்த்தசாரதி மறுத்து உள்ளார். அமைதிப்படை தளபதி சொல்வதில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

தளபதி திடுக்கிடும் தகவல்

மறைந்த ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படை தளபதியாக மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் இருந்தார். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இந்நிலையில் ஹர்கிரத் சிங், "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

அதில், கடந்த 1987-ம் ஆண்டில் இந்திய அமைதிப்படைக்கு நான் தலைமை வகித்த போது, இலங்கைக்கான அப்போதைய இந்திய தூதர் ஜே.என்.தீட்சித் எனக்கு போன் செய்து, விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொன்று விடுங்கள். இது பிரதமர் ராஜீவ்காந்தியின் உத்தரவு என்று தெரிவித்தார். ஆனால் நான் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்து விட்டேன் என்று ஹர்கிரத் சிங் கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ் செயலாளர் மறுப்பு

இந்த நிலையில் அமைதிப்படை தளபதியின் இந்த குற்றச்சாட்டை, ராஜீவ்காந்தியின் செயலாளராக இருந்த ஜி.பார்த்தசாரதி மறுத்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, பிரதமர் அலுவலகத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களை நான் தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் அமைதிப்படை கமாண்டர்களையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு பல முறை சென்று இருக்கிறேன். அப்போது திறமையின்மை காரணமாக அமைதிப்படை தளபதி பொறுப்பில் இருந்து ஹர்கிரத் சிங் நீக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

ராணுவ கமாண்டர்கள் மற்றும் அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசிய போது, ஹர்கிரத் சிங் கூறி இருப்பது போல உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். பொதுவாக இதுபோன்ற உத்தரவுகள் தூதர் மூலம் வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் மேலும் கூறினார்கள்.

ஹர்கிரத் சிங் புத்தகம் வெளியாகி உள்ள நேரம், கேள்வியை எழுப்புகிறது. அவர் கூறியதை யாரும் நம்ப தயாராக இல்லை.

இவ்வாறு அதிகாரி ஜி.பார்த்தசாரதி தெரிவித்தார்.

இவர் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றி உள்ளார்.

மூத்த ராணுவ அதிகாரி

இதற்கிடையே இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தளபதியாக பணியாற்றியவரும், இலங்கையில் இருந்த அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தலைமை தளபதியாக பதவி வகித்தவருமான, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தீபிந்தர் சிங்கும், ஹர்கிரத் சிங் கூறியதை நிராகரித்து உள்ளார்.

ஹர்கிரத் சிங் கூறி இருப்பது முற்றிலும் அர்த்தமற்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் குறி வைக்கப்படவில்லை. ஒருவேளை ஹர்கிரத் சிங் கூறியது போல ஏதாவது உத்தரவு வந்து இருக்குமானால், அதுபற்றி எனக்குத்தான் முதலில் தெரிய வந்து இருக்கும் என்று தீபிந்தர் சிங் தெரிவித்தார்.

நன்றி: தினத்தந்தி

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதா?: இந்திய கடற்படை அதிகாரிக்கு வைகோ கண்டனம்!!!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது வேண்டுமென்றே சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"பாக்கு நீரிணையில் ஒருபோதும் சிறிலங்கா கடற்படை வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. பன்னாட்டு கடல் எல்லையில் சிறிலங்கா கடற்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கின்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய மீனவர்கள் வந்து மாட்டிக் கொள்கிறார்கள்.

மேலும் மீனவர்கள் குற்றம் சாட்டுவது போல சிறிலங்கா கடற்படைப் படகுகள் ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்கு உள்ளே வந்து இந்திய மீனவர்களை தாக்கியது இல்லை என்று இந்திய கடற்படையின் தமிழ்நாடு பொறுப்பாளர் கொமடோர் வேன் ஹேல்டரென் கூறியதாக பத்திரிகைகளில் வெளியாகி உள்ள நியாயப்படுத்த இயலாத, உண்மையில்லாத, பொறுப்பற்ற கருத்துக்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடற்படையினர் இவ்வாறு சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டும், கருத்துக்களை வெளியிட்டும் வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது.

அவர்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுகிறார்களா? அல்லது சிறிலங்கா கடற்படைக்காக பணியாற்றுகிறார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து இந்திய அரசே நாடாளுமன்றத்தில் பல முறை ஒப்புக்கொண்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்ட நோக்கத்துடன், இந்தியா செயற்படுவதும்,

இந்திய கடற்படை அதிகாரிகள், எல்லையை மீறி கருத்துக்களை வெளியிட்டு சிறிலங்காவை ஆதரிப்பதும் எதைக் காட்டுகிறதென்றால்,

நேருவால் வகுக்கப்பட்டு,

இந்திரா காந்தியால் செயற்படுத்தப்பட்ட

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதோ என்பதைத்தான் காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை, இந்திய கடற்படையினர் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டது இல்லை.

ஒரு முறையேனும் சிறிலங்கா கடற்படைக்கு அவர்கள் எச்சரிக்கை கூட விடுத்ததும் இல்லை.

எனவே,

சிறிலங்கா படையினருக்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சிறிலங்கா வான்படைக்கு வழங்கிய ராடார்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தங்கள் எல்லையை மீறிச் செயற்பட்டு வருகின்ற இந்திய கடற்படை அதிகாரிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி<புதினம்.

தமிழக காங்கிரசை தூண்டிவிடுவது இந்திய மத்திய உளவுத்துறையே: அம்பலப்படுத்தியது ஜூனியர் விகடன்!

தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழக உறவுகள் கிளர்ந்தெழுவதை சகிக்க முடியாத இந்திய மத்திய உளவுத்துறை, தமிழக காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு வருவதை தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் பிரபல ஏடான "ஜூனியர் விகடன்" அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஜூனியர் விகடனின் 12.12.07 அன்று வெளிவந்த பதிப்பின் செய்தி விபரம்:

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஊடக மாநாடு நடத்திய காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏவான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்,

சமீபத்தில் கொல்லப்பட்ட சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின்னால் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் கரங்களே இருக்கிறது என்று ஒரு குண்டைப் போட்டார்.

இலங்கையிலிருந்து வந்த அவருடைய நண்பர்கள் சிலர், இயக்கத்தில் தமிழ்ச்செல்வனின் அதீத வளர்ச்சி பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை. அதன் பின்னணியில்தான் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கிறார்... என்றார்களாம்.

மத்திய உளவுத்துறையில் இருக்கும் நண்பர்களிடமும் இதுபற்றி பேசினாராம். அப்புறம்தான் இந்த குண்டை எஸ்.ஆர்.பி. வீசியதாக அவர் வட்டாரம் சொல்கிறது.

கூடவே எஸ்.ஆர்.பி., தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Saturday, December 08, 2007

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான்: துக்ளக் "சோ"

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் "சோ" தெரிவித்துள்ளார்.

துக்ளக் வார இதழ் 07.11.2007 அன்று வெளிவந்த கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் சோ தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்தரவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பற்றி? (எம்.தூசிமுத்து, சென்னை-11)

பதில்: எனக்குத் தெரிந்த வரை அவ்வாறு செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போது, அவர் சில பத்திரிகையாளர்களையும் வேறு சிலரையும் இது பற்றிக் கருத்துக் கூறுமாறு கேட்டார் (ஒரு தூதுவர் மூலம்). அநேகமாக எல்லோரும் ஓரிவருவரைத் தவிர இது தவிர்க்கப்பட வேண்டியது என்று கருத்துக்கூறியதால் ராஜீவ் அந்த யோசனையைக் கைவிட்டார். இதுதான் நடந்தது என்பது என் நினைவு என்று துக்ளக் சோ கூறியுள்ளார்.

கடந்த 1987 இல் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படைக்கு தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்.

ஓய்வு பெற்ற அவர், "இன்டர்வென்சன் இன் சிறிலங்கா'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அவர் கூறி இருப்பதாவது:

இலங்கையில் இருந்த அமைதிப்படைக்கு தலைமை வகித்த எனக்கு, கடந்த 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாள் ஒரு தொலைபேசி வந்தது. அதில் இலங்கைக்கான அப்போதைய இந்திய தூதுவர் ஜே.என்.டிக்சிட் பேசினார்.

அவர் பேசுகையில், "நாளை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வரும்போது அவரை நீங்கள் சுட்டுக்கொல்ல வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

ஆனால், அதனை நிறைவேற்ற நான் மறுத்து விட்டேன்.

"நமது இராணுவம் கட்டுப்பாடானது. எனவே முதுகில் சுட்டுக்கொல்லும் வேலையை செய்ய முடியாது. அதனால் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்து விட்டேன் என்றும் அப்புத்தகத்தில் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்

Saturday, December 01, 2007

நூற்றுக்கணக்கில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிறிலங்காவில் திடீர் கைது- தனி முகாமில் அடைக்க மகிந்த உத்தரவு- உறவுகளின் கதறலைக் கேட்கவும் மகிந்த மறுப்பு

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பல இடங்களிலும் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் அனைவரும் பூசா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

200-க்கும் அதிகமானோர் பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை காவல்துறையின் பிரிவில் நேற்று கைது செய்யப்பட்ட 132 பேரில் 100 பேர் இன்று பிற்பகல் எதுவித விசாரணைகளும் நடைபெறாத நிலையில் இரண்டு பேரூந்துகளில் ஏற்றப்பட்டு பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பூசாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என்ற தகவல் பரவியதும் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரும், உறவினர்களும் இன்று முற்பகலில் கொட்டாஞ்சேனை காவல்நிலையம் முன்பாக திரண்டனர்.
அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் உத்தரவிட்ட போதும் அவர்கள் அங்கிருந்து அகலவில்லை. அங்கு குழுமி நின்றவாறே தமது பிள்ளைகளினதும், உறவினர்களினதும் விடுதலையை வலியுறுத்தினர். பலர் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காட்ட முயற்சித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அங்கு திரண்டிருந்த பெற்றோர் பலர் அழுது குழறிய வண்ணமிருந்தனர். பலர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தனர்.

இதனால் அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக இருந்தது.

பூசாவுக்கு கொண்டு செல்லாமல் கொழும்பில் உள்ள ஓரிடத்தில் வைத்தே கைது செய்யப்பட்வர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு காவல்துறையினரிடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அதற்கு காவல்துறை அதிகாரிகள் உடன்படவில்லை.

எனினும் கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு பேரூந்துகளில் ஏற்றிச்செல்ல இடமளிக்காத வகையில் பெற்றோரும், உறவினர்களும் முன்வாசலிலேயே திரண்டு நின்றனர்.

இதனால் கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு கொண்டு செல்வதற்காக பேரூந்துகளில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து இரண்டு பேரூந்துகளை காவல் நிலையத்தின் பின்பக்க வாசலுக்கு கொண்டு வந்து அந்த வாசல் ஊடாக கைது செய்யப்பட்வர்களை பேரூந்துகளில் ஏற்றிய காவல்துறையினர் அங்கிருந்து சடுதியாகச் சென்றனர்.

கைது செய்யப்பட்வர்களை ஏற்றிச்சென்ற பேரூந்துகளுக்கு படையினரின் இரண்டு வாகனங்கள் பாதுகாப்பு வழங்கிச் சென்றன.

கொட்டாஞ்சேனைப் பிரிவில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கல்கிசை, வெள்ளவத்தை, தெகிவளை, கொகுவெல, நுகேகொட, பேலியகொட, கோட்டை காவல் நிலையப் பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் உயர்பீடம் உத்தரவு

கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசின் உயர்பீடத்தின் உத்தரவின் பேரில் பூசா சிறைச்சாலைக்கு அனுப்பியதாக கொட்டாஞ்சேனை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நிரஞ்சல அபேவர்தன தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கொழும்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல இடங்களிலும் தேடுதல்களை மேற்கொண்டோம். தமது அடையளங்களை உறுதிப்படுத்தாதவர்களையும் சந்தேகத்திற்கு இடமானவர்களையும் கைது செய்தோம்.

கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்களும் 2 பெண்களும் பூசாவுக்கு விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசாங்க உயர்மட்டத்தினரின் உத்தரவுக்கு அமையவே நாங்கள் கைது செய்யப்பட்டவர்களை பூசா முகாமுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

சந்திக்க மகிந்த மறுப்பு
கொழும்பில் கைது செய்யப்பட்டு இன்று பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்திக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மறுத்ததால் அவர்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்தனர்.

தமது பிள்ளைகளை பூசாவுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கொட்டாஞ்சேனையில் இருந்து அலரி மாளிகை நோக்கி இரண்டு பேரூந்துகளில் இன்று பிற்பகல் புறப்பட்டனர்.

அதற்கான ஏற்பாடுகளை பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும், நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் செய்திருந்தனர்.

தனியாரின் இரண்டு பேரூந்துகளில் 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அலரி மாளிகை நோக்கிப் புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த இரண்டு பேரூந்துகளையும் ஹில்டன் ஹோட்டல் முன்பாக வழிமறித்த படையினர் பாதுகாப்பு காரணங்களுக்காக பேரூந்துகளில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தடுத்தனர்.

இதனால் ஹில்டன் ஹோட்டல் பகுதியில் இருந்து கால்நடையாகவே அலரி மாளிகை நோக்கி அவர்கள் அனைவரும் சென்றனர்.

எனினும் தாஜ் ஹோட்டலுக்கு சமீபமாக காலிமுகத்திடல் சுற்றுவட்டப் பகுதியில் மீண்டும் வழிமறித்த படையினர் அதற்கு மேல் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தனர்.
இதனையடுத்து மலையக மக்கள் முன்னணியின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் மகிந்த ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டு பூசாவுக்கு கொண்டு செல்லப்படுபவர்களின் பெற்றோர் உங்களைச் சந்திப்பதற்காக காத்து நிற்கின்றனர் என்று தெரிவித்தனர்.

எனினும் தனக்கு தற்போது நேரம் இல்லை என்று கூறி பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்திப்பதற்கு மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.
அத்துடன் தனக்கு இந்த விடயத்தில் நெருக்கடி தர வேண்டாம் என்றும் இங்கே குண்டுகள் வெடிப்பதால் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு கொண்டு செல்லாமல் அந்தப் பேரூந்துகளை திருப்பிக்கொண்டு வந்து இங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கோரிக்கை விடுத்த போதும் அதனை அவர் ஏற்கவில்லை என்று தெரியவருகிறது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனை மட்டும் தனியாக இன்று மாலை 5:00 மணியளவில் சந்திப்பதற்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை நிராகரித்த தி.மகேஸ்வரன், மக்களைச் சந்தித்தால் மட்டுமே தான் சந்திப்பேன் என்று கூறியதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அங்கு குழுமியிருந்த பெற்றோரை கலைந்து செல்லுமாறு கூறிய படையினரும், காவல்துறையினரும் அந்தப் பகுதிக்கு இரண்டு காவல்துறை பேரூந்துகளை வரவழைத்து அவற்றில் அவர்களை ஏற்றி மீண்டும் கொட்டாஞ்சேனை காவல்நிலையம் முன்பாக கொண்டுவந்து விட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை நிலையத்திற்கு முன்பாக மீண்டும் திரண்ட அவர்கள் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு மன்றாடிய போதும் அந்த மன்னறாட்டங்கள் எதுவும் பலனிக்காது ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நன்றி>புதினம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையும் இந்திய றோவின் வழமையான அபத்த புரிதலும்!

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தேசியத் தலைவரின் மாவீர நாள் உரை தொடர்பில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டரின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுப. தமிழ்ச்செல்வனின் படுகொலையால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கட்டுக்குள் வந்த ஒருசில நாட்களுக்குள்ளாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும், மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது.

காங்கிரஸ் தலைவர்களையும், மத்திய அரசின் உளவுப்பிரிவையும் ஒரே நேரத்தில் உஷ்ணமாக்கும் விதத்தில் பிரபாகரன் பேசியதுதான் என்ன? மத்திய அரசின் உளவுப்பிரிவான "ரா" அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அவர்.

சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து முதல்வர் வெளியிட்ட இரங்கற்பா, அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசமடைந்து, புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தினார்கள்.

மேலும், காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்திலும் புலிகளின் ஆதரவு நிலையைக் கண்டித்துத் தீர்மானம் போடப்பட்டது.

அதன்பிறகும், தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவான குரல்கள் ஒலிப்பது தொடர்ந்ததே தவிர, முற்றிலுமாக நின்றபாடில்லை. அதனால்தான், மத்திய இணையமைச்சர் இளங்கோவன், புலிகளுக்கு ஆதரவான பேனர்களை அப்புறப்படுத்த வேண்டுமென எச்சரித்தார். ஆனால், அவரது உருவப் பொம்மையையே தூக்கிலிடும் அளவிற்கு புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டியதைப் பற்றிய விவரம் மத்திய அரசுக்குச் சென்றவுடன் கவலையடைந்த மத்திய அரசு, தனது அதிருப்தியை மாநில அரசுக்குத் தெரிவித்தது.

அதன் எதிரொலியாகத்தான், கடந்த 26 ஆம் தேதி அவசர அவசரமாக தமிழக காவல்துறை இயக்குனர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடுமையாக எச்சரித்ததன் விளைவாக, தமிழகத்தில் புலிகளின் ஆதரவுக் குரல்கள் அமைதியாகின.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு தமிழ்நாட்டில் அடங்கியிருந்த விடுதலைப்புலிகளின் ஆதரவு நிலை, இப்போது வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்ததுதான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நேரத்தில்தான் புலிகள் அமைப்பு கடைப்பிடிக்கும் மாவீரர் தினமான நவம்பர் 27 இல் பிரபாகரன் என்ன பேசுகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தோம்.

கடந்தாண்டுகளைப் போல் இல்லாமல், இந்தாண்டு தனது பேச்சில் பிரபாகரன், தமிழ்நாட்டில் புரட்சியை உருவாக்கும் விதத்திலும், இந்திய அரசைக் குறைகூறும் விதமாகவும் பேசியதுதான் மத்திய அரசைக் கவலையடைய வைத்தது.

பிரபாகரன் தனது பேச்சில்,

எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

மாறாக,

எம்மண் மீதும்,

மக்கள் மீதும்,

பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது.

அறுபது ஆண்டுகாலமாக அநீதி இழைக்கப்பட்டு,

அடக்குமுறைக்கு ஆட்பட்டு,

சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக

எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ,

எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை.

ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை.

உலகமே கண்ணை மூடிக்கொண்டு பாராமுகமாகச் செயல்படுகிறது என்று பேசியுள்ளார் பிரபாகரன்.

அதைத்தொடர்ந்து பிரபாகரன் பேசியதுதான், தனிநாடு என்ற கோரிக்கையை தமிழ்நாட்டுத் தலைவர்கள் மறந்தே போய்விட்ட இந்த நேரத்தில், தமிழர்களுக்கென்று தனிநாடு உருவாக வேண்டுமென்ற பிரிவினைவாதத்திற்கு விதை தூவும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது என்பதுதான் மத்திய அரசை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் (எட்டுக்கோடி) தமிழர் பரந்து வாழ்ந்தபோதும், எமக்கென ஒரு நாடு இல்லாமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு, இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.

எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார் பிரபாகரன்.

எட்டுக்கோடி தமிழர்கள் என்று அவர் கூறுவது இந்தியாவிலுள்ள தமிழர்களையும் சேர்த்துத்தான் என்கிறபோதுதான், இந்தப் பேச்சின் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்று மத்திய அரசு கவலையுடன் பிரபாகரனின் பேச்சை ஆராய்ந்து வருகிறது என்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று தமிழீழத் தேசியத் தலைவர் கோருவது என்பது தமிழ்நாட்டில் தனிநாடு கோரும் பிரிவினைவாதத்துக்கு விதை தூவுவது என்பதாக எப்படி அமையும்?

வங்க தேசத்தின் விடுதலைக்காக இந்திய இராணுவமே யுத்தம் நடத்தியும் மேற்கு வங்கம் இன்னும் இந்தியாவின் மாநிலமாகத்தானே இருக்கிறது. அப்படியெனில் தமிழீழ விடுதலைக்கு தாய்த் தமிழக உறவுகள் ஆதரவளிப்பது என்பது எப்படி தமிழ்நாடு பிரிவினைவாதத்துக்கு விதை தூவுமாம்?

காலம் காலமாக இருந்து வரும் "றோ" வின் பிழையான புரிதலே இப்போதும் தொடருகிறது என்பது மட்டும் நிதர்சனமாக நிற்கிறது.
நன்றி>புதினம்.

Friday, November 30, 2007

மலேஷியத் தமிழரின் ஆன்ம வழிகாட்டியாக காந்திக்குப் பதிலாக மேதகு பிரபாகரன் வரலாம். - மலேசிய தமிழ் பேராசிரியர்

மலேசியாவில் தாங்கள் இனரீதியாகப் பாகுபாடு காட்டபட்டு ஒதுக்ப்படுகின்றார்கள் எனத் தெரிவித்து, அதற்கு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தும் வகையில், அஹிம்சைப் போரின் பிதாமகரான மஹாத்மா காந்தியின் உருவப்படங்களைத் தாங்கியபடி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிறன்று அங்குள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.

'இந்த மக்களின் நியாயமான ஆதங்கங்கள் தொடர்ந்தும் கவனிக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கபடுவார்களாயின் அந்த மக்களின் ஆதர்ச வழிகாட்டியாக மஹாத்மா காந்திக்குப் பதிலாக மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவார்." இப்படி மலேசியாவின் கெபன்காஸன் பல்கலைக்கழகத்தின் சரித்திரத்துறையின் முன்னாள் பேராசிரியர் பி. இராமசாமி எச்சரித்திருக்கின்றார்.

சிங்கப்பூரின் டி.என்.ஏ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவர்களது அரசமைப்பு விவகாரம் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்களில் மலேசிய நாட்டவரான பேராசிரியர் இராமசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசின் கொள்களைக் கடுமையாக விமர்சித்து வந்ததால் அவரது பல்கலைக்கழக சேவை துண்டிக்கபட்பட்டுவிட்டதாகக
கூறப்படுகின்றது.

"மலேசிய அரசு தனது இன ஒதுக்கல் கொள்கையைத் தீவிரமாகத் தொடருமானால் இங்குள்ள தமிழரின் பிரச்சினைகளைக் கையாளும் விடயத்தைத் தீவிரப்போக்கு அணிகள் கையேற்கும் உண்மையான ஆபத்து நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

'இன்று (இங்கு) இந்திய வம்சாவளியினரின் கட்டமைப்பு நலிவுற்று, இறுக்கமற்றதாகவும், அவர்களது எண்ணங்கள், திட்டங்கள் வலிமையாக வரையறுக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் பொலிஸ் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முற்பட்டடால் பதிலடி நடவடிக்கை மோசமாகும்." என்றகிறார் அவர்.

'ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விடப் போவதாக அரசு கூறுகிறது. அப்படி நேருமானார் அது மேற்கண்ட மோதல் நிலைமையையே ஏற்படுத்தும்." என்றும் அவர் கூறினார்.

அடக்குமுறை தீவிரமானல் வன்முறைக் கிளர்ச்சிப் பாதையே கடைசி மார்க்கமாக நாடப்படும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்கிறார் என்று இவ்விடயங்களில் நீண்ட கால அவதானியான மலேசியப் பத்திரிகையாளர் பிரண்டன் குப்புசாமி கூறுகிறார்.

'அவர்கள் தலையைத் தொடர்ந்து சுவரோடு மோதிக் கொண்டிருக்கிறர்கள். ஏதோ ஒரு வடிவிலான புரட்சி ஏற்கனவே பீறிடத் தொடங்கிவிட்டது. வன்முறைப்பாதை பொதுவாகப் பகிரங்கமாகப் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட சந்திப்புகளால் அது குறித்துக் குரல் எழுப்பப்படுகின்றது." என்றார் குப்புசாமி.

இந்தப் பின்னணியிலே புலம் பெயர் நாட்டுத் தமிழர்களின் புலிகள் ஆதரவுப் போக்கு முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகின்றது.

மலேசியத் தமிழர்கள், தமிழீழப் போராட்டத்துக்கு செயலூக்கம் மிக்க பங்காளர்கள் என்கிறார் பேராசிரியர் இராமசாமி.

"மலேசிய வாழ் இந்தியர்கள் பிரபாகரன் பால் பற்றுள்ளவர்கள். இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் பிரபாவைத் துதிக்கினறன". என்றார் குப்புசாமி.

'அப்படியானால் தமிழீழ விடுதலப் புலிகள் போன்ற இயக்கம் ஒன்று மலேசியாவில் தோன்றும் ஆபத்து உண்டா?" என்று அவரிடம் கேட்ட போது -

'இந்திய வம்சாவளியினரின் போரட்டம் பற்றிய எனது ஆய்வறிவின்படி தற்போதைய தலைமை - தீப்பொறி போன்ற சட்தரணி உதயகுமாரின் தலைமை - மிகத் தீவரப் போக்குடையது. பெரிய ஆபத்துகளை எதிர் கொள்ளத் தயாரானது. நீதிமன்றக் கைது உட்பட, ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வரை செல்வதற்கு நீண்ட தூரம் கடக்க வேண்டும்." என்று கூறும் குப்புசாமி, இத்தகைய பாய்ச்சலுக்கு இந்தத் தலைமையால் முடியாது எனத் தாம் நம்புகின்றார்' எனவும் குறிப்பிட்டார்.

'எனினும் வரும் வருடங்களில் குழுக்கள் பிரிந்து சென்று இன்னும் தீவிரம் போக்கை வெளிப்படுத்தலாம். ஆகவே அதற்கான (புலிகள் போன்ற ஆயுத இயக்கம் தோன்றுவதற்கான) வாய்ப்பு நிலவத்தான் செய்கிறது.' என்றார் அவர்.

ஆனால், மலேசியாவில் இந்திய வம்சவாளித் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியாவுக்கும் தான் தலையிடியை ஏற்படுத்தியிருப்பாதகக் கூறப்படுகின்றது.

1980 களில் இலங்கையில் தமிழர் விவகாரம் ஏற்படுத்திய கட்டாயங்கள் போன்ற சூழலை மலேசியாவில் இப்போது இந்தியத் தமிழ் வம்சாவளியினருக்கு நேர்ந்துள்ள நிலைமை அச்சொட்டாக இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி> சுடர் ஒளி

Monday, November 26, 2007

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே!!!



மேஜர்.ஜீவகன்(கடற்புலி)
(பாலசுந்தரம் ரவிசுந்தரம், வல்வெட்டிதுறை)
முளையாக:- 20.04.1971, விதையாக:-09.11.2001

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே, இப்புனிதநாளில் கண்ணீர் மலர்தூவி, உமக்கு எமது வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம். உமது லட்சியம் தமிழர் தம் விடுதலையாம், அந்த நெருப்பினை நெஞ்சினில் சுமந்து, நீ நடந்த பாதையிலே நடந்து, எம் தேசியத்தலைவரின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறோம்.

இவர்கள்,

அம்மா, அண்ணா, அக்கா,தங்கை,அத்தான்மார்,அண்ணி,மருமக்கள்.

பிரபாகரன் எங்கள் தலைவன்.

நாங்கள் பயந்து நின்றோம் ஒருவன் துணிந்து நின்றான், அவன்தான் எங்கள் தலைவன்.






Sunday, November 25, 2007

தேசியத்தலைவரின் 53வது அகவையை வாழ்த்துவோம்.


பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்.
பலர் உலகிலே பிறந்து தமக்கென வரலாறு இல்லாமலே மறைந்து போகின்றனர். அவர்களிலும் குறைந்த தொகையினர் வரலாற்றிலே தங்கள் சுவடுகளைப் பதித்து செல்கின்றனர். வரலாற்றை தாமே படைத்து அதன் நாயகராகவும் விளங்குவோர் மிகச் சிலரே அந்தச் சிலருள் ஒருவரே இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவார்.

வந்தேறிகளிடம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்பட்டு மண்ணிழந்து மதியிழந்து, மொழிகெட்டு, விழி கெட்டு, கடலிழந்து, கொடியிழந்து, கொற்றமிழந்து, பன்னூறு ஆண்டுகளாய் நோற்றதவமே தமிழீழ விடுதலைக்காய் களமாடுகின்ற எங்கள் தானைத் தலைவரைத் தோற்றுவித்தது போலும்.

அவர் என்ன தாய் நாட்டின் சொந்த வரலாறு அறியாது ஐரோப்பிய வரலாறுகளையும் மார்க்கிசத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு ரஷ்சியாவைப்பார்! சீனாவைப் பார்! என வாய்ப்பந்தலிட்டவரா? இல்லவே இல்லை. அப்படியானால் அவர் என்ன கற்றார்? எங்கு படித்தார்? யாரிடம் பயின்றார்?

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது மெய்யியல் ஆசான், வரலாறு எனது வழிகாட்டி, எனக் கூறி ஒரு கைத்துப்பாக்கியுடன் 14 வயதிலேயே விடுதலைக்கு அகரம் எழுதினார். இன்று உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுராவுடன் ஒப்பிட்டு பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் களத்திலே அவர் பெற்ற வெற்றிகளே. ஒப்ரேசன் லிபரேசன, பலவேகய, ஜெகசிக்குறு, சக்ஜெய, ஓயாத அலைகள, ஆணையிறவுப் பெருஞ்சமர் என நீண்டு கொண்டே போகும் வெற்றியின் பட்டியல்கள். இந்த வெற்றிகளைக் குவித்திட அவர் நவீன உலகில் தமிழருக்கென நவீன போர்படையணிகள் தேவை என உணர்ந்தார்.

திருக்குறளில் குறிப்பிட்டது போல "கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை" அதாவது, வியுகம் அமைத்து எமனே சினம் கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ள படையணியை உருவாக்கினார். வெறுமனே ஒரு கைத்துப்பாக்கியுடன் போராடப்புறப்பட்ட தேசியத்தலைவர் படிப்படியாக தீர்க்கமான அணுகுமுறையுடன் தரைப்படையை, கவச எதிர்ப்புப்படை, என தரைப்போர் ஆற்றல்களை விரிவுபடுத்தியதுடன் கடற்புலிகள், கரும்புலிகள், வான்புலிகள், என அறிமுகம் செய்ததுமட்டுமல்லாமல் விடுதலை சார்ந்த கலை இலக்கியப்படைப்புக்களையும் உருவாக்கி வந்தார்.

தமிழீழ வளர்ச்சியின் பொருட்டு அவர் தொடாததுறைகளே இல்லை எனலாம். இன்று ஆர்ப்பரித்து எழுந்து நிற்கின்றது எமது தேசம். ஆண்கள், பெண்கள,முதியோர் என ஆயுதம் தரித்து சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளுகின்றது. எமது தேசத்தின் சுதந்திரப்போர் பல்லாயிரம் சிங்கள இராணுவத்துப்பாக்கிகளாலும் நவீன கடற்படை, விமானப்படைத் தளங்களாலும், தாக்கப்படும் போதெல்லாம் எமது சின்னஞ் சிறு தேசம் தனித்து நின்று போராடி வெற்றிகளைக் குவிக்கின்றது. இதற்கு குறைந்த ஆட்தொகையும் குறைந்த ஆயுதவளங்களையும் வைத்திருந்தபடி அவற்றின் உச்சப் பயனை பெறும் வகையில் தலைவர் பிரபாகரன் செயற்படுத்தும் போர்த்திட்டங்களே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன்.

இதற்கு எடுத்துக் காட்டாக மிகக் குறைந்த போராளிகளோடு உலகின் நாலாவது பலம் பொருந்திய வல்லரசு ஒன்றின் நோக்கத்தை முடியடித்து உலகின் இணையற்ற தலைவர்களில் ஒருவரானார்.

இதனாலேயே விடுதலைப் புலிகளின் பரமவைரியும் தமிழீழத்தில் அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய கொடுரங்களுக்கு தலைமை வகித்த ஜே.என்.டிக்சித் பின்வருமாறு கூறுகின்றார். “பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீடான இலட்சிய நெருப்பு கொள்கை உறுதியும் உண்டு என்பதை, அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத்திறனாய்வு, அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பமும் உடையவர்” என்றார். எனவேதான் அவரின் மதிநுட்பமான போர்த்திறனையும் இராஜதந்திரங்களையும் கவனித்தே தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போரும் சரி எதிர்போரும் சரி இன்று உலகில் உள்ள கெரில்லாத் தலைவர்களுள் எமது தேசியத்தலைவர் பிரபாகரன் ஆற்றலும் செயற்பாடும் மிக்க தலைவர் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பசி, தாகம், நீண்ட பயணம், மரணம் என்பவற்றையே தன்னால் வழங்க முடியும் என்றும் சுகமான நல்வாழ்வுக்கு உறுதியில்லை என்றும், தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுடையோர் தன்னோடு சேரலாம் எனக் கூறி அவ்வாறு தன்னுடன் இணைந்த போராளிகளைக் கொண்டு போர் நிகழ்த்தி இத்தாலியை ஒற்றுமை பூணவைத்தார் கரிபால்டி.

இன்று கழுத்தில் சயனற்றைக் கட்டிக்கொண்டு தம் தலைவர் ஆணையிட்டால் அதனை விழுங்கி மரணத்தை தழுவிக்கொள்ளவும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்பதும் அவர்களை மதிநுட்பமாக நடத்தி இன்று மாபெரும் வெற்றிகளைச் சுமந்து நிற்கும் எம் தலைவர் கரிபால்டியை விட அதிர்ஸ்ட சாலி என்றே கூறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானம், பேச்சுவார்த்தை என்ற பெரும் அரசியல் இராஜதந்திர முறையை ஏற்படுத்தி இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரச்சனைக்குள் உள்வாங்கச் செய்து உலக சமூகத்தின் மத்தியில் பிரச்சனையை கையளித்துள்ளார். இந்த பெரும் நுற்பமான அணுகுமுறையை கண்ட மேற்குலக இராஜதந்திர அதிகாரிகள் வன்னியை வட்டமிட்டபடியே உள்ளனர். இதுவரை காலமும் உள்நாட்டுப்போர் என்று கூறிவந்த சிங்கள அரசின் கூக்குரல் இன்று நசுக்கப்பட்ட இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.

இது எமது தலைவரின் மிக நுட்பமான இராஜதந்திர அணுகுமுறை. இன்றைய உலகின் போக்கிற்கு தம்மை மாற்றிக் கொண்ட ஓர் நிகழ்வு. அல்லது காய்நகர்த்தல் எனக் கூறிக் கொள்ளலாம். எனவே இன்று சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் எமது தேசத்தின் விடுதலை இயக்கத்தின் கோரிக்கை உலக சமூகத்திடம் ஆதரவு பெறத் தொடங்கியுள்ளது.

இந்த வெற்றிகளின் பின்னால் எம் தேசத்து மாவீரர்களின் கடும் உழைப்பும் தியாகமும் தலைவர் பிரபாகரனின் மதிநுற்ப வழிநடத்தலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை.

அதுவே அவரை இந்நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக்கியது.
-யாரோ-

இரங்கல் பதாகைகளை அகற்றக் கூறிய இந்திய அமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!




பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவனைக் கண்டித்து கோபியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபி பேரூந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கந்தசாமி, பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், கொங்கு இளைஞர் பேரவையின் ஆறுமுகம் உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர்.

இளங்கோவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் இளங்கோவன் கொடும்பாரியை தமிழின உணர்வாளர்கள் எரிக்க முயற்சித்தனர். அதனைக் காவல்துறையினர் தடுத்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கொடும்பாவி கொளுத்தியதாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி>பதிவு.

Friday, November 23, 2007

தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது!!!

தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை:

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இது தான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் தசாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கைத்தீவின் அரசியலும் அரசியல் தீர்மானங்களிலும்

தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,

தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது

சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது

ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும்.

அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போது உலகிலுள்ள அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள இனவான அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு", "அரசாங்கம்" என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடை போட வேண்டும்.

அதாவது உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அவைக்கு இலங்கை அரசு அவசியம் என்றதன் அடிப்படையில் தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பத்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும் தான்.

முழு இந்தியாவிலுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர்.

இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு.

சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் அவர்கள் உள்ளனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.

புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாயும்.

இது தான் எளிமையான சூத்திரம்..

முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக ஒரு கணம் விளக்குவோம்.

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு ஓர் அரசாக இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும்.

அது ஒரு புறமாக இருக்கட்டும்.

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்து கொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம் எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள் இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள் தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இதனைத்தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசம் தமிழ் மக்களின் கையில் இல்லை என்றாலும் சிங்கள உயர்குழாத்து இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும்.

இதன் படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் அதன் வழி முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும் ஆதலால் தமிழீழ மக்களின் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத் தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு.

தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுற்கு ஆதரவு இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசுடனும் தலைசாய்க்க தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும் இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே

உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட..

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும்.

சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.

அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு. பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும்.

ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்கு அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

முதலமைச்சர் தொடக்கம் இடதுசாரியக் கட்சிகள் உள்ளடக்கலாக சிறிய கட்சிகள் வரை இந்த ஆதரவு அலை எழுந்திருக்கின்றது. இது முழுத்தமிழக மக்கள் தழுவியதாக கட்சி பேதங்களுக்கும் அப்பால் பற்றிப் பரவக்கூடிய தொடக்கத்தை கொண்டுள்ளது.

இதனைத் தக்க வகையில் பயன்படுத்தவேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

உலக அரசியல் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப்பொருளாதார ஒழுங்கு தான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது.

ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன் அரசென்ற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகலாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம் தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும்.

தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது.

அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும் என்று மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Thursday, November 22, 2007

அனுராதபுர தாக்குதல் ஒளிப்படம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொடைப் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்ட அநுராதபுரம் எல்லாளன் படை நடவடிக்கை ஒளிப்பதிவு.






தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது சிறிலங்கா!!! We Wish You a Merry Christmas - U.S Gift to Ealam Tamils.



தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச எழுப்பியெ கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:

அமெரிக்காவில் கடந்த 15 ஆம் நாள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கமும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை அந்நிறுவனங்கள் ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நன்றி>புதினம்,யாழ்.காம்.

Wednesday, November 21, 2007

துக்ளக் வாரப் பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு!!!


ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழுதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்திரிகைகள் அனைத்தையும் வீதியில் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.
நன்றி>பதிவு.

சுடரேற்றி அஞ்சலி செய்வோம் வாருங்கள்!!

நிலத்துக்குள் எங்கள் நிலவுகளைப் பாருங்கள்! சொந்தமென... நாங்கள் சுடரேற்றி அஞ்சலி செய்வோம் வாருங்கள்!!

சுடரேற்ற இங்கே அழுத்தவும்.
http://karthikai27.com/

கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்!!!

கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு!!!

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன.

சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி,

இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும்,

பாகிஸ்தானுடைய கடற் படையினருடன் போர் ஒத்திகைகளில் ஈடுபடும் எண்ணம், தமது கடற்படையினருக்கு கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இற்றைவரைக்கும் இந்திய - அமெரிகக் கடறப் டைகளுடன் மட்டும் தமது கடற்படையினர் போர் ஒத்திகைகளை மேற்கொண்டிருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், சிறீலங்கா கடற்படை தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களில் பயணிதத் கடற்படை அதிகாரிகள், இன்று சிறீலங்கா கடற்படை தளபதிகளை சந்தித்து, கடற் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்ததைத் தொடர்ந்து. பலவேறு சந்தேகங்கள் படைத்துறை வல்லுனர்களால் வெளியிடப்பட்டு வருகின்றன.

எரிபொருள் நிரப்புவதற்காகவே பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் தமது துறைமுகத்தில் தரித்ததாக சிறீலங்கா கடற்படைத் தளபதி கொழும்பில் கூறியுள்ள போதிலும், அதனை நம்ப முடியாது இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களைப் பகிரங்கமாகப் பெற்றுக்கொண்டால் இந்தியாவுடன் முரண்பட வேண்டியநிலை ஏற்படும் என்பதால், சிறீலங்கா அரசு இரகசிய ஆயுதக் கொள்வனவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நன்றி>பதிவு.

Sunday, November 18, 2007

புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு?


தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

எரித்திரியா ஆதரவளித்துவிடக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென கடந்த புதன்கிழமை எரித்திரியாவுக்கான சிறிலங்கா தூதரகம் அமைக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எரித்திரியாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சிறிலங்கா கருதி வருகிறது.

எத்தியோப்பியாவிலிருந்து 1990-களின் மத்தியில் எரித்திரியா சுதந்திரப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்
தமிழீழம் பற்றி அறிய,
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D