
- யூனியர் விகடன் -
'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று வாழும்
மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது
இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில்
கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக்
கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில்
செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக
மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை
இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத்
திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப்
பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு
ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக
அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட
அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது!
அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987--ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-
இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச்
சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் 'அரிய'
ஆலோசனையாகும்.
மாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க
வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப்
பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய
கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து
கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில்
பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால்
புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும்
மதிக்கவில்லையென்பதே உண்மை.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின்
கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து
தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே
தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும்
'சீரியஸாக' எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக்
கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.
1974--ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த
இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும்
செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக்
கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின்
அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின்
மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று
மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும்
எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், 'இந்திய மீனவர்களும்,
யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு
இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள்
இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான்
அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி.
ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு
ஒப்பந்தங்களிலோ... இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி
கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான
முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ... கச்சத்தீவு பகுதியில் தமிழக
மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த
ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான்
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று
கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று
ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித
அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை
பெற்றிருந்தார்கள்.
1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித்
தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது.
அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.
தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை
களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும்
தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால்
சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள்
பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட
முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால்
சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.
கடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி
வாய்ந்ததாகும். 'டார்பிடோக்கள்'என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல்
கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன.
கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை
என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால்
மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல்
ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே 'நீண்ட ஆயுளுக்கான' உதாரணம்
ஆகும்.
கடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத்
துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில்
வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி
போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள்
அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை
கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே
போகவில்லை.
யுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில்
பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக்
கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட 'ஹாக் கன்வென்ஷன்'
மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை.
எனவே, 1994-ம் ஆண்டு 'சான் ரெமோ கையேடு' என ஒன்றை நிபுணர்கள்
தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய
வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.
'பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல்
பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது,
அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும்.
அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும்
மிதக்கவிட அனுமதி கிடையாது' என 'சான் ரெமோ கையேடு' குறிப்பிட்டுள்ளது.
இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச
விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல்
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
கடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன.
ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி
பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி
அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை -
ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப்
பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை
இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும்
செலவு மிகமிக அதிகம்.
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத்
தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. 'கூட்டு
நடவடிக்கைக் குழு' என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில்
பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில்
நடந்த 'கூட்டு நடவடிக்கைக் குழு' கூட்டத்தில் சில முடிவுகளும்
எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான
தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும்,
இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது
எனவும் அந்த 'கூட்டு நடவடிக்கைக் குழு' முடிவெடுத்தது. அதற்கு மாறாக
இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக்
குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும்
எடுத்துக்காட்டுகிறது.
சேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற
அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது
கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால்,
சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த
நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச
நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச்
செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை 'போர்க்காலக் குற்றச்
செயல்களாகக்' (War Cerimes) கருதுவதில் தவறில்லை.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது
அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால்
இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.
இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய
கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது
செய்கிறார்கள்! இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி?
அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து
இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? அந்தக் கண்ணிவெடிகளை மனித
நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது
இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய
கடற்படையினர் கைது செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு நமது
அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது
வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ''மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே
பிடித்துக் கொண்டிருக்காது'' என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல...
இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- யூனியர் விகடன்