
குமுதம் வார இதழின் ஆசிரியர் தலையங்கம்:
போர் என்ற அறிவிப்பு மட்டும்தான் வெளிப்படையாக இல்லை. ஆனால் புகை மண்டலம் எழுந்து அடங்குகிறது. உயிர்கள் பொசுங்கும் நெடியடிக்கிறது.
அனுராதபுரத்தில் ஒக்ரோபர் மாதத்தில் நடந்த தாக்குதலின் போது உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் சடலங்களைக்கூட அகௌரவப்படுத்தி அவர்களுடைய ஆடைகளை அப்புறப்படுத்தி, நிர்வாணமாக்கிய கொடூரத்தை இலங்கை இராணுவம் செய்ததைக் கண்ட தமிழ் நெஞ்சங்கள் பதறின.
சில நாட்களுக்குள் அதிகாலை வேளையில் வான் வழித்தாக்குதல் நடத்தி, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வனையும், உடனிருந்த தளபதிகள் ஐந்து பேரையும் "சமாதானப் பகுதி"யில் படுகொலை செய்திருக்கிறது இலங்கை இராணுவம்.
தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பை அமைதியின் மீது விழுந்த இடியாக அறிவித்திருக்கிறது புலிகள் இயக்கம். இதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் போர் வலுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
சமரச முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து போர் நீடித்தால், அதிகம் பாதிக்கப்படப்போவது, ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்தான். சிக்கல் முற்றினால் அவர்கள் அகதிகளாக புகலிடம் தேடி வரப்போவதும் நம்மிடம்தான்.
இந்திய அரசு இக்கட்டான இந்த நிலையிலாவது அங்கே சமாதானம் உருவாகச் சில நிர்ப்பந்தங்களை உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்ததைக் கூட, உள்ளூர் அரசியலாக்கும் குறுகிய வட்டத்திலிருந்து இங்குள்ள கட்சிகள் வெளிவர வேண்டும்.
ஒன்றே ஒன்றை மட்டும் அனைவரும் உணர்ந்து ஒன்று சேர வேண்டும் அங்கே துடிப்பது நமது உயிர். தமிழ் உயிர். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment