Wednesday, November 14, 2007

தேசத்தின் புன்னகை

- இன்குலாப்

மறுகரையில்
தேற்றுதலின் தணியாத விசும்பல்
கேட்கும்
மரத்துப் போகாத செவிகளில்.
மாவீரர் விரும்பாத ஒப்பாரி
காலம் காலமாய்
மக்களின் மனசிலிருக்கிறது.
இன்றென் சொல்லும்
கண்ணீரில் நனையட்டும்!
பகைநடந்ததற்குச் சாட்சியங்களான
கருகிய பனை தென்னை ஊடாக
நாங்களும் நடந்திருந்தோம்.
சிதைந்து கிடந்த டாங்கியும்
சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும்
பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும்
முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ?
கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே
புதைந்து கிடக்கும் விதைகள்
பசுமையாய் முளைவிடும்
என்ற
எல்லோருக்குமான எனது நம்பிக்கையும்
துளிர்க்குமோ?
கருகுமோ?
உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட
ஆயுதமாய்த் தடைப்பட்ட சாலைகளில்
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும்
அமைதிக்கான கோரிக்கை
எழுந்து நிற்குமோ?
வீழாது நடக்குமோ?
அசோகச் சக்கரம்
இம்முறை தடம்புரளாது
என்று
இக்கரையும் உலகமும் எதிர்பார்த்திருந்த
காலத்தின் நடுநாட்களில்
நாங்களும் சென்றுவந்தோம்.
தோழமையில் தொடர்ந்த தம்பிகளின் நிழலில்
எங்கள்
கவிதையும் உரையும், கனவும், பாட்டும்
ஒருகண் தொலைய
எஞ்சிய மறுகண்
உலகுக்கே சுடர்வதுபோல் ஒளிர்ந்ததையும்
முடமான கையும் காலும்
விடுதலைக்குத் தோள்தர உயர்ந்ததையும்
இத்தனை இழப்புகளுக்குப் பிறகும்
இவ் வீராங்கனைகளும் வீரர்களும்
மக்களும்
தளை உடைத்த வாழ்வுக்கு
வேட்கைகொண்டு நோக்கியதையும்
ஆயுதம் ஏந்திய கைகளில்
அன்பின் மகரந்தம் மணந்ததையும்
நெஞ்சில் சுமந்து
இன்றுவரை காக்கிறோம்.
மரணத்தைக் கழுத்தில் தரித்த
ஒவ்வொருவர் முகத்திலும்
வாழ்வுக்கான நேசம் இருந்தது!
எங்களுக்குக் காவலாய் இருந்த
வீமனும்
தம்பிகளும்
பேசியதைவிடச் சிரித்தது அதிகம்.
வரவேற்றுச்
சிரித்தபடியே விடைகொடுத்தனுப்பிய
தமிழ்ச்செல்வனின்
நீட்டிய கைகளில்
நிறைய இருந்தது அவரின் நீங்காத புன்னகை.
காயம்பட்ட ஈழத்தைப்
பார்த்துத் திரும்பிய
கண்ணிலும் மனசிலும்
காயம் படாதிருந்தன
அந்தப் புன்னகைகள்!
தேசத்தின் குரல் என்றார்
ஆண்டன் பாலசிங்கத்தை
தேசத்தின் புன்னகை
சுப. தமிழ்ச்செல்வன்!
பேறுகால உதிரப் பெருக்கின்
சூட்டுடன்
நனைகிறது தமிழ்ஈழம்
பொறுத்தாட்டும் தம்பியின் கைகளில்
தேசத்தின் குரல் மீண்டும் கேட்கும்...
திரும்ப மலரும்
தேசத்தின் புன்னகை!

-தென் செய்தி

2 comments:

Anonymous said...

எங்கள் இதயத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் அற்புதமான வரிகள்.
இந்தக் கவிதைக்கு "ஈழம்" பரிசாக வழங்கும் நாள் விரைவில் வரும் என்ற செய்தியை
கவிஞருக்கு அறிவியுங்கள்

ஒரு ஈழத் தமிழன்

Thamizhan said...

தமிழ் பேசுவதாலும்,தமிழ்நாட்டில் வாழ்வதாலும் மட்டுமே சிலர் ஈனத் தமிழர்களாக இருக்கிறார்கள்.

கவிஞர் போன்ற இனமானத் தமிழர்கள்தான் நிறைய இருக்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டார்
புன்னகைத் தமிழர்.
ஈழம் மலர்வது நிச்சயம்,புன்னகையில் தமிழர் சிரிப்பதும் நிச்சயம்.