
தமிழ்ச்செல்வனின் குரூரப் படுகொலையால் உலகத் தமிழினமே அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கின்றது. தமிழகத்தில் பெரும் உணர்வலைகளை அது தட்டியெழுப்பியிருக்கின்றது. இச்சமயத்தில் தாம் மௌனம் காப்பது, உலகத் தமிழினத்தின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் தமக்கு பேரிழுக்கையும், தமிழக மக்களின் கடும் அதிருப்தியையும் சம்பாதித்துத் தந்துவிடும் என்பதை உய்த்துணர்ந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முந்திக் கொண்டு மௌனம் கலைத்தார்.
இந்நிலைமை காரணமாக, தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி கழிவிரக்கத்துடன் இரங்கல் செய்தி ஒன்றைத் தமக் கேயுரிய கவிதைப் பாணியில் தமிழக முதல்வர் வெளியிட்டு, இவ்விடயத்தில் உலகத் தமிழினத்தின் உணர்வலைகளோடு தாமும் சேர்ந்து நிற்கின்றார் என்பதை உலகுக்கு அடையாளப் படுத்திக்கொண்டார்.
அவ்வளவுதான். இந்த இரங்கல் செய்தியை ஒரு பெரிய விவகாரமாக்கி, ஊதிப் பெருப்பித்து, அதன்மூலம் அரசியல் குழப்பத்தை உருவாக்கத் தயாராகிவிட்டது ஜெயலலிதா அன்ட் கொம்பனி.
ஈழத் தமிழரின் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் குறுகிய அரசியல் லாபம் தேடும் அற்பத் தனத்தில் அந்த அணி குதித்திருக்கின்றது.
இந்த இரங்கல் செய்தி வெளிப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும் இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசு வாசமாகச் செயற்படுவதற்கு உறுதியளித்து, சத்தியப்பிர மாணம் செய்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம், தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் ஆட்சியிலிருந்து அகற்றப்படவேண்டிய தகுதி இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்றும் கூக்குரலிட்டு, ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளது ஜெயலலிதா அணி.
உலக நாடுகள் அனைத்தும் சமாதான முயற்சிகளுக்காக அழைத்துப் பேசியது தமிழ்ச்செல்வனைத்தான். பச்சைத் தமிழரான தமிழக முதல்வர் மனித நேயத்தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாய மாகக் குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்கும் அவருக்கு உரிமை இல்லையா? என்று ஜெயலலிதா அணியைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கின்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். அப்படியேதான் கலைஞர் கருணாநிதியின் மனமும், இந்தக் கொடூரக் கொலையால் கொஞ்சம் அசைந்து கொடுத் திருக்கின்றது.
அந்த உணர்வைக் கொச்சைப் படுத்துகின்றார் ஜெய லலிதா.
ஈழத் தமிழர்களுக்கும், அவர் தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வா(ள்/ல்) பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாய மாகும்.
நன்றி>லங்கசிறீ.
No comments:
Post a Comment