Tuesday, November 13, 2007

போரை நிறுத்த கைகள் இணையட்டும்!

-ஜூனியர் விகடன்-

ஜென்ராம்

"அவர் மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான மனித நேயம் மிக்கவர்; எங்களுடைய கெழுதகை நண்பர். இதெல்லாம் அவர் உண்மையில் இறந்து விட்டார் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு மட்டுமே பொருந்துபவை" என்கிறார் அறிஞர் வால்டேர். அவர் வாழும் காலத்தில் வெளியான பல இரங்கல் செய்திகளைப் பகடி செய்யும் விதத்தில் வால் டேர் இப்படிக் கூறியிருக்கக்கூடும். அது வெறும் கிண்டல் மட்டும்தானா? அந்தக் கூற்றில் உண்மை இல்லையா? ஒரு சமூகமும் அரசாங்கமும் ஒரு மனிதனை எப்போது அங்கீகரித்து கௌரவம் அளிக்கும்?

"வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை’’ "

என்று மகாகவி பாரதியை நோக்கி கவிஞர் இன்குலாப் சொல்வதை நாம் இந்தக் கேள்விக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

சிறப்பான பணிகள் பலவற்றைச் செய்த சிலருக்கு அவர்கள் வாழும் காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைத் திருக்காது. அதிகாரத்தால் அவர்கள் தொடர்ந்து விரட்டப்பட்டிருப்பார்கள்; சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டிருப்பார்கள். வேறு சிலருடைய வாழ்க்கை பல சர்ச்சைகளுக்குரியதாக இருந்திருக்கலாம். அவர்களுடைய செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால், மரணத்துக்குப் பிறகு எல்லோருமே திருவுருவாக்கப்படுகிறார்கள��
. ஒருவேளை அவர்கள் அவ்வாறு போற்றப்படவில்லை என்றாலும்கூட, அவர்களில் பெரும்பாலானவர்கள் மீது கடுமையான நேரடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை ஒரு ‘நாகரிகமாக’ நம் சமூகத்தில் பின்பற்றப்படுகிறது. அது சரியா தவறா என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

ஒரு மனிதன் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அவனுக்கு இரங்கல் தெரிவிப்பதுகூட ஒரு அரசியல் சர்ச்சை யாக தமிழகத்தில் உருவெடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு கவிதை எழுதினார். இந்தக் கவிதையே சர்ச்சையின் மையமாக இருக்கிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருடைய மறைவுக்கு ஒரு மாநில முதல்வர் அஞ்சலி செலுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும், அதனால் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரினார்.

கருணாநிதியின் கவிதையில் ஆட்சேபகரமான வார்த்தைகளோ இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சொற்களோ எதுவும் இல்லை. உண்மையில் அவருடைய கவிதை தமிழ்ச்செல்வன் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய இலங்கை ராணுவத்தைக்கூட கண்டிக்கவில்லை. ஒரு நாட்டின் மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு அண்டை நாட்டு ராணுவத்தை அவர் பகிரங்கமாக கண்டனம் செய்தால், அவரை எதிர்த்து அரசியல் நடத்துகிறவர்களின் கையில் அந்தக் கண்டனமே ஓர் ஆயுதமாக சிக்கிவிடக்கூடும். இந்த எச்சரிக்கை உணர்வை அந்தக் கவிதை வரிகளில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழக அரசியலில் மிகவும் மூத்த தலைவரான கருணாநிதியிடம் இருந்து இன்னும் வேகமான எதிர்வினையைத் தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்த்திருக்கக்

கூடும். இந்தக் கவிதை அவர்களுக்கு சிறிது ஏமாற்றம் அளித்திருக்கலாம். சாதாரண மக்களின் பார்வையில் இந்தக் கவிதை இயற்கை மரணம் அடைந்த ஒருவருக்கு இரங்கல் தெரிவித்து எழுதப்பட்டதைப் போலவே தோற்ற மளிக்கும். இருந்தபோதிலும் இதை எழுதியதற்காக ஜெயலலிதா, கருணா நிதியைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், தமிழக அரசைக் கலைக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓர் அரசை ஆட்சியில் அமர்த்துவதோ, பதவியில் இருந்து இறக்குவதோ மக்களின் உரிமை. இதுபோன்ற வலுவில்லாத காரணங்களுக்காக அடிக்கடி மாநில ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் தி.மு.க. ஆட்சி வலுப்பெறுவதற்கே ஜெயலலிதா உதவுகிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அளித்த பதிலும் ஏமாற்றம் அளிக்கிறது. ‘இலங்கையில் கொல்லப்பட்டது தமிழன். என் உடலிலும் தமிழ் ரத்தம் ஓடுகிறது. எனவே, நான் இரங்கல் தெரிவித்தேன்’ என்று அவர் கூறியிருக்கும் பதில் உள்ளூர் அரசியலை மனதில்கொண்டு சொல்லப்பட்டதாகவே இருக்கிறது.

தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிப்பதற்கு ஒருவருடைய உடலில் தமிழ் ரத்தம் ஓடவேண்டும் என்பதில்லை. நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உலக மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்து கிறார்கள். இலங்கையில் சிங்களர், தமிழர் என்று இரு தேசிய இனங்கள் இருக்கின்றன. இவர்களில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சிங்களர் தலைமை, சிறுபான்மை இனத்தை ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து சர்வதேச அரங்கில் கருத்துத் தெரிவிப்பதற்கு ஒருவர் அந்த ஒடுக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அந்த அடிப்படையில் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் அனைவரும் தமிழர்களாகவோ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விடுதலைப்புலிகளின் கடந்தகால தவறுகளை விமர்சிப்பவர்கள்கூட சிங்களப் பேரினவாத எதிர்ப்பின் அடையாளமாக தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கலாம். அது வேறு; இந்திய அரசியல் வேறு.

ஆனால், கருணாநிதியின் இரங்கல் செய்தியைக் காங்கிரஸ் கட்சி, ‘அது கருணாநிதியின் சொந்தக் கருத்து’ என்கிறது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ‘‘ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த விடுதலைப்புலிகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம்’’ என்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுக்கு ரேடார்களையும் ஆயுதங்களையும் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் நாள்தோறும் செத்து மடிகின்ற மனித உயிர்களைக் காப்பதற்காக உணவுப் பொருட்களையும் மருந்து மாத்திரைகளையும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பும் நெடுமாறனின் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறது. விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோவைக் கைதுசெய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.

இலங்கை அரசுக்கு அல்லது விடுதலைப்புலிகளுக்கு அளிக்கும் ஆதரவு என்ற ஒற்றைச் சிக்கலுடன் இந்திய அல்லது தமிழக அரசியல் முடிந்து விடுவதில்லை. இதை நன்றாக உணர்ந்திருப்பதால்தான் தி.மு.க&வும், பா.ம.க&வும் இலங்கை அரசுக்கு உதவும் காங்கிரஸ§டன் கூட்டணியில் இருக்கின்றன. அதைப்போலவே வைகோவும் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருக்கிறார். காங்கிரஸ§டன் கருணாநிதி எப்படி இருக்கிறார் என்றோ ஜெயலலிதாவுடன் வைகோ எப்படி கூட்டணியில் இருக்கிறார் என்றோ பிற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்ப இயலாது. யாரும் யாருக்கு எதிராகவும் சந்தர்ப்பவாதி என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அப்படிப்பட்ட முயற்சிகளில் யாரேனும் இறங்கினால், அது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதைப் போன்றது.

ஒவ்வொரு கட்சியும் தம்முடைய திட்டத்தை நிறைவேற்று வதற்கு இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆரோக்கியமான அரசியல். மாறாக இலங்கையில் நடைபெறும் போரையும் இழப்புகளையும் வைத்து இங்கே அரசியல் செய்வது முறையல்ல. மாறாக, அங்கு நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிர்ப்பந்தங்களை இங்குள்ள அரசியல் கட்சிகளும் இந்திய அரசும் உருவாக்கலாம். ஏனென்றால், போர்க்களம் மரணங்கள் நிரம்பியது. அது கோழையின் இறப்பா வீரனின் சாவா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மரணம் துயரமானது!

-ஜூனியர் விகடன்

No comments: