Thursday, November 08, 2007

ஈழப் பிரச்சனையில் என்ன செய்யப் போகிறோம்? - சோலை!



-குமுதம் ரிப்போர்ட்டர்-
உண்மையில் இலங்கையில், அனுராதபுரம் இலங்கை ராணுவ விமான தளத்தை ஈழப் போராளிகள் தாக்கினர். அவர்கள் முன்னறிவிப்புச் செய்து விட்டு மரணத்தைத் தழுவும் தற்கொலைப் படையினர்.

கடுமையான கட்டுக் காவலையும் உடைத்துக் கொண்டு மூன்று சகோதரிகள் உள்பட 21 பேர் செய்த சாதனை மகத்தானவை. இலங்கை அரசிற்குச் சொந்தமான ராணுவ விமானங்களை அவர்கள் பஸ்பமாக்கினர். பிடிசாம்பலான 18 விமானங்கள் பலநூறு கோடி பெறும் என்கிறார்கள்.

அனுராதபுரம் தாக்குதல் தரை வழித் தாக்குதல் மட்டுமல்ல, வான்வெளித் தாக்குதலும் கூட. இப்படி ஈழப் போராளிகள் இருமுனைத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். அதனால், உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கும் இலங்கை அரசு, கடுமையான தாக்குதல் தொடுக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்.

ஈழத்தின் வடக்கு மாநிலத்தில் இலங்கை ராணுவ விமானங்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் போராளிகள் இயக்கம் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. இயக்கத்தின் தானைத் தலைவருக்கு அடுத்த வரிசையில் நின்ற தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னும் நால்வர் பலியாகியிருக்கிறார்கள். யுத்தத்தின் இலக்கணப்படி இவர்கள் களத்தில் மரணத்தைச் சந்தித்த மாவீரர்கள். சிங்கள இனவாத அரசின் கோழைத்தனமான தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள். பாலசிங்கமும் இல்லாத நிலையில், தமிழ்ச்செல்வனின் இழப்பு புலிகளுக்குப் பேரிழப்புதான்.

முன்னர் சர்வதேசக் கடல் எல்லைக்குள் வந்த கிட்டு கடத்தப்பட்டார். அவரே மரணத்தைத் தழுவிக் கொண்டார். ஈழப்போராளிகள் இயக்கம் அப்போதும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பிறகு மீண்டது. இப்போது சர்வதேச அரங்கில் அறிமுகமான தமிழ்ச்செல்வனை இழந்திருக்கிறது. மீண்டும் எழும். ஏனெனில், சாணை பிடிக்கப்பட்ட இன்னும் பல போர் வாள்கள் உறைகளில் கண் விழித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து வியட்நாம் மக்கள் பல்லாண்டுகளாகக் கெரில்லாப் போர் நடத்தினர். அமெரிக்கா, தனது முப்படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்தது. வியட்நாம் காந்தி ஹோ_சி_மின் தலைமையில் நடந்த அந்த கெரில்லாப் போரை இறுதி வரை அமெரிக்கா வெற்றிகொள்ள முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டு தலைகுனிந்து தாயகம் திரும்பியது.

அதன் பின்னர், கெரில்லாப் போரை புதிய போர் தந்திரங்களால் முன்னெடுத்துச் செல்வது ஈழப் போராளிகள் இயக்கம்தான் என்பதனை உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. வியட்நாம் கெரில்லாப் போர் வீரர்களுக்கு இல்லாத வலிமை, ஈழப் போராளிகளுக்கு இருக்கிறது. அவர்களிடம் போர் விமானங்கள் இல்லை. இவர்களிடம் போர் விமானங்கள் உண்டு.

வியட்நாம் வீரர்களுக்கு ஆதரவாக சீனமும் அன்றைய சோவியத் யூனியனும் துணை நின்றன. ஆனால், ஈழப் போராளிகள் இயக்கத்திற்கு எந்த நாடும் ஆதரவு தரவில்லை. ஆனால், அவர்களுடைய போரின் நியாயத்தை உலகம் புரிந்து கொண்டிருக்கிறது. சிங்கள இனவாத அரசின் மனித உரிமை மீறல்களை அறிந்து கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில், ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு நாடா, சுயாட்சியா என்பதனை இலங்கை அரசுதான் தீர்மானிக்க வேண்டும். காரணம், கெரில்லாப் போருக்கு மரணமில்லை.

இத்தனை ஆண்டுகளாக இலங்கையில் என்ன நடைபெறுகிறது? ஈழப் போராளிகள் தாக்கினால் சற்று இளைப்பாறிக் கொண்டு இலங்கை ராணுவம் தாக்குகிறது. அனுராதபுரம் ராணுவ விமான தளத் தாக்குதல் என்பது ஈழப்போராளிகள் நடத்திய ஐந்தாவது விமானத் தாக்குதலாகும். கடந்த மார்ச் மாதம் கொழும்புக்கு அருகில் உள்ள ராணுவ விமான தளத்தை போராளிகள் வெற்றிகரமாகத் தாக்கி விட்டுத் திரும்பினர்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கை ராணுவம் என்ன சேதி சொல்கிறது? ‘ஆயுதங்களோடு கடல் வழியில் வந்த ஈழப் போராளிகளின் கப்பல்களைக் குண்டு போட்டு மூழ்கடித்து விட்டோம். போராளிகளின் கப்பற்படைத் தளங்களை அழித்து விட்டோம். படகுத் துறைகளைத் துவம்சம் செய்து விட்டோம். ரகசியமாகக் கொண்டு வரப்பட்ட விமானங்களை நொறுக்கி விட்டோம்’ என்று தினம் தினம் புதிய புதிய செய்திகளைப் பரப்பியது. அதன் பின்னர்தான் அனுராதபுரம் ராணுவ விமான தளம் மீது ஈழப் போராளிகள் தாக்குதல் தொடுத்தனர்.

முன்னதைவிட இப்போது ஈழப் போராளிகளுக்கு இழப்புகள் அதிகம்தான். காரணம், இந்த யுத்தத்தைத் தொய்வின்றி நடத்த இலங்கை ராஜபட்சே அரசு விரும்புகிறது. அவருடைய சகோதரர்தான் பாதுகாப்புத்துறை செயலாளர். அவர்கள் சர்வதேசச் சந்தையில் ஆயுதங்கள் வாங்குவதில் அனுபவம் பெற்று விட்டனர். அந்தக் கணக்குகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

இந்த யுத்தத்தில் மரிப்பது சிங்கள உயிரா? தமிழன் உயிரா என்பதை விட மனித உயிர்கள் மரிக்கின்றன என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

இந்தப் போர் எங்கே நடைபெறுகிறது? இதோ, வேதாரண்யம் கோடியக்கரையிலிருந்து கூப்பிடு தூரத்தில் தமிழகத்தின் வாசலில் நடைபெறுகிறது. இந்திய அரசு என்ன செய்கிறது? அந்த அரசில் அங்கம் பெற்றிருக்கும் தி.மு.க., பா.ம.க. கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? பசுவின் பால் சுரக்கும் காம்பைத் தேடும் கன்றுக் குட்டி போல் இந்தக் கட்சிகளின் ஆதரவுக் குரலை_நேசக்கரத்தை ஈழத்து மக்கள் எதிர்பார்ப்பது தெரிகிறதா?

இலங்கை அரசும் ஈழப் போராளிகளும் பிரச்னையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதுதானே இந்தியாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை?

‘எந்தக் காரணம் கொண்டும் இலங்கை அரசிற்கு ‘ஆயுதங்கள் அளிக்கமாட்டோம்’ என்று சென்ற மாதம் கூட நமது பிரதமர் மன்மோகன் சிங் முழங்கினாரே? இந்த இரண்டு கோட்பாடுகளிலும் நாம் உறுதியாக இருக்கிறோமா?

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறுகிறார்:

‘அனுராதபுரம் விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இதில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான உளவு விமானங்கள் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு 160 கோடி ரூபாய்.

இந்தச் சம்பவத்தை அடுத்து இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தரையிலிருந்து விமானங்களைத் தாக்கி அழிக்கும் பீரங்கிகளை வழங்கியுள்ளோம்.

இன்னும் ஆயுதங்கள் வேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதனை மத்திய அரசு பரிசீலிக்கிறது.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது’ என்கிறார். இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர்.

அனுராதபுரம் ராணுவ விமான தளம் தாக்கப்பட்ட மறுநாளே, விசாகப்பட்டினத்திலிருந்து இந்தியக் கப்பற்படை கப்பல்கள் இராமேசுவரம் கடற்பகுதி நோக்கி நகர்ந்தன என்ற செய்தியும் வந்தது.

இந்தச் செயல்பாடுகள் தி.மு.க., பா.ம.க.விற்கு உடன்பட்டவைதானா? இலங்கை அரசிற்கு இன்னும் ஆயுதங்கள் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்கிறது என்று நமது ராணுவத் தளபதி கூறுகிறார். இது தொடர்பாக, மன்மோகன் சிங் கலைஞருடன், டாக்டர் ராமதாசுடன் கலந்துரையாடினாராம்.

இதுதான் மத்திய அரசின் கொள்கை என்றால், ஈழப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வு என்று மத்திய அரசு இத்தனை நாளும் சொல்லி வந்த கோட்பாடு என்ன ஆயிற்று? இதுதான் இன்றைக்கு விஸ்வரூபமெடுத்துள்ள கேள்வி!
- குமுதம் ரிப்போர்ட்டர்

No comments: