Saturday, September 15, 2007

தமிழக எழுச்சி கண்டு பெருமை கொள்கிறது தமிழீழ தேசம்!!!


யாழ். மக்களுக்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலை மேற்கொண்டமையும் அதனைத் தொடர்ந்து தமிழகம் எழுச்சி கொண்டிருந்தமையும் குறித்து தமிழீழ தேசம் பெருமையும் நிறைவும் கொள்கிறது என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.


பழ.நெடுமாறனுக்கு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை தலைவர் வே.இரத்தினசிங்கம் அனுப்பியுள்ள கடித விபரம்:

சிறிலங்கா இராணுவ முற்றிகைக்குள்ளாகி பசியாலும் பட்டினியாலும் நோயாலும் அவலப்படும் யாழ். குடாநாட்டின் தமிழ் உறவுகளுக்கு ஓடிவந்து உதவத்துடிக்கும் தங்களது உணர்வுகளையும், தமிழக உறவுகளின் உணர்வலைகளையும் கண்டு பெருமைகொள்கிறது தமிழீழ தேசம்.

யாழ். குடாநாட்டின் பாதைகளை இறுக மூடி பல இலட்சம் மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்து அம்மக்களினை பட்டினிச் சாவிற்குள்ளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிறுவ முற்படுகிறது சிறிலங்கா.

சிறிலங்கா அரசின் இரக்கமற்ற இனவாதக் கொடூரத்திற்கு ஆளாகி துயரப்பட்ட மக்களின் துயர்துடைக்க தமிழக உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மற்றும் மருந்துப்பொருட்களை செஞ்சிலுவைச்சங்கத்தின் மூலம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு கொடுத்துதவ எடுத்த முயற்சிகளெல்லாம் பலனற்றுப்போனதால் உயிராபத்தையும் பொருட்படுத்தாது படகுகள் மூலம் நேரடியாகக் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டீர்கள். இந்திய அரசு தடுத்த நிலையில் சாகும் வரை உண்ணா நோன்பை தொடங்கினீர்கள்.

இச்செய்தியைக் கேட்டபோது இருபது ஆண்டுகளுக்குமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன், மக்களின் இயல்பு வாழ்வுக்கான ஜந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்திய அரசின் பாராமுகத்தினால் தியாகச் சாவைத் தழுவிக்கொண்டமைதான் நினைவுக்கு வந்தது.

திலீபனின் நினைவு நாளிலே யாழ். குடாநாட்டு மக்களின் பசி அடங்கவேண்டும் என்பதற்காக உணவைக் கொண்டுவர அதே இந்திய அரசு தடுத்தபோது நீங்கள் உங்கள் வயிற்றில் பசியை வளர்க்கத் தொடங்கினீர்.

இந்த வேள்வித் தீ தமிழகத்தின் நெஞ்சங்களிலெல்லாம் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிட்டது என்ற செய்தியை அறியும்போது நீண்ட காலமாக சிங்களத்தின் இனவாத நெருப்புக்குள் நின்று போராடும் எங்களுக்கு இச்செய்தி புதிய உட்வேகத்தை ஊட்டி நிற்கிறது.

நாங்கள் தனித்து விடப்பட்ட இனமல்ல. எங்களுக்கு பக்க பலமாக தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் கட்சி பேதங்களை மறந்து தமிழன் என்ற ஒரே உறவுணர்வுடன் எழுச்சிகொண்டிருப்பது கண்டு நிறைவடைகிறோம்.

உங்கள் உணர்வுகளுடன் எங்கள் இலட்சியப்பயணத்தை நாங்கள் தொடர்கிறோம்.

வேரும் விழுதுமாக நின்று விடுதலையை வென்றெடுப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

சார்! எப்போ தமிழ் ஈழம் பிரகடனம் செய்யப்போறீங்க? ஆவலாக இருக்கோம்

புள்ளிராஜா

Anonymous said...

i think there would have been more crowd at a an unknown newbie actor's movie than this Nedumaran's hunger strike melodrama...
i haven't seen a single picture of crowd gathering regarding this protest in any media....
please wake up and smell the coffee.....