போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கொண்ட உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்று அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமரின் செயலாளர் நாயர் ஆகியோரைச் சந்தித்த சிறிலங்கா தூதுக்குழுவினர் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதித் தீர்வினைத் தயாரிக்கும் போது தென்பகுதி மக்களினால் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டிருக்கும் அரசாங்க தூதுக்குழுவினர், எவ்வாறாயினும் நியாயமான சமமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து இந்திய அரசாங்கம் இணக்கத்தைக் காண்பிக்கவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டினால் தமிழ்நாட்டிலிருந்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என இந்தியத் தரப்பினரால் சிறிலங்கா தூதுக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம்மாத இறுதியில் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பது குறித்து இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அந்த நாளேட்டின் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி>புதினம்.
Saturday, September 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment