இனப்பிரச்சினை நிகழும் நாடுகளில் பணியாற்றும் தொண்டர் அமைப்புப் பணியாளர்களைப் போராளிகளாகவே அரசாங்கங்கள் சந்தேகிக்கின்றன என்று அனைத்துலக செய்தி ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர்சிற்காக நேற்று வெள்ளிக்கிழமை (31.08.07) பீற்றர் ஆப்ஸ் எழுதிய செய்தி ஆய்வின் தமிழ் வடிவம்:
தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்கள் தம்மை ஒரு நடுநிலையாளர்களாகவே கருதுவதுடன், மிகவும் முனைவாக்கப்பட்ட களமுனைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
எனினும் அவர்கள் ஒரு தரப்பிற்கு சார்பானவர்கள் என்றே குற்றம் சுமத்தப்படுகின்றனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் பெரும் ஆபத்தை சந்தித்துள்ளது.
ஈராக், ஆப்பானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் மோதல்களில் மேற்குலக உதவி நிறுவனப் பணியாளர்கள் கூட்டுப்படைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துடன் பார்க்கப்படுவதனால் பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றனர்.
எனினும் உலகில் உள்ள ஏனைய நாடுகளான எத்தியோப்பியா தொடக்கம் இலங்கை வரையிலும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்கள் போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதாக அந்நாட்டு அரசுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
"கிறிஸ்தவ தொண்டர் அமைப்புக்கள் உதவி வழங்குதல் என்ற போர்வையில் மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல முஸ்லிம் நாடுகள் சந்தேகப்படுவதாக" சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். இது அவர்களின் பணியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
"பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாதத்தினால் உதவிப்பணிகள் அதிகமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது அல்லது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது" என்று அனைத்துலக அபிவிருத்திக்கான ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான சமீர் எலாவாரி தெரிவித்துள்ளார்.
"உதவி அமைப்புக்கள் தமக்கு அதிகமான நெருக்கடிகள் உள்ளதாக உணரும் போது அவர்களின் செயற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும்" என்று எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"தொண்டர் அமைப்புக்கள் தாம் நடுநிலையானவர்கள் என்பதை நிரூபிப்பது எப்போதும் கடினமானது" என்று உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துக்கள் அதிகமானவை. அவர்கள் ஒரு தரப்பினருக்கு சார்பானவர்கள் என்ற காரணத்தால் கடத்தல்கள், படுகொலைகள், உதவி அமைப்புக்களின் அலுவலகங்கள் தாக்கப்படுதல், அவற்றின் மீது குண்டுவீசுதல், அவர்கள் பொதுமக்களிடம் செல்வதை தடுத்தல் என்பவை அதிகரித்துள்ளன.
செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது நடைபெறும் மிக அதிகமான தாக்குதல்கள்களால் வெளிநாட்டு உதவி நிறுவன பணியாளர்கள் பணியாற்றுவதற்கு எற்ற இடம் என்ற எல்லையை ஈராக் முற்று முழுதாக தாண்டிவிட்டது.
எனினும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளும் ஆபத்தானவையே. பல வெளிநாட்டு மக்களும், உதவி நிறுவன பணியாளர்களும் அங்கு கடத்தப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவைச் சேர்ந்த பணியாளர்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏனையோரின் குண்டுகள் துளைத்த சடலங்கள் வீதியோரங்களில் போடப்பட்டிருந்தன.
2006 ஆம் ஆண்டு 85 பணியாளர்கள் உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் உள்நாட்டுப் பணியாளர்கள். 2003 ஆம் ஆண்டு பக்தாத்தில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பணியாளர்கள் கொல்லப்பட்ட பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைகள் உயர்வானவை.
"மீள்கட்டுமானப் பணிகளில் தாம் கூட்டுப்படையினருடன் இணைந்து பணியாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் அதனால் மேற்குலகப் பணியாளர்கள் எப்போதுமே நடுநிiயாளர்களாக அங்கு பார்க்கப்படுவதில்லை" என்று தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தொண்டர் அமைப்புக்களின் வாகனங்கள் "நேட்டோ" படையினரின் வாகனங்கள் என தவறுதலாக குறிவைக்கப்படலாம் என்று தொண்டர் அமைப்புக்கள் அச்சமடைந்ததை தொடர்ந்து, நோர்வே இராணுவத்தினர் தமது இராணுவ மீள்கட்டுமானப் பணிகளுக்கு நான்கு சக்கர வெள்ளை நிற வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்ற உடன்பாடுக்கு கடந்த மே மாதம் வந்துள்ளனர்.
ஆனால் மேற்குலக உதவி அமைப்புக்களுக்கு மேற்கு நாட்டு அரசுகளே பரந்த அளவில் நிதியை வழங்கி வருகின்றன. எனினும் அவர்களே ஆப்கானிஸ்தானில் மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தொண்டர் நிறுவனப் பணியாளர்களை படையினருக்கு ஆதரவானவர்கள் என்று நம்புவதற்கான ஆபத்துக்கள் அங்கு எப்போதும் அதிகம்.
மேற்குலக நாடுகள் நேரடியாக பங்குபற்றாத களமுனைகளில், அந்த நாடுகளின் பணியாளர்கள் மோதலில் ஈடுபடும் இரு தரப்பிற்கும் இடையில் பணியாற்றும் போது அவர்கள் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் எத்தியோப்பியா, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அதன் ஒகடென் பகுதியில் இருந்து வெளியேற்றியிருந்தது. சோமாலியாப் போராளிகளுடன் அவர்களுக்கு தொடர்புகள் இருந்தாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் "தாம் தமது நடுநிலைமைக்கான எல்லைக்குள் தான் பணியாற்றி வந்ததாக" அனைத்துலக செஞ்சிலுவைச சங்கம் தெரிவித்திருந்தது.
"எத்தியோப்பியா அரசு மிகவும் கொடுமையான முறையில் கெரில்லா எதிர்ப்புப் போரை நடத்தி வருவதாகவும், உணவு விநியோகங்களையும் தடுத்து வருவதாகவும்" உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் "ஒருபுறம் குறிப்பிடத்தக்களவு உதவி நிறுவனப் பணியாளர்களும், சில வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் இருந்த போதும் அரசு பெரும் மனித அவலங்களை ஏற்படுத்த முயன்று வருவதாக" போராளிகள் தெரிவிக்கின்றனர்.
"வெளிநாட்டு உதவி அமைப்புக்கள் தலையிடுவதையோ அல்லது அங்கு நடைபெறும் சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்பதையோ சில சமயங்களில் அரசும், கெரில்லாக்களும் விரும்புவதில்லை" என்று ஆய்வாளர்களும், உதவி அமைப்புக்களின் பணியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
உலகில் மிக அதிகளவில் மனிதாபிமானப் பணிகள் நடைபெறும் சூடானின் டாபார் மாநிலத்தில் உள்ள உதவி நிறுவனங்கள் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக வெளிப்படையாக பேச முடியாது உள்ளதாக தெரிவித்துள்ளன. எனவே களத்தில் பணியாளர்களை நிறுத்தாது ஆலோசனைகளை வழங்கி வருவதாக அவை தெரிவித்துள்ளன.
சூடானிய அரசு மிகவும் உணர்திறன் உள்தாகவே செயற்பட்டு வருகின்றது. கடந்த வார இறுதியில் "கெயர்" என்ற அனைத்துலக அமைப்பின் உள்ளக அறிக்கை வெளிவந்ததை தொடர்ந்து அதன் தலைவரை நாட்டை விட்டு அது வெளியேற்றி இருந்தது.
போராளிகளின் நடவடிக்கைக்கு சார்பாக உதவி நிறுவனங்கள் மக்களை திசை திருப்புவதாக அரசுகள் சந்தேகப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். போராளிகளுடன் தொண்டர் அமைப்புக்கள் இணைந்து பணியாற்றுவதனால் அவர்கள் ஒரு சட்டரீதியான அமைப்புக்களாக மாற்றம் பெற்று விடலாம் எனவும் அரசுகள் அஞ்சுகின்றன. போராளிகளின் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார, சமூக, உதவி நடைவடிக்கைகள் அவர்களுக்கு உதவியாக அமையலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"தொண்டர் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கு தற்செயலாகவோ அல்லது திட்டமிட்ட வகையிலோ உதவி வருவதாக" சிறிலங்கா அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
"கடந்த ஆண்டு மூதூரில் தொண்டர் அமைப்பின் 17 பணியாளர்களை அரசே படுகொலை செய்ததாக" நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசு இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. "தொண்டர் அமைப்பின் பணியாளர்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருவதாக" மூத்த அரச அதிகாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்போரில் தமிழ் இன தொண்டர் நிறுவனப் பணியாளர்களை அரசு விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுகின்றது. இலங்கையில் கொல்லப்பட்ட எல்லாப் பணியாளர்களும் தமிழர்களே.
உள்ளூர்ப் பணியாளர்களிடம் ஆதரவுகளை கண்டறிவது கடினமானது என்று உதவி நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் தவிர்க்க முடியாத காரணங்களினால் மோதல்களில் அகப்பட்டுக் கொள்கின்றனர். எனினும் அதற்கு எதிரான பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு தாம் முயற்சித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"ஆனால் எந்த குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை அணுகி அவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டுமானாலும் நீங்கள் அந்த குழுவினருடன் தொடர்புகளை பேண வேண்டும்" என்று எலாவாரி தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Saturday, September 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment