சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை செல்வி வெளியிட்ட அறிக்கை:
தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை பல தசாப்தகாலங்களாக சிறிலங்காவானது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலைகள், கடத்தல்கள், எறிகணைத் தாக்குதல்கள், வான்குண்டுத் தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்கள், கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறிலங்கா அரச தலைவராக கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், அனைத்து வகையான மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள், அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் அதிகரித்தன.
கடந்த 21 மாத காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் 1,974 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதே குழுவினரால் 842 பேர் கடத்தப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினாலும் இதர அமைப்புகளாலும் இக்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் சிறிலங்கா அரசாங்கம் தனது தவறுகளை திருத்துவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
தமிழர் தாயகத்தில் தங்களது சொந்த வீடுகளில் வாழும் மக்கள் கூட பொருளாதாரத் தடைகளாலும் ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையாலும் பெருந்துயருக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலினால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக இடம்பெயர் நேரிட்டுள்ளது. இதனால் சிறார்களின் கல்விச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய செயற்பாடுகளை அப்படியே கைவிட்டு திடீரென இடம்பெயர்வதால் சொத்து இழப்பும் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள பலரும் அடிப்படை வசதிகளற்ற நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பகுதியில் இடம்பெயர்ந்தோர் வலுவில் மீள்குடியேற்றத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். இடம்பெயர்ந்த மக்களை தங்களது சொந்த வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த மக்கள் பிளாஸ்டிக் கொட்டகைகளில்தான் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அங்கு குடிநீரோ கழிப்பிட வசதிகளோ ஏதுமில்லை.
மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்கள் காலங் காலமாக பாரம்பரியாக வாழ்ந்த அப்பிரதேசங்களில் வாழ அனுமதிக்கப்படவில்லை.
கொல்லப்பட்டோர் விபரம்:
திருகோணமலை - 277
மன்னார் - 122
யாழ்ப்பாணம் - 607
மட்டக்களப்பு- 577
முல்லைத்தீவு - 74
அம்பாறை - 70
வவுனியா - 243
கிளிநொச்சி- 04
காணாமல் போதல்கள்:
திருமலை- 30
மன்னார் - 45
யாழ்ப்பாணம் - 624
மட்டக்களப்பு - 102
முல்லைத்தீவு - 04
அம்பாறை - 13
வவுனியா- 24
இதே காலப் பகுதியில் 16 வயதுக்கும் குறைந்த 69 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
150-க்கும் மேற்பட்ட சிறார்கள், யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் பாதுகாப்பு கோரி சரணடைந்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் 45-க்கும் மேற்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 11 ஊடகப் பணியாளர்களும் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவை குறித்த விரிவான தகவல்கள் இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களது சட்டபூர்வமான உரிமைகளுக்காக 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். தமிழ் மக்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலே ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் செயற்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் உரிமை சரத்தின்படி சுயநிர்ணய உரிமைக்காக தமிழ் மக்கள் போராடி வருகின்றனர்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, வவுனியாவில் பாரிய மனித உரிமை மீறல்களிலும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்களிலும் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்த வன்முறைகளை விடுதலைப் புலிகளின் பெயரினால் மூடி மறைக்க முயற்சிக்கிறது.
தமிழர் தாயகத்தின் இந்த யதார்த்த நிலைமையை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்றபோது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வேண்டுகோள் விடுக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர்,
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பிலான சிறப்பு பிரதிநிதி மான்ப்ரெட் நோவக்
இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் பிரதிநிதி வால்டெல் கொலின் ஆகியோர் எதிர்வரும் ஒக்ரோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் போது எமது நிர்வாக தமிழர் தாயகப் பகுதிகளை புறக்கணிக்காமல் இருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் என்று அதில் செல்வி தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.
Monday, September 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment