Monday, September 03, 2007

புலிகளின் முற்றுகையில் சிக்கியிருக்கும் யாழ். சிறிலங்கா இராணுவம்: "லக்பிம"



பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பலாலி சிறிலங்கா வான்படை தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவித்துள்ளது.
அந்த இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்:

யாழ்குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத் மீது கடந்த 21 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 130 மி.மீ நீண்டதூர பீரங்கித் தாக்குதல் குறித்து சிறிய சந்தேகம் இருந்தாலும், அது விடுதலைப் புலிகள் பூநகரிப் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதற்கான ஆதாரமாகும்.

யாழ். குடாநாட்டின் மீதான பெரும் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகள் பூநகரிப் பகுதியில் கனரக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சேமித்து வருகின்றனர் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த பல வாரங்களாக பூநகரிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுவதுடன், தொடர்ச்சியாக கனரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் நகர்த்தல்களும் அங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் இந்த பலப்படுத்தல்களை நோக்கும் போது அவர்கள் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாகர்கோவில், முகமாலை, எழுதுமட்டுவாள் பகுதிகளில் மேற்கொண்டதைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் கனரக வாகனங்கள் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. எனவே அவர்கள் தாக்குதல்களுக்கான தயார்படுத்தல்களின் போதே கனரக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கள முன்னணி நிலைகளுக்கு நகர்த்தி அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ஆயுதக் கிடங்குகளிலும், பீரங்கி நிலைகளிலும் பாதுகாத்து வருகின்றனர். இது விரைவான நகர்த்தும் திறனை அதிகரிக்கும் உத்தியாகும்.
ஆயுதங்களை நகர்த்துவதற்காக அதிக போராளிகளை பயன்படுத்துதல், வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றுதல் போன்றவற்றிற்காக விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கும் உத்தியுமாகும்.

ஆனையிறவு மீதான "ஓயாத அலைகள் - 03" மூன்று தாக்குதலின் போதும் விடுதலைப் புலிகள் தமது படையினரை செறிவாக்குவதை தவிர்த்திருந்தனர். இது முன்னைய பெரும் சமர்களில் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளின் தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புக்களை போன்ற சேதங்களை தவிர்க்கும் முயற்சியாகும்.

களமுன்னணி நிலைகளுக்கு அண்மையாக விநியோகங்களை அவர்கள் நகர்த்திவிட்டால், தாக்குதல் துப்பாக்கிகள், இலகு இயந்திர துப்பாக்கிகள், ஆர்.பி.ஜிக்கள் போன்றவற்றை களமுனைகளுக்கு பின்னர் நகர்த்துவது அவர்களுக்கு இலகுவாக இருக்கும்.
தமது போராளிகளை விரைவாக நகர்த்துவதில் விடுதலைப் புலிகள் ஏனைய கெரில்லாக் குழுவினரை விட மிகவும் சிறந்தவர்கள் என்பது வெளிப்படை.
கிளிநொச்சியில் உள்ள தமது பின்னிருக்கைப் போராளிகளை இரு புறமும் உள்ள களமுனைகளுக்கு நகர்த்துவதில் அவர்களுக்கு அதிக நேரம் எடுக்காது.
வடபோர்முனையில் உள்ள படையினர் மீதான தாக்குதல்களின் போது பூநகரியே பிரதான பீரங்கி ஏவுதளமாக செயற்படலாம். ஏனெனில் பூநகரியின் நீண்ட முனைப்பகுதியான கல்முனையில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரின் யாழ். குடாநாட்டு தலமையகம் 27 கி.மீ சுற்று வட்டாரத்தில் உள்ளது.
எனவே பலாலி, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன 130 மி.மீ பீரங்கியின் தாக்குதல் தூரவீச்சான 27 கி.மீ தூர வீச்சுக்குள் உள்ளது.

விடுதலைப் புலிகளிடம் நான்கு 130 மி.மீ ஹெவிச்சர் பீரங்கிகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இது அவர்களிடம் உள்ள
122 மி.மீ பீரங்கிகள் - 20
120 மி.மீ கனரக மோட்டார்கள் - 80
போன்ற கனரக ஆயுத தொகுதியின் ஒரு பகுதியாகும்.
எனினும் அதிக தூரவீச்சு கொண்ட சிறப்பான எறிகணைகளை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் பூநகரியின் உட்பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த அதிக தூர வீச்சுக்கொண்ட எறிகணைகளைப் பயன்படுத்தி 130 மி.மீ பீரங்கியினால் 38 கி.மீ தூரம் வரை சுட முடியும்.
விடுதலைப் புலிகளிடம் இத்தகைய எறிகணைகள் இருப்பது தற்போது உயர் இராணுவ அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் வன்னி மற்றும் மணலாற்றுப் பகுதிகளில் உள்ள தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தி வரும் அதே சமயம், அவர்களின் கண் யாழ். குடாநாடு மீதே உறுதியாக பதிந்துள்ளது.
எனவே யாழ். குடநாட்டில் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல்களைத் தொடுக்கும் போது வன்னி மற்றும் மணலாற்றுப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மீதான எதிர்த் தாக்குதல்களும் பலமானதாக இருக்கும்.

இருந்த போதும் வன்னியில் கைப்பற்றப்படும் பகுதிகளை தக்க வைப்பதற்கான நிலையில் விடுதலைப் புலிகள் இல்லை. ஏனெனில் அது நேரடியான விநியோக வழிகளைக்கொண்டது. எனவே சிறிலங்கா இராணுவத்தினரால் மேலதிக துருப்புக்களையும், விநியோகங்களையும் வழங்க முடியும்.

ஆனால் பலாலி வான்படைத் தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும்.

மேலும் விடுதலைப் புலிகள் நாகர்கோவில், முகமாலை முன்னரங்குகளை பின்தள்ளி கொடிகாமம் வரை முன்நகர்ந்தால், அவர்களின் பீரங்கி படையணிகளின் அசைவிற்கு அது அனுகூலமாகலாம்.
யாழ். குடாநாட்டுக்குள் ஊடுருவுவதும் தாக்குதல்களை நடத்துவதும் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு உத்தியாகும்.
கடந்த ஓகஸ்ட் 29 ஆம் நாள் அவர்கள் முகமாலைப் பகுதி ஊடாக ஊடுருவ முயற்சித்திருந்தனர். அதே போல இந்த வாரமும் யாழ். குடாநாட்டுக்குள்ளும் ஊடுருவ முயற்சித்திருந்தனர்.

யாழ். குடாநாட்டுக்குள் ஊடுருவும் விடுதலைப் புலிகள் அங்கு தாக்குதல்களை நடத்துவதுடன், எதிர்கால தாக்குதல்களின் போது அவர்களின் நேரடியற்ற சூட்டிற்கான இலக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களாகவும் செயற்படுகின்றனர்.
எனவே பெரும் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தயாராகி வருவதுடன் அவர்கள் வடபோர் முனையின் முன்னணி நிலைகளிலும் தம்மை பலப்படுத்தி வருகின்றனர். கிழக்கு மீதான இராணுவ நடவடிக்கையின் பின்னர் சமர்கள் ஓய்ந்திருப்பது அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
அதனை விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தலாம்.

எனவே சிறிலங்கா இராணுவத்தினர் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தொடர்வது அவசியமானது. இதன் மூலம் விடுதலைப் புலிகளை ஒரு தற்காப்பு நிலையில் வைத்திருக்க முடியும். கடந்த வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு மேற்காக உள்ள முள்ளிக்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.
அதன் போது இராணுவத்தினர் தாம் கைப்பற்றிய பல நிலைகளில் இருந்து பின்வாங்கியிருந்தனர்.

கடந்த பல மாதங்களாக விடுதலைப் புலிகளை ஒரு தற்காப்பு நிலையில் சிறிலங்கா இராணுவத்தினர் வைத்து வருகின்றனர். எனினும் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினர் தமது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நிறுத்தியிருப்பது விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தொடுப்பதற்கு ஏதுவாக அமையலாம் என்று இராணுவ மற்றும் பொதுமக்கள் தரப்பு புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறையில் கடந்த சனிக்கிழமை மற்றொரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு கொமோண்டோப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் கடும் எதிர் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இது மன்னார் வவுனியா வீதிக்கு தெற்கு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையாகும்.
வவுனியாவில் இருந்து மன்னார் நகருக்கான தொடர்பை துண்டிப்பதற்கு விடுதலைப் புலிகள் சிலாவத்துறையை பயன்படுத்தலாம் என்ற அச்சம் இராணுவத்தினரிடம் உள்ளது.

அதாவது வவுனியா - மன்னார் வீதியின் இருபுறமும் உள்ள காட்டு பகுதிகளை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனவே இருபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் அவர்கள் மன்னாருக்கான தொடர்பை துண்டிக்கலாம் என்ற அச்சம் இராணுவத்தினரின் மத்தியில் இருக்கின்றது. இந்த தாக்குதல் மூலம் வன்னியின் படை நடவடிக்கையை அதன் முக்கிய கட்டத்தில் திசை திருப்ப முடியும். சிலாவத்துறையை விடுதலைப் புலிகள் தமது கடல் நடவடிக்கைக்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: