Wednesday, September 19, 2007

தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள்- தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?

தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் மற்றும் அரசாங்கங்களால் விதிக்கப்படும் தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கம் அளித்துள்ளார்.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் எழுத்து வடிவம்:

இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஊடாகவும் அனைத்துலகம் சொல்கின்ற சில நடைமுறைகளுக்கு ஊடாகவும் சில விடயங்களில் ஒத்துப் போகின்றோம். அளவுக்கு மீறிப் போனால் ஒத்துப்போக முடியாத விடயங்களில் ஒத்துப் போக முடியாதுதான். ஆனால் பல வழிகளில் நாங்கள் ஒத்துப் போய் இருக்கின்றோம்.

இன்றைய சமாதானப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட நல்ல பயன் என்னவென்று சொன்னால், அனைத்துலக அளவில் செய்தித்தாள்களாக இருக்கலாம், தொலைக்காட்சிகளாக இருக்கலாம், அவர்களும், அரசியல் சார்ந்தவர்களும் இங்கு வந்தனர். மக்களைப் பார்த்தனர். இங்குள்ள நிலைமைகளைப் பார்த்தனர். முன்பு வீட்டளவிலே கேள்விப்பட்ட விடயங்கள், யாரோ சொன்னவற்றிலிருந்து புரிந்து கொண்ட விடயங்களுக்கு அப்பாற்பட்டு இங்கு கள உண்மை என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது.

இன்று, அவர்கள் தங்கள் கொள்கை சார்ந்த சில விடயங்களைப் பேசினாலும் கூட கள நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டார்கள்.

அதனால் அனைத்துலக ரீதியாக அரசு மட்டங்களிலும், மக்கள் மட்டங்களிலும் ஒரு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பான சில கருத்துருவாக்கங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெற வேண்டும்.

முன்பைவிட அனைத்துலகம் என்பது தமிழ் மக்கள் விடயத்தில் ஆழமான ஒரு விழிப்புணர்வை இப்போது பெற்றுள்ளது என்பது உண்மை. அது ஒரு முழுமையான விழிப்புணர்வு பெற்ற நிலைமைக்கு அப்பாற்பட்டு செயற்படுமானால், நாங்கள் போராடத்தான் வேண்டும். அதற்குப் பக்கபலமாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் நிற்கத்தான் வேண்டியிருக்கும்.

வெற்றி என்பது இன்று வருமா நாளை வருமா என்று கேட்டுக் கொண்டிருக்காமல், எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதுதான் எங்கள் பணி.

அதே நேரத்தில் இந்த சமாதானத்தால் மாற்றங்கள் ஏற்படுவதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இன்னும் செயற்பாடு ரீதியாக ஒன்றும் நடைபெறவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சில இடங்களில் சிலவற்றைச் செய்யவேண்டிய நிலைமைக்கு சிங்கள அரசால் அவர்கள் தள்ளப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினால் நாங்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் அதற்காக அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் செயற்படவில்லை.

உலக அரசியலில் ஒரு பக்கமாகத்தான் எல்லாம் நடைபெறும். ஆனாலும் ஏதோ ஒரு கட்டத்திலே அவர்கள் இந்த சிங்கள அரசாங்கத்துடன் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்படலாம். அவர்களும் சில விடயங்களைப் பார்க்கிறார்கள்.

விடுதலைப் புலிகள், அடக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் ஏதாவதொரு தீர்வுத் திட்டத்தை அது உண்மையில் ஒரு போலியாக இருந்தாலும் அதனை முன்வைக்கும். அதற்கு ஊடாக ஏதாவது செய்வதுபோல் காட்டிக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு போக்கை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பது தெரியும். ஆக ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்துலகம் ஒட்டுமொத்தமாக இதிலிருந்து விலக வேண்டி வரலாம். ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டி வரலாம்.
ஆக்கப்பூர்வமாக செயற்படாது போனால், அவர்கள் தங்கள் சார்ந்த, தங்கள் விடயங்கள் சார்ந்து ஒரு தோல்வியை ஏற்கத்தான் வேண்டும்.

அதனை எவ்வளவு தூரம் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் எதிர்மறையாக அவர்கள் செயற்படவில்லை என்ற ஒரு கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக நாங்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாகும்.

ஒருவகையில் இந்தப் புலம்பெயர் வாழ் தமிழர்களுடைய வளர்ச்சி மூலம், அவர்கள் செய்கின்ற பண உதவியை அல்லது வேறு பல உதவிகளை நிறுத்துவதன் மூலம், புலிகளை செயலிழக்கச் செய்யலாம் என்று இந்த அனைத்துலக நாடுகள் நினைக்கின்றன. அந்த வகையிலே இந்தப் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை தரத்தான் அதனைச் செய்கிறார்கள். புலம்பெயர் வாழ் மக்கள் ஒன்றை தெரிந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அனைத்து நாடுகளும் பல சட்டதிட்டங்களை வைத்திருக்கின்றன. அதற்குள் பல ஓட்டைகளை வைத்திருக்கின்றன.

ஏனெனில் அவற்றின் மூலம் தாங்களும் தப்ப வேண்டும் என்பதற்காகவே அந்த ஓட்டைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. ஆக அனைத்துலக நாடுகளுடைய அந்த அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத்தான் புலம்பெயர் வாழ் தமிழர்கள் போராட்டங்களை நடத்த முடியும், சட்டத்திற்குள் நுழைந்து வர முடியும். இவர்களில் ஒருசிலரைப் பிடித்து விட்டார்கள் என்பதற்காக ஒதுங்கிப்போய் இருப்பதென்பது சரியான முறையல்ல.

ஏதோ வகையில் அந்த நாட்டுக்குரிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட அங்கு பெரிய போராட்டங்களை அவர்கள் நடத்த முடியும். தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும்போது, சில பிரச்சினைகள் வரலாம். சில வேளைகளில் சிலரைக் கைது செய்யலாம், அவர்களைச் சிறையில் அடைக்கலாம். அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மக்கள் போராடினால், அந்த நாட்டினுடைய கொடுமையான இந்த அடக்குமுறைகள் தோல்வி அடையும்.

ஒரு கட்டத்துக்கு மீறி ஓரளவுக்கு ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றையெல்லாம் வெளிநாடுகளுக்குச் சொல்வதற்காக, தங்கள் மக்களுக்காக விட்டு வைக்கிறார்கள். இவையெல்லாம் தங்களைப் பாதிக்கிறது என்பதனை அந்தந்த நாட்டு மக்கள் உணரும்போது அவர்களும் எங்கள் போராட்டத்துடன் இணையத்தான் செய்வார்கள், எங்களுடன் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.

எனவே அங்கே, நாங்கள் எவ்வளவு உற்சாகமாக, உறுதியாக துணிந்து அந்த நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு ஊடாக, அவர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களில் இருக்கின்ற ஓட்ட, உடைவுகளுக்கு ஊடாக அவர்கள், கூறுகின்ற சட்டங்களை உடைப்பதற்கான ஒரு முயற்சியை செய்வோமாக இருந்தோமானால் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதில் நாங்கள் தோற்க மாட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழர்களின் முழுமையான செயற்பாடுகள் என்ன என்பதனை நான் முழுமையாக அறிந்துகொண்டவன் அல்ல.

கடமையுணர்வோடு பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து புலம்பெயர் வாழ் தமிழர்கள் கணிசமான பங்களிப்பை இடைப்பட்ட காலத்தில் செய்திருக்கிறார்கள் என்பதனை நாம் அறிவோம்.

ஆனால் அந்தப் பங்களிப்பையும் அந்த முயற்சியையும் தடுப்பதற்கான ஒரு முயற்சியைத்தான் அனைத்துலக அரசுகள் செய்கின்றன. புரப்புரைகளும் அந்த வகையிலேதான் சிங்கள அரசும் பலரும் செய்கின்றனர்.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

அதாவது என்னவெனில், நாங்கள் உதவுவோம், தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது.

நாங்கள் எவ்வளவுக்களவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும்.

எங்களுக்குரிய பணி என்னவென்று சொன்னால் அங்கு போராடுகின்ற நோக்கம் இதுதான்.

எங்களுடைய குறிக்கோளில் தடம்புரண்டதில்லை. 20 ஆயிரத்துக்கும் மேலான போராளிகளை, பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்துக்காக உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த மண் மீட்கப்பட வேண்டுமானால், எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எங்களால் இந்தப் போராட்டம் வலுவூட்டப்பட வேண்டும் என்பதிலே குழப்பம் அடையாமல், அனைத்துலகம் எந்த வகையில் தடைபோட்டாலும், அச்சுறுத்தினாலும், அதற்கு அப்பாற்பட்டு, பரப்புரைகள் எல்லாம் சரிகள் இருக்கலாம் பிழைகள் இருக்கலாம் அது வேறு விடயம். அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, நாங்கள் ஒன்றுபட்டு நின்று இந்தப் போராட்டத்தில் நிச்சயமாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு, இப்போது எந்த வகையில் அவர்கள் உதவி செய்தார்களோ, இப்போது சிலவேளை அச்சம் காரணமாக அவர்கள் ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அந்த ஒதுக்கத்திலிருந்து வெளியே வந்து அவர்கள் மீண்டும் எப்படி எங்களோடு நின்றார்களோ, அதுபோல எங்களுடன் இருப்பார்கள் என்றால், எங்களுக்கு நம்பிக்கை தரும். எங்களுடைய உளவுரணை கூட்டும். நாங்கள் பல விடயங்களை எளிதாகச் சாதிக்க உதவும்.

கூட்டு முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தனிமனித முயற்சி என்பதும் முக்கியம் எனக் கருதுகிறேன். நாங்கள் கணினிகளைப் பயன்படுத்தலாம், தொலைக்காட்சியைப் பயன்படுத்தலாம், செய்தித்தாள்களைப் பயன்படுத்தலாம்....

ஆனால் உள்ளூரில் இருக்கின்றவர்கள் தங்களின் கருத்துக்களைச் சொல்லலாம்.

இங்கு நடக்கின்றன படுகொலைகளை, இங்கு நடைபெறும் கொடுமைகள், அனைத்துலக நாடுகள் அவற்றைக் கண்டும் காணாமல் இருக்கின்ற தன்மைகள், இவற்றையெல்லாம் துண்டுப் பிரசுரங்களாகவோ, கலந்துரையாடல்களாகவோ வெளியிட்டு அல்லது இதுபோன்ற வேறு வகையிலோ தொடர்ந்து செய்து கொண்டுதான் வர வேண்டும்.

பல நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அல்லது மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களாக இருக்கலாம். அவர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் கலந்து உரையாடுவதும், அவர்களுடன் பண்பாடு ரீதியில், கலாச்சார ரீதியில் உறவுகளை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் இக்கருத்துக்களை முன்வைப்பதும், இப்படியாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

இதனைப் பலர் சேர்ந்து செய்யலாம். அல்லது தனிமனிதராகவும் செய்ய முடியும்.

காசி அண்ணையை எடுத்துக்கொண்டால், ஈழவேந்தனை எடுத்துக் கொண்டால் அவர்கள் தனி மனிதர்கள்தான்.

அவர்கள் உலகம் எல்லாம் செல்கிறார்கள்.

இந்தியாவில் இருந்தபோது தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர். ஈழவேந்தனை எடுத்துக்கொண்டால் உலகம் எல்லாம் செல்லும் இடங்களில் தன் கருத்துக்களை சொல்லி வருகிறார். அதில் இருக்கின்ற விடயம் என்வெனில், அது எந்தளவில் வெற்றியைக் கொடுக்கிறது என்பதும் முக்கியமல்ல.

நீங்கள் செய்ய வேண்டிய வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். எல்லோருடனும் தொடர்பு கொண்டு, உறவாடி, நட்பை வளர்ப்பதுதான் முக்கியம். அந்த நட்பின் துணையோடு கருத்துக்களை வளர்ப்பது.

இதன் மூலம் எங்களுக்குரிய தொடர்பாடல்களை உருவாக்குவதும் முக்கியம்.

இத்தகைய தொடர்பாடல்களும், தொடர்புகளும், அவர்களின் மூலமாகக் கிடைக்கும் நட்பும்தான் பல போராட்டங்களின் தலைவிதியை தீர்மானித்துள்ளன.

ஆகவே அந்த முயற்சியிலேயே எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கணிசமான நேரத்தை ஒதுக்கிச் செயற்பட வேண்டும். அது பெரிய பயனைத் தரும்.

இங்கு நான் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அங்கு எனென்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், என்னென்ன செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. நாங்கள் சில விடயங்களைச் குறைவென்று சொல்லிவிடலாம்தான். ஆனால் அது பலருடைய மனதைப் புண்படுத்தக்கூடும். ஆகவே இதற்கு அப்பாற்பட்டு, இருக்கின்ற சிக்கல் என்னவெனில், பொதுவாக மனித இயல்பு எப்படிப்பட்டதென்றால், வெற்றிகளைக் கண்டு பூரிப்பதும், தோல்விகளைக் கண்டு துவளுவதும்தான். இந்த இயல்பு பொதுவானது.

இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்ற மனிதர்கள், இதனையெல்லாம் பொதுவாகப் பார்க்கின்ற மனிதர்கள், தெளிவான பார்வை உடையவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தொடர்ச்சியாக அவர்களது பங்களிப்புக்கு உற்சாகமூட்டி, தொடர்ந்து செயற்பட வேண்டிய சூழல்தான் இருக்கிறது.

அதாவது வெற்றியின்போது பலர் கூட இருப்பார்கள். தோல்வியின்போது ஒருவரும் உடன் இருக்கமாட்டார்கள். இதனைப் பலமுறை சந்தித்திருக்கிறோம்.

ஆக இப்படியான கால கட்டங்களில்தான் குறிப்பிட்ட சில மனிதர்களின் முயற்சி என்பது முக்கியமாகிறது.

இதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் தானே பொறுப்பேற்றுக்கொண்டு செயல்பட முன்வருவார்களேயானால், இங்கு பரப்புரை செய்பவர்களுக்கு பக்கபலமாக உதவியாக இருக்கும்.

ஊடகங்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரின் தொன்மையை, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினுடைய ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை கேள்விக்குறியின்றி வெளியிட வேண்டும்.

இந்த விடயத்தில் அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது. உதாரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டால், டி.பி.எஸ்.ஜெயராஜ் போன்றவர்கள் தங்களை நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொண்டு பல்வேறு விடயங்களை எழுதுவார்கள். ஆனால் சில விடயங்களில் இடறுவார்கள். அது முறையுமல்ல, சரியுமல்ல. அவரிடமும் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

அமெரிக்காவில் மனித விழுமியங்கள் என்று பேசுகிறார்கள் என்று சொன்னால், அது ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் ஒன்றிரண்டு கொப்புக்களை தட்டவிடுவார்கள். நாங்கள் இந்த ஆலமரத்தின் நிழலுக்குள்ளே உயிர்த்தெழுந்து வருகின்ற ஒரு சிறிய மரம். இதனை கொப்புத் தட்டுகின்ற வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டாம்.

அவர்கள் தட்ட விடுகிறார்கள் என்பது உண்மையில் அது பொய்மை. இதற்குள் சேரன் போன்றவர்கள் கூட ஒரு காலத்தில் அகப்பட்டுத்தான் கிடந்தார்கள். அவர்கள் பேசிய மனித விழுமியங்களை அவர்கள் கைவிட்டு விட்டு குவான்தம் பே அப்படி, இப்படி சிறைக்கைதிகள் மீது சித்ரவதை என்பதெல்லாம் இன்று வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இது இன்று நடக்கின்ற விடயமில்லை. காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் விடயம்தான். ஆனாலும் இவர்கள் அள்ளுப் போகின்ற தன்மையொன்று உண்டு.

இவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்தே செயற்படும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் முழுமையான அர்ப்பணிப்போடு, அந்தப் போராட்டத்தினுடைய சரியான விடயங்களை தெளிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும்.

அதில் இடையிடையே குழப்பம் இருக்கத் தேவையில்லை. இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்கு எதிராக உலக அரசாங்கம் மட்டுமல்ல, சிங்கள அரசாங்கம் மட்டுமல்ல, பல்வேறு சிறுசிறு குழுக்களும் பரப்புரை செய்கின்றன.

நாங்கள் ஒன்றுபட்டு நிற்போமேயானால் அவர்களுடைய பரப்புரைகள் எல்லாம் தோல்வியடைந்து எங்களுடைய பரப்புரைகள் வெற்றி பெறும். இதில் நாங்கள் தெளிவாக இருந்தால் போதும். அதனைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.

இந்தியா

இந்திய அரசைப் பொறுத்த வரையில் அந்த அரசினுடைய அதிகார வர்க்கங்கள் சில தமிழர்கள் என்றாலே ஒருவித பகைமை உணர்வைக் கொண்டிருக்கின்றன. அண்மையில் 'றோ'வின் தலைவராக இருந்த வர்மா கூட அதனை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசியலில் குறிப்பிட்ட சிலர், ஆழமாக திட்டமிட்டு அரசியல் செய்கிறார்களா என்பதற்கு அப்பாற்பட்டு, தமிழர்கள் என்றாலே ஒருவித பகைமை உணர்வு அவர்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தொன்மையான நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் திராவிடர்கள் என்று சொல்லப்பட்டாலும், அதன் மூல நாயகர்கள் தமிழர்கள்தான். இதனை இந்தியாவின் இன்றயை வரலாற்றை எழுதக்கூடிய பலர் ஏற்றுக்கொண்ட விடயம்.

இலங்கையில் உள்ள சிக்கலைப் போன்று அங்கே பலருக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன.

அந்தச் சிக்கல்களுக்குள்ளே தமிழர்கள் குறித்த பல விடயங்கள் இருக்கின்றன. இதன் மூலமாக பல பிரச்சினைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால்கூட எங்களைப் பற்றி, அங்குள்ள ஊடகங்களினூடாக பல பொய்யான கருத்துக்களை உருவாக்கி, ஒரு பிரச்சினை என்றால், அதைப் பெரிதுபடுத்தி பூதாகரமாகக் காட்டுகிறார்கள். அங்குள்ள ஊடகங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை.

இதில் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவெனில், சிங்கள அரசின் போக்கு, இந்தியர்களுக்கு எதிரானது என்பதனை இந்தியாவில் உள்ள பலர் இப்போது சுட்டிக்காட்டுகிறார்கள்.

இன்று இந்தியா, அமெரிக்காவுடன் இணக்கமான ஒரு போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் சிங்கள அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் ஏதோ ஒருவகையிலே, இந்திய நலனுக்கு எதிரானது என்பதனை இவ்வளவு காலமாக சுட்டிக்காட்டாதவர்கள் கூட அண்மைக்காலமாக சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆக, இந்திய அரசாங்கத்தின் போக்கிலே ஒரு மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதன் நலன் சார்ந்து கூட இந்த மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் அந்த அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. அவ்வாறு செயற்படுவதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் காணவில்லை. எனினும், அண்மைக்காலமாக பல ஆய்வாளர்கள், எங்களோடு பேச்சு நடத்தியவர்களுடன் தொடர்புடையவர்கள், எங்களைப் பற்றி கடுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களும் கூட, எங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்று சிங்கள அரசின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கும்போது அது இந்திய நலனுக்கு உகந்ததாக அமையவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

காலப்போக்கில் அவர்கள் சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறி, நடுநிலைமை வகித்தால் அதுவே எங்களுக்குப் போதுமானதுதான். இது நடைபெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்பட வேண்டும்.

ஏனெனில் இந்தியாவுடன் உறவு ஏற்பட்டால்தான் உலக நாடுகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். அதற்கான முயற்சிகளோடும் நம்பிக்கையோடும் நாங்கள் இருக்கிறோம்.

இன்று அதுமாதிரியான சூழ்நிலை இல்லை என்றாலும், இருந்தாலும் நாங்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்கு பல சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் உறுதியாக சில முடிவுகளை எடுத்தால், அவர்கள் உறுதியாக ஒரு செயற்பாட்டுக்கு வந்தால், மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.

அவரவர்க்கு பல அரசியல் நிர்பந்தங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சிங்கள அரசாங்கம் தமிழர்களை அடியோடு அழிப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் தெரியும்.

எனவே அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் ஆங்காங்கே எங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத்தான் செய்கிறார்கள். ஒருமித்த குரலாக எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும்போது இந்தியாவின் மத்திய அரசும் மாறுவதனைத் தவிர வேறு வழியில்லை. இந்திய மத்திய அரசுக்கு அங்குள்ள மக்கள் தரும் அழுத்தம் தவிர இந்திய அரசும் தனது நலன் கருதி மாற வேண்டிய சூழ்நிலையும் வரும்.

முன்பே சொன்னதுபோல இது நடக்குமா நடக்காதா என்று பார்ப்பது எங்கள் வேலை அல்ல. எங்களுடைய பணி என்பது எங்களுக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதுதான். காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை.

நான் முன்பே சொன்னதுபோல இந்த விடயங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கின்ற போது பல சிக்கல்கள் ஏற்படும்.

இன்று தமிழகத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்கள் குரல் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆங்காங்கே எங்கள் சார்பாக போராட்டங்களை நடத்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்களுக்குள்ள ஒரு கவலை என்னவென்று சொன்னால், இராமதாசாக இருந்தாலும் சரி, நெடுமாறன் ஐயாவாக இருந்தாலும் சரி, வைகோவாக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி, தனித்தனியாக அல்லாமல் இவர்கள் எல்லோரும் ஈழத் தமிழர்கள் விடயங்கத்தில் ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்த குரலாக செயற்படுவார்களேயானால், மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். அந்தக் காலத்தை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்தியாவின் அனுசரணை என்பதல்ல முக்கியம். இதில் பிரச்னை என்னவென்று சொன்னால், தனிநாடு என்கிற அங்கீகாரம் வருகின்றன போது, உலக நாடுகளின் அங்கீகாரம் என்று வருகின்ற போது, இந்திய அரசின் கருத்தையும் உலக நாடுகள் கேட்கும். ஆனால் அது ஒரு நிலை.

எங்களைப் பொறுத்தவரையில் இந்திய அரசு அனுசரணை செய்துதான் நாங்கள் போராட்டத்தை வெல்வோம் என்றில்லை.

புலம்பெயர்வாழ் தமிழர்கள், உலகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எல்லாம் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், யார் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அதற்குரிய நம்பிக்கையும் உறுதியும் அர்ப்பணிப்பும் எங்கள் மண்ணில் உள்ள போராளிகளிடம் உண்டு. அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு.

எனவே உலகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு இருப்பார்களேயானால் யாருடைய அனுசரணையும் எமக்கு தேவையில்லை.

ஆனால் தனிநாடு என்று வருகின்றபோது இவர்களுடைய ஆதரவு நிலை தேவைதான். ஆக அத்தகைய களச்சூழல் வரும்போது, ஆதரவு நிலையும் வரும். இந்த நம்பிக்கையுண்டு.

இங்கே இந்தப் புலம்பெயர்ந்த நாடுகளில் எப்படி அந்த அரசுகளுடன் உறவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதுபோல தமிழகத்தில் இருப்பவர்களோடும், இந்திய அரசியலில் இருப்பவர்களோடும், டில்லியில் உள்ள அமைப்புக்களோடும் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய பணி புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு. அவர்கள் செய்கின்ற பல பணிகளில் இதுவும் ஒன்று.

ஆனால் இந்தியா அனுசரணை இருந்தால்தான் இந்தப் போராட்டம் நடக்கும், வெற்றி பெறும் என்று நினைத்துப் போராட முடியாது.

நாங்கள் இவ்வளவு காலம் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். தமிழ் மக்கள் எங்களுடன் ஒன்றாக இருந்தாலே போதும். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பொருளில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இதில் இருந்த விடயம் என்னவெனில், மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்களைச் சார்ந்தவர்கள் யாராவது அங்கே பேசிக் கொண்டிருப்பார்கள். அங்கே இருந்து கொண்டு அரசின் வாய்ப்பு வளங்களைப் பயன்படுத்திக் கொண்டு எங்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள். இது அரசினுடைய வாய்ப்பு வளங்களைப் பயன்படுத்திக்கொண்டு எங்கள் சார்பான நடவடிக்கைகளை இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது வேறு விடயம்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்கு அப்பாற்பட்டு, இந்தப் போராட்டத்தில் புலிகளுக்குச் சார்பாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பக்கூடிய அளவுக்கு அந்த இயக்கம் பலமாக இருக்கின்றது என்ற வகையில், ஒரு கருத்தியல் உருவாக்குவதில் அது சார்பாக இருக்கிறது.

அரசியல் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நடப்பதில்லை. அதற்கென சில வளைவு, நெளிவு, சுழிவுகளும் உண்டு. இந்த வளைவு, நெளிவு சுழிவுகளுக்குள் பாதை மாறாமல், எங்கள் இலக்கை நோக்கிச் சென்றால் சரி. அந்த வகையில் இதில் கிடைக்கின்ற வளங்களை எதிரிகள் பயன்படுத்துவதனை தடுக்க வேண்டும். அதற்கு ஊடாக வருகின்ற சில சாதகமான நிலைகளை பெற்றுக்கொள்வதனைத்தவிர தவிர வேறு எதற்கும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும்.

எங்களை அடக்குகின்றவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவர்கள் எங்கள் மீது அடக்குமுறைகளைப் பயன்படுத்தினாலும் சரி, நாங்கள் போராடுவோம்.

எங்கள் மண்ணை மீட்கின்ற வரை எங்கள் போராட்டம் தொடரும். அந்தப் போராட்டத்தை நாங்கள் நிச்சயமாக மிகுந்த அர்ப்பணிப்போடு நடத்துவோம். இதனைச் சொல்கின்ற அதேவேளையில், இத்தகைய அர்ப்பணிப்புடன் இங்கே போராடும் போராளிகளுக்கு அதனை வழிநடத்துகின்ற தலைவருக்கு உறுதுணையாக பக்கபலமாக பல வழிகளிலும் இந்தப் புலம்பெயர் வாழ் தமிழர்கள் மன வேறுபாடுகளை, தனிப்பட்ட கோப-தாபங்களை, பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு, தமிழர்களுக்கு ஒருநாடு வேண்டும் என்ற உணர்வோடு, ஒன்றுபட்டு நின்றால், நிற்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையும் வேண்டுதலும் ஆகும் என்றார் யோகி.
நன்றி>புதினம்.

No comments: