Thursday, September 06, 2007

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தை சிறிலங்காவுக்கு எதிராக பயன்படுத்தவும்: அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு!

சிறிலங்காவில் மிக வேகமாக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் ஆறாவது கூட்டத்தொடரை பயன்படுத்துமாறு அதன் உறுப்பு நாடுகளுக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.


இது தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04.09.07) அனைத்துலக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்காவில் நடைபெறும் சம்பவங்களில் பொதுமக்கள் மோதல்களுக்கு இடையில் சிக்கி பாதிப்படைவதை விட திட்டமிட்ட முறையில் அரச படையினராலும், அதன் துணை இராணுவக் குழுவினராலும், விடுதலைப் புலிகளினாலும் குறிவைக்கப்படுகின்றனர் என்பது மிகுந்த வேதனையை தருகின்றது.

சிறிலங்கா அரசிற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசின் கருத்துக்களை முன்வைப்பதற்காக சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான அரச குழுவினர் இந்த கூட்டத்தொடரில் பங்குபற்ற உள்ளனர்.

பொதுமக்கள் மீது சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நீதிக்கு புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் என்பன அங்கு நாளாந்த நடவடிக்கையாகி விட்டது. பல நுற்றுக்கணக்கான நீதிக்கு புறம்பான படுகொலைகளும், பல நூற்றுக்கணக்கான பலவந்தமாக காணாமல் போகச் செய்தல்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் பதிவாகி உள்ளன.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான விரைவான நடவடிக்கை தேவை. 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து நடைபெற்று வரும் மோதல்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வார இறுதியில் மன்னாரில் இரு சிறுவர்கள் உட்பட 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அண்மைய நாட்களில் 4,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளினால் ஏறத்தாழ 290,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும் பெண்களுமாவார். பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிக்கான வழிகளும் கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உதவி நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான நிறுவனங்களின் பணியாளர்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடுவதற்காக அரசின் மீது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு காரணமானவர்கள் மீதான விசாரணைகளையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் அரசு செயற்திறன் மிக்க வகையில் மேற்கொள்வதில்லை.

வடக்கு - கிழக்கில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகங்களை உறுதி செய்தல் மற்றும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுகளின் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குதல் என்பவற்றை அதிகார தரப்பு மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களால் இடம்பெயர்ந்த மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அரசின் அவசரகாலச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் தொடர்பாக நாம் எமது கவலைகளை பல வருடங்களாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றோம். இந்த சரத்துக்கள் தவறுகளையும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதிகளவான தடைகளையும் ஏற்படுத்தும் வண்ணம் அச்சுறுத்தலானவை.

படையினரை பயன்படுத்தவும், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அற்ற நிலையிலும் ஒருவரை தடுத்து வைக்கவும் இந்த புதிய நடைமுறைகள் அரசிற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

உதாரணமாக அவசரகாலச் சட்ட விதிகளில் உள்ள 6 ஆவது சரத்தில் பயங்கரவாதம் மட்டுமல்லாது, குறிப்பிட்ட பயங்கரவாத செயற்பாடுகள், மேலும் பயங்கரவாதம் தொடர்பான செயற்பாடுகள், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர், குழு அல்லது குழுவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் 7 ஆவது சரத்து ஏனையவற்றை குறிப்பிடுகின்றது. அதாவது ஊக்குவித்தல், ஆதரவளித்தல், ஆலோசனை வழங்குதல், உதவி புரிதல், சார்பாக செயற்படுதல், திட்டமிடல், செயற்பாடுகளில் அல்லது நிகழ்வுகளில் பங்குபற்றுதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர். குழுவினர். அமைப்புக்கள் ஆறாவது சரத்தை மீறியதாக கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள பல சரத்துக்கள் மிகவும் தெளிவற்ற முறையிலும், பொதுவாகவும் வரையப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஊடக விசாரணைகள், அறிக்கைகள் போன்ற பரந்த அளவிலான செயற்பாடுகள் மீது பிரயோகிக்கப்பட முடியும். சட்டத்திற்கு முரணான இந்த அணுகுமுறைகள் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படுவதை இட்டு எமது அமைப்பு கவலை அடைகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: