Saturday, September 29, 2007

கத்தோலிக்க மதகுருமார் படுகொலை: ஹரித்தாஸ் கண்டனம்!!!

கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஹரித்தாஸ் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


ஹரித்தாஸ் அமைப்பின் அனைத்துல செயலாளர் லெஸ்லி ஆன் நைட் கூறியதாவது:

இலங்கையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அங்கு அமைதி உருவாக்கப்பட வேண்டும் என்பதனை வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்ற மனிதாபிமானப் பணியாளர் யுத்தத்தினால் பாதிக்கப்படுகிறவர்களாக இருக்கின்றனர். இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருமே மனிதாபிமானப் பணியாளர்களினது வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும்.

அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் சேவையாற்றிய மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் என்றார் அவர்.

இது தொடர்பில் ஹரித்தாசின் சிறிலங்காவுக்கான தேசிய இயக்குநர் டமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது:

அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் படுகொலையானது எம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விளிம்புநிலை மற்றும் ஏழை மக்களுக்கான பணியில் தன்னை அவர் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டவர். எமது சமூகத்தின் ஆயுதம் ஏந்தாத அமைதியை விரும்பும் நாயகர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களும் படுகொலைகளும் வெறுக்கத்தக்கதாகும்.

அப்பாவி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான வன்முறைகளையும் நாம் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். இத்தகைய வன்முறைகளை அனைத்து மத இலங்கையர்களும் கண்டிக்க வேண்டும். இந்த நாட்டில் அமைதியை உருவாக்க இணைய வேண்டும். மோதலில் தொடர்புபட்ட தரப்புகள், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

கத்தோலிக்க மதகுருமாரின் படுகொலை அனைத்துலக சமூகம் கண்டனம் செய்வதோடு அர்த்தமில்லாத தற்போதைய யுத்தத்தையும் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: