Friday, October 26, 2007

புதிய இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்ய இந்தியா உதவி?

அனுராதபுரம் வான் படைத்தளத்தில் புலிகளால் சிறிலங்காவின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு பசில் ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

அனுராதபுரம் வான் படைத்தளத்தில் திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அனைத்து வானூர்திகளும் உலங்குவானூர்திகளும் அகற்றப்பட்டு "நட்பு நாடுகளின்" உதவியுடன் விரைவில் சீரமைக்கப்படும்.

இது விடயத்தில் உதவுவதற்காக பல நாடுகள் எம்மைத் தொடர்பு கொண்டுள்ளன. "வெளிப்படையான சில காரணங்களால்" அந்த நாடுகளின் பெயர்களை நாம் வெளியிட இயலாது.

அரசாங்கத்தின் அனைத்து அலுவல்களையும் விட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விடுதலைப் புலிகள் தங்களது இலக்கை அடைவதற்காக உணர்வுபூர்வமான இடங்களில் மேலதிக தாக்குதல்களை நடத்தக்கூடும். விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்கும் வரை இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முடியாது.

பொதுமக்கள் இதனை உணர்ந்து அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அனுராதபுரம் தாக்குதலுக்கு பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதவியிருக்கிறார்களா என்பது குறித்த உள்ளக விசாரணைகள் முன்னேற்றமடைந்துள்ளன. காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் பசில் ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு அனைத்துலக நாடுகள் பலவும் வெளிப்படையாக உதவி வருகின்றன. ஆனால் 7 கோடித் தமிழர்கள் வாழும் இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளால் இந்திய அரசாங்கத்தால் வெளிப்படையாக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி செய்யாமல் மறைமுகமாக செய்து வருகிறது.

இந்நிலையில் பசில் ராஜபக்சவும், "வெளிப்படையான சில காரணங்களால்" உதவ முன்வந்துள்ள நாடுகளின் விவரங்களைத் தர முடியாது என்று கூறியுள்ளதானது "இந்தியாவை"த்தான் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு இரகசிய ஆயுத உதவியை இந்தியா செய்து வருவதாக அண்மையில் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான "ரைம்ஸ் ஓஃப் இந்தியா" அம்பலப்படுத்தியமையையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனிடையே கொழும்பில் கடந்த புதன்கிழமை கூடிய சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபையானது சிறிலங்கா வான் படைக்கான புதிய போர் வானூர்திகளைக் கொள்வனவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வான் படைத்தளபதி றொசான் குணதிலக்க, உயர் இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா, காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கள் குறித்த விரிவான அறிக்கையை வான் படைத்தளபதி அக்கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

கண்காணிப்பு வானூர்திகளின அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வான் படைத்தளங்களில் மேலதிக பாதுகாப்புக்கள் தொடர்பாகவும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: