Sunday, October 28, 2007

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்: இக்பால் அத்தாஸ்





அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் 27 பேர் கொண்ட அணி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கட்டடையாக தலைமுடி வெட்டிய ஆண்களும், பெண்களுமான கரும்புலிகள், இராணுவ உடையை அணிந்திருந்தனர். அவர்கள் தற்கொலை குண்டு அங்கிகளையும் அணிந்திருந்தனர்.

கனரக ஆயுதம் தரித்த அந்த அணியினர் இராணுவ அதிகாரி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தனர். இது அனுராதபுரம் தளத்திற்கு அண்மையாக இருந்தது.

முகாமின் வேலிகளை நோக்கி திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் அதிகாலை 3:00 மணிக்கு ஊர்ந்து சென்றனர். பின்னர் அவர்கள் வேலிகளை வெட்டி ஒவ்வொருவராக உள்ளே புகுந்தனர். வானூர்தி ஓடுபாதை வடகிழக்காகவும், தென்மேற்காகவும் அமைந்திருந்தது. அதனை விரிவாக்கும் வேலைகளும் நடைபெற்று வந்தன. விடுதலைப் புலிகள் 300 மீற்றர் தூரம் ஓடுபாதைக்கு குறுக்காக நடந்து வானூர்தித் தரிப்பிடத்தை அடைந்தனர். அது திறந்த பகுதி அங்கு எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

அங்கு பாவனையில் உள்ள மற்றும் பாவனையில் அல்லாத வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆர்பிஜி உந்துகணை செலுத்திகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள் ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர்.

அது முகாமின் அமைதியை குலைத்தது. எனினும் தம்மை தயார்படுத்திக்கொண்டு தமது நிலைகளுக்கு செல்ல ஆரம்பித்த வான் படையினரை அங்கு நிலை எடுத்திருந்த விடுதலைப் புலிகள் தாக்கினர்.

பல வான் படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்தனர். தளத்தில் பெரும் வெடியோசைகளும், தீப்பிழம்புகளும் எழுந்தன. அனுராதபுரத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான தொலைபேசி இணைப்புக்கள் மிகவும் வேகமாக இயங்கின. தாக்குதல் செய்தி எல்லா இடமும் பரவியது. செய்தி உலகெங்கும் பரவியது. அனைத்துச் செய்தியாளர்களும் கெரில்லாக்கள் முதற் தடவையாக வான், தரைத் தாக்குதல்களை இணைத்து மேற்கொள்வதாக பேசிக்கொண்டனர். விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாக அரசு தெரிவித்து வந்த சூழலில் இது நடைபெற்றுள்ளதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள வான் படையினரின் நடவடிக்கை தலைமையகம் வேகமாக செயற்பட்டது. அனுராதபுரம் தளத்தில் உள்ள சில வானூர்திகளையாவது பாதுகாப்பாக நகர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளில் உயரதிகாரிகள் இறங்கினர். இது இரு நோக்கங்களைக்கொண்டது. ஒன்று வானில் எழும் வானூர்திகள் மூலம் விடுதலைப் புலிகளை தாக்குவது. இரண்டாவது தரையில் உள்ள வானூர்திகளைப் பாதுகாப்பது. ஆர்பிஜி மற்றும் ஏனைய ஆயுதங்களின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

எனினும் அரை மணிநேரத்திற்குப் பின்னர் வவுனியாவில் இருந்து பெல்-212 ரக உலங்குவானூர்தி புறப்பட்டுச் சென்றது. இரு வானோடிகளையும் இரு துப்பாக்கிதாரிகளையும் கொண்ட இந்த உலங்குவானூர்தி மிகிந்தலைப் பகுதியில் உள்ள டொரமடலாவா பகுதியில் சூட்டுக்கு இலக்காகி வீழ்ந்து நொறுங்கியுள்ளது. அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

வான் படைத்தளத்தின் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட மற்றும் தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட வானூர்திகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. தாக்குதல் அணியானது வன்னியில் உள்ள கட்டளை மையத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வந்திருந்தது. தாக்குதல் தொடர்பான தகவல்களையும் வழங்கிக்கொண்டிருந்தனர். தாக்குதல் தொடங்கிய 45 நிமிடங்களில் விடுதலைப் புலிகளின் இரு சிலின்-143 வானூர்திகள் வந்து மூன்று குண்டுகளை வீசின.

விடுதலைப் புலிகளின் வானூர்தி வந்து குண்டு வீசிவிட்டுச் சென்றதனை வவுனியாவில் இருந்த படையினரும், காவல்துறையினரும் கண்டனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்கச் சென்ற உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கி விட்டது. ஆனால் எவ்வாறு இது நிகழ்ந்தது என்பது தொடர்பாக குழப்பங்கள் தோன்றியுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அது வீழந்ததா? அப்படியானால் மற்றைய உலங்குவானூர்தியை அனுப்புவது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற படையினர், வான் படையினருடன் இணைந்து விடுதலைப் புலிகளை முறியடிக்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். சில விடுதலைப் புலிகள் தமது தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து இறந்தனர். சிலர் படையினருடனான மோதல்களில் இறந்தனர். தளத்தை முற்றாகக் கைப்பற்றி தமிழீழக் கொடியை ஏற்றும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை முறியடிப்பதற்காக படையினர் கடும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர்.

முற்பகல் 9:00 மணியளவில் எஞ்சியிருந்த ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் கொகொம்பா மரத்தில் ஏறி அதன் மூலம் வானூர்தி தரிப்பிடத்தின் கூரையில் ஏறி படையினர் மீது தாக்குதலை நடத்தினர். இச்சமரின் போது ஒரு சமயத்தில் கவச வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கவச வாகனத்தின் சக்கரம் சேதமடைந்ததால் அது செயலிழந்தது. எனினும் பின்னர் கூரையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் 20 சடலங்களை கைப்பற்றியதாக படைத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் 21 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். எனவே கொல்லப்பட்ட எண்ணிக்கையில் ஒருவர் வேறுபடுகின்றார். விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் தாக்குதலாளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அமர்ந்திருப்பது வெளியிடப்பட்டிருந்தது. இது தாக்குதலில் பங்குபற்றிய சில உறுப்பினர்கள் பாதுகாப்பாக திரும்பும் பொருட்டு புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளாவது தளம் திரும்பும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இத்தாக்குதலில் 27 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 5:00 மணியளவில் இரு குழுக்களாக தாக்குதலாளிகள் வெவ்வேறு இடைவெளிகளில் தளத்தை விட்டுச்சென்றதை கண்டதாக தளத்திற்கு அருகில் வசிக்கும் சில கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருந்தனர். அது சரி எனில் தாக்குதலில் பங்குபற்றியதாக கூறப்படும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் நிலை தொடர்பான விளக்கமே தரப்படவில்லை.

மூன்று வானூர்திகள் சேதமடைந்ததாக வான் படைப் பேச்சாளர் அஜந்தா சில்வா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 7 வானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாகவும் பிரதமர் ரட்ணசிறீ விகிரமநாயக்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பில் உள்ள வான்படை தலமையகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், அனுராதபுரம் படைத்தளத்தில் உள்ள அதிகாரிகள் ஆகியோருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களில் இருந்து தாக்குதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

தாக்குதல் நடைபெற்ற போது தளத்தில் 27 வானூர்திகள் தரித்து நின்றன. அவற்றில் சில சேவையில் ஈடுபட முடியாதவை. எனவே சேதமடைந்த வானூர்திகளின் விபரம் வருமாறு:

வான் படைத் தரிப்பிடத்தில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்:

ஆளில்லாத உளவு வானூர்திகள் - 02 இவை மிகவும் புதியன, வான் படையினரின் ஆவணங்களில் கூட இன்னும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இஸ்ரேலின் புளு ஹரிசோன் நிறுவனத்திடம் இருந்து பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.

எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி - 01 இது எரிந்து சாம்பலாகி விட்டது.

சீனத் தயாரிப்பு பிரி-6 பயிற்சி வானூர்திகள் - 04

வானூர்தி ஓடுபாதைக்கு அருகில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்:

அமெரிக்க தயாரிப்பான பீச்கிராஃப் 200 வானூர்தி - 01 இது முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்கு என 1985 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு கண்காணிப்பு வானூர்தியாக மாற்றப்பட்டதுடன், அதிக பெறுமதியுள்ள ஒளிப்படக்கருவி உட்பட பல சாதனங்களும் பொருத்தப்பட்டன. இதன் இழப்பு ஆழ்கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

சீனத் தயாரிப்பு கே-8 பயிற்சி வானூர்தி - 01

எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி - 01

இவை முற்றாக அழிந்து போனவை. இவை தவிர சேவையில் ஈடுபடும் மற்றும் சேவையில் ஈடுபடாத பல வானூர்திகளும் சேதமடைந்துள்ளன. அவற்றில் சிலவற்றையே மீண்டும் பயன்படுத்த முடியும் என வான் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேதமடைந்த வானூர்திகளை வான் படை பதிவு புத்தகத்தில் இருந்து அகற்றுவதற்கான அனுமதிக்காக வான் படைத்தளபதி பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் எழுதும் வரையிலும் இழக்கப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியவில்லை.

அதன் தகவல் வருமாறு:

வான் படைத் தரிப்பிடத்தில் சேதமடைந்த வானூர்திகள்:

வான் படைக்குச் சொந்தமான ஆளில்லாத உளவு வானூர்தி - 01

பிரி-6 பயிற்சி வானூர்திகள் - 03

கே-8 பயிற்சி வானூர்திகள் - 05 இந்த வானூர்திகள் சிலவற்றின் கண்ணாடி கூரைகள் உருகிப் போனதுடன், உலோகப்பகுதிகளும் சிதைந்து போயுள்ளன. அவற்றில் சில கைவிடப்பட்டுள்ளதுடன், அதன் பாகங்கள் தான் பயன்படுத்த முடியும்.

சியாமாசெற்றி வானூர்திகள் - 04 (சேவையில் ஈடுபடுவதில்லை)

ஓடுபாதையில் சேதமடைந்த வானூர்திகள்:

எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி - 01

சேதமடையாத வானூர்திகள்:

எம்ஐ-17 உலங்குவானூர்திகள் - 03 இவை தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

வான் படைத்தளத்திற்கு ஏற்பட்ட சேதம் 30 மில்லியன் டொலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை ஒரு வருடத்திற்கு முன்னர் கணிக்கப்பட்ட விலைகள். ஆனால் மீளக் கொள்வனவு செய்யும் விலைகள் மிகவும் அதிகமானவை. வான் கலங்களின் விலைகள் உயர்ந்து செல்வதுடன், டொலரின் பெறுமதியும் அதிகரித்து செல்கின்றது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக இரு காரணிகள் நோக்கத்தக்கது. முகாமின் ஒவ்வொரு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் தகவல்களை உடனுக்குடன் பெற்று வந்திருக்கின்றனர். அது உள்வீட்டுத் தகவல்களாகும். அவற்றின் உதவியுடன் அவர்கள் வன்னியில் மாதிரி வடிவங்களை அமைத்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். விடுதலைப் புலிகள் எவ்வாறு இத்தகவல்களை பெற்றார்கள் என்பது தான் முக்கிய கேள்வி.

தளத்தின் வானூர்தி ஓடுபாதையின் விரிவாக்கம் காரணமாக அதன் பாதுகாப்புக்களில் சில மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தனியார் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டிருந்தது. தினமும் கட்டப் பொருட்களுடன் பெருமளவான பாரஊர்திகள் அங்கு செல்வதுண்டு.

முகாம் தாக்குதல் தொடர்பாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டள்ளன. இவற்றில் ஒன்று குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுவது முக்கியமானது.

காவலரண்களில் இருந்து எந்தவித எதிர்ப்புக்களும் இன்றி விடுதலைப் புலிகள் கம்பி வேலியை வெட்டி உட்புகுந்தது வெட்கக்கேடானது. கடந்த கால அனுபவங்களில் இருந்து கூட படையினர் பாடங்களை கற்கவில்லை. இதே போன்றே விடுதலைப் புலிகள் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுநாயக்க வான் படைத்தளம் மீதான தாக்குதலின் போதும் உள்நுழைந்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சப்புகஸ்கந்தவில் உள்ள எரிபொருள் சேமிப்பு களஞ்சியத்தின் கம்பி வேலியை வெட்டி விடுதலைப் புலி உறுப்பினர் உட்புக முயற்சித்திருந்தார். அதற்கு அண்மையில் ஒரு சடலம் காணப்பட்டது. புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவரை பாம்பு கடித்திருந்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் சில ஆவணங்களையும் கைப்பற்றியிருந்தனர். அவர் எரிபொருள் சேமிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலுக்கான ஆரம்பகட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பின்னர் அறியப்பட்டது.

கட்டுநாயக்க தாக்குதலில் வான்படையினர் 8 வானூர்திகளை இழந்திருந்தனர். ஆனால் அனுராதபுரம் தாக்குதலில் அதிக வானூர்திகள் இழக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் வானூர்தி தரிப்பிடங்களில் இருந்த வானூர்திகள் தாக்கப்படவில்லை. ஓடுபாதையில் நின்ற வானூர்திகளே தாக்கப்பட்டன. ஆனால் அனுராதபுரத்தில் தாக்குதலாளிகள் தரிப்பிடங்களுக்குள் சென்று தாக்கியுள்ளனர்.

யால வனவிலங்கு சரணாலயத்தில் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்க றெஜிமென்டை சேர்ந்த 12 ஆவது பற்றாலியன் துருப்புக்களின் உதவியுடன் தற்போதும் அங்கு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரைக்கு 30 நாட்கள் இருக்கையில் இந்த இரு தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி<புதினம்

No comments: