Friday, October 26, 2007

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"




அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன.

மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும்.

வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று.

சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும்.

ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது.

புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

"கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர்.

அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன.

இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது.

இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான்.

விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.

இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.

நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே.

இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது.

முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது.

அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர்.

அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி.

துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.

கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர்.

விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார்.

இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன.

கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன.

அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது.

பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது.

படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.

தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது.

பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன.

21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர்.

செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர்.

இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.

எம்ஐ-24 - 02

எம்ஐ-17 - 01

கே-8 - 01

பிரி-6 - 01

செஸ்னா-150 - 01

பீச்கிராஃப் - 01

பெல்-212 - 01

ஆளில்லாத வானூர்திகள் - 02

என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

பிரி-6 - 03

கே-8 - 01

செஸ்னா வானூர்திகள் - 01

உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன.

தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர்.

அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர்.

தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார்.

அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.

அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை.

முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல.

இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி<புதினம்

1 comment:

Anonymous said...

ALL ALONG I WAS WONDERING HOW THE TIGERS CARRIED OUT THE ATTACK, WHETHER TO BELIEVE IT OR TO BELIEVE THE ARMY'S STATEMENT BECAUSE OF THEIR RECENT TERITORIAL ADVANTAGE.Eelabharathis description with pictures cleared my doubt and reimpose my faith in tigers ability to come back like phoenix bird.Hatsoff to them. The article description outclash Hollywood action movie trailer.