Friday, October 26, 2007

உணர்வெழுச்சியோடு 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள் !














அனுராதபுரத்தில் சிங்களப் பேரினவாதப் படைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்து வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.

இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு கரும்புலி மாவீரர்களுக்கு ஈகச் சுடரேற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

கோட்டங்களில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் திரண்டு தமது உணர்வுபூர்வமான வணக்கங்களை கரும்புலி மாவீரர்களுக்கு செலுத்தினர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக அணியிசையுடன் கிளிநொச்சி அரச செயலக வளாகத்திலிருந்து நினைவுப்பேரணி புறப்பட்டு பண்பாட்டு மண்டபத்தை சென்றடைந்தது.

கிளிநொச்சி வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்குப் பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள், பொறுப்பாளர்கள் போராளிகளால் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சொலைமன் சூசிறீல், ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஆற்றிய உரை:

ஒரு முக்கிய காலகட்டத்தில் அனுராதபுரம் வான் படைத்தளம் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழர்களின் வீரமரபு சிங்கள தேசத்தில் மீண்டுமொரு முறை நீரூபிக்கப்பட்டுள்ளது. கரும்புலி மாவீரர்களின் தியாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறது.

அனுராதபுரம் தாக்குதல் சிங்கள அரசுக்கு ஒரு பலமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. பொய்யான பரப்புரைகளும் போர் நடவடிக்கைகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதையே உணர்த்தி நிற்கிறது

தமிழர்கள் எந்தக் காலத்திலும் எந்தவேளையிலும் அடிபணிந்து போக மாட்டார்கள் என்பதையும் இத்தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது என்றார்.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் மலர்தூவி 21 கரும்புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.

புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் 21 சிறப்புக் கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக திருவுருவப்படங்கள் தாங்கியவாறு புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபம் அருகாமையில் இருந்து இன்னிய இசை அணிவகுப்புடன் பொன்விழா மண்டபத்திற்கு பேரணி சென்றடைந்தது.

வீரவணக்க நிகழ்வுக்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் ஏற்றினார்.

ஈகச்சுடரேற்றப்பட்டு மலர்மாலைகள் சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து முல்லை வலயக்கல்வி பணிப்பாளர் அரியரத்தினம், தூயவன் அரசறிவியற் கல்லூரி பொறுப்பாளர்களில் ஒருவரான கலைக்கோன், சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை முதல்வர் செல்வநாயகம் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

விசுவமடு
விசுவமடு கோட்டம் தருமபுரம் மகா வித்தியாலயத்தில் விசுவமடு கோட்டப் பொறுப்பாளர் சீராளன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை வவுனியா கட்டளைத்தளபதி வேலவன் ஏற்றினார்.
ராஜன் கல்விப்பிரிவு பொறுப்பாளர் கீதன், மாணவி தர்சிகா ஆகியோர் வீரவணக்க உரைகளை வழங்கினர்.

முழங்காவில்
முழங்காவில் கோட்டத்தில் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரினை ராதா வான்காப்பு படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான அன்புமணி ஏற்றினார்.

ஈகச்சுடரேற்றி மலர்மாலை ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து ஆசிரியர் குவேந்திரன், ராஜன் கல்விப்பிரிவைச் சேர்ந்த நிலவன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

மன்னார்
மன்னார் விடத்தல்தீவில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இளவேனில் பணியாளர் சுரேன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை மாந்தை மேற்கு கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆரூரன் ஏற்றினார்.

ஈகச்சுடரினை கிராம அலுவலர், போராளி கோபி ஆகியோர் ஏற்றினர்.

கடற்புலிகளின் மன்னார் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்புராச் மலர்மாலையை சூட்டினார்.
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சகாயம் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

கனகராயன்குளம்
கனகராயன்குள கோட்டத்தில் மாங்குளம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை கோட்டப் பொறுப்பாளர் கலையரசன் ஏற்றினார்.
மலர்மாலை சூட்டப்பட்டு ஈகச்சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாங்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் சிவகணேசன், பங்குத் தந்தை அன்ரனி சுதாகரன், துணைமுதல்வர் புஸ்பமாலா ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.
புலித்தேவன் சிறப்பு வீரவணக்கவுரையை வழங்கினார்.

ஒட்டுசுட்டான்
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் கோட்டத்தில் கோட்டப் பொறுப்பாளர் ஞானம் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற் கரும்புலி காந்தனின் தாயார் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் கோட்டப் பொறுப்பாளர் ஞானம் ஏற்றினார்.

ஈகச் சுடரேற்றப்பட்டு மலர்மாலை சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கக் கணக்காளர் சபாரத்தினம், பொது அமைப்பு ஒன்றியத் தலைவர் பூபாலசிங்கம் மோகனதாஸ் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.
ஒளிக்கலைப் பிரிவு பொறுப்பாளர் செந்தோழன் சிறப்பு வீரவணக்க உரையை நிகழ்த்தினார்.

முள்ளியவளை
முள்ளியவளையில் கோட்டப் பொறுப்பாளர் உமைநேசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலாங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஏற்றினார்.

ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து குமுழமுனை பாடசாலை முதல்வர், தூயவன் அரசறிவியற் கல்லூரி முதல்வர் அரசண்ணா ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

மல்லாவி
மல்லாவி கோட்டத்தில் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக அனிஞ்சியன்குளம் பாடசாலையிலிருந்து கரும்புலி வீரர்களின் திருவுருவப்படங்களைத் தாங்கிய பேரணி மாவீரர் மண்டபத்தை சென்றடைந்தது.
மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை அரசியல்துறை நடுவப் பணியகப் போராளி சி.எழிலன் பொதுச்சுடரை ஏற்றினார்.

சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து பாலிநகர் பாடசாலை முதல்வர் திருமதி கிருஸ்ணபிள்ளை உரை நிகழ்த்தினார்.

வீரவணக்க உரையை சி. எழிலன் நிகழ்த்தினார்.

மேஜர் எழிலன்பனின் நடுகல் திரைநீக்கம்
மேஜர் எழிலன்பனின் திருவுருவப்படம் வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் எடுத்துச் செல்லப்பட்டு முழுப்படைய மதிப்புடன் நடுகல் திரைநீக்கம் செய்யப்பட்டது.
மேலும் வவுனியா கட்டளைப் பணியகத்திலும் 21 கரும்புலி மறவர்களின் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.
நன்றி>புதினம்.

No comments: