அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் முக்கிய பகுதிகள்:
நம்பமுடியாத அளவிலான மிக உச்சக்கட்ட உறுதிப்பாடும், துணிவும், துல்லியமும் நிறைந்த வெற்றிகரமான தாக்குதலை, விடுதலைப் புலிகளின் 21 கரும்புலி உறுப்பினர்கள் நடத்தியிருக்கின்றனர்.
குறிப்பாக, இந்தத் துணிகரத் தாக்குதலுக்கு, ஒரு கிழக்கு மாகாணத்தவர் தலைமை தாங்கியிருப்பதும், விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் வழங்கிய ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானவை.
மிக அதிகபட்ச புலனாய்வுத் தகவல்களுடன் மதிநுட்பம் நிறைந்த, உச்சக்கட்ட திட்டமிடல் மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கிய இத்தகையதொரு தாக்குதலை, உலகின் வேறு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் நடத்தியிருக்க முடியாது என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டதாக மேற்கோள் காட்டும் இராமன், இதற்காக விடுதலைப் புலிகள் பலவித தியாகங்கள் இழப்புக்களுடன் கூடிய வலிகளைத் தாங்கிக்கொண்டு, நீண்டகாலம் திட்டமிட்டிருக்கின்றனர் என்றே தான் கருதுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
கரும்புலிகள், சிறிய குழுக்களாகப் பிரிந்து, இரு வேறு திசைகளிலிருந்து, அநுராதபுர வான்படைத் தளத்திற்குள் ஊடுருவியிருக்கின்றனர். வெறும் 20 நிமிடத்துக்குள் பாதுகாப்புக் கடமையிலிருந்து படையினரைத் திகைக்க வைக்கும் வகையில் அதிரடித் தாக்குதல்களைத் தொடுத்து, ஆயுதங்களையும் தொடர்பாடல் உபகரணங்களையும் கைப்பற்றியதுடன், அங்கிருந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையையும், வான் பரப்பைக் கண்காணிக்கும் ராடார் உபகரணத்தையும் செயலிழக்க வைத்துள்ளனர்.
இந்த முதற்கட்ட செயற்பாடுகளின் வெற்றியை, தமது கட்டளைத் தலைமையகத்திற்கு தகவலாகப் பரிமாறியதும், விடுதலைப் புலிகளின் வான்படை, தமது இரு வானூர்திகளை அனுப்பி, குண்டுத் தாக்குதலையும் நடத்திவிட்டு, வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றன.
சிறிலங்காவின் அநுராதபுரம் வான் படைத்தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணி, அதிகாலை 3:00 மணியிலிருந்து 9:00 மணிவரை, தங்களது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து, படிப்படியாக மிகத் துல்லியமான திட்டமிடலில், அங்கிருந்த பல்வேறு வானூர்திகளை அழித்துள்ளனர்.
உலங்கு வானூர்திகள் - 03
பயிற்சி வானூர்திகள் - 02
ஆளற்ற வேவு வானூர்திகள் - 03
போன்றவை இவற்றில் அடங்கும்.
இது தவிர, வவுனியா வான் படைத்தளத்திலிருந்து நிலைமையை அவதானிக்கச் சென்ற சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தியை, விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோ படையினர், சுட்டு வீழ்த்தியுள்ளனர். வான்படை முகாமிலிருந்த ராடார் உபகரணங்களை, விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்க வைத்து, வான்பரப்பை தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்பதனையே இந்தத் தாக்குதல் சுட்டிக்காட்டுன்கிறது.
வான் படைத்தளத்தில் பாதுகாக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியத்தை முற்றாக தாக்கியழித்த விடுதலைப் புலிகளின் கொமாண்டோப் படையணி பின்னர் அங்கிருந்த வானூர்தி ஓடுபாதையையும் குண்டுவீசி பாதிப்படைய வைத்துள்ளனர்.
காலை 9:00 மணிவரை கரும்புலிகள் அநுராதபுரம் வான் படைத்தளத்திலிருந்து தங்களது கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பிலிருந்ததாக, நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சரியாக 9:00 மணிக்கு அனைத்து கொமாண்டோ உறுப்பினர்களின் தொடர்புகளும், முற்றாக துண்டிக்கப்பட்டன. இதன்படி பார்க்கும்போது, கரும்புலிகள், 9 மணிக்கு தங்களைத் தாங்களாகவே முடித்துக் கொள்வதற்கு முடிவெடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறதே தவிர சிறிலங்காப் படையினர் அவர்களைக் கொல்வதற்கு வாய்ப்புக் கொடுத்ததாகத் தெரியவில்லை.
தற்போது கிடைக்கின்ற தகவல்களை வைத்துப் பார்க்கும் போது கரும்புலிகள் முகாமிற்குள் நுழைந்து, முகாமைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், தரைப் படைக்கு உதவி வழங்குகின்ற வகையில் விடுதலைப் புலிகளின் வான்படை எவ்வாறு செயல்படலாம் என்பதனைப் பரீட்சிக்கின்ற ஒரு களமாக, தரைப்படையின் நகர்வுகளில் வான் படை எத்தகைய உதவிகளை வழங்கலாம் என்பதை ஆராய்கின்ற களமாக, இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
ஏனெனில், தரைப்படையினர் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் வான் படை முகாமைக் கொண்டுவந்த பின்னர், வானூர்திகள் வந்து குண்டு போடுகின்ற தேவை அவசியமானதாகத் தெரியவில்லை. எனவே, இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவும் நோக்கப்படலாம்.
விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் உக்கிரத்தை, சிறிலங்கா அரசு எப்படியும் மூடி மறைத்துவிட முயற்சிக்கிறது என்பது தெரிகிறது. தங்களது இரண்டு உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், இன்னுமொன்று விபத்துக்குள்ளானதாகவும் சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், லண்டனைத் தளமாகக் கொண்ட "டெய்லி ரெலிகிராஃப்" ஊடகத்தின் கொழும்பு செய்தியாளர், குட்டை உடைத்திருக்கிறார். அவரது தகவலின்படி, 14 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முக்கிய கண்காணிப்பு வானூர்தியான பீச்கிறாஃப்ற் உட்பட, மொத்தம் 17 வானூர்திகள் அல்லது உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன என்று அவரது அதிகாரபூர்வ செய்தியில் விபரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
அநுராதபுர வான் படைத்தள முகாம், சிறிலங்கா அரசின் இராணுவச் செயற்பாடுகளுக்கு, ஒரு மிக முக்கியமான மைய முகாம்.
வான் படையின் பிரதான பயிற்சி முகாமாகவும், பிரதான புலனாய்வுத் தகவல் வழங்கல் முகாமாகவும் செயற்பட்ட இப் படை முகாமில், வானிலிருந்து படம் பிடிக்கப்பட்டு, அங்குள்ள நவீன ரக உபகரணங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, உயர்மட்டத் தலைமைகளுக்கு மிக அவசியமான அத்தனை அறிவார்த்தமான புலனாய்வுத் தகவல்களையும் வழங்கும் தளமாகவும் இது இயங்கியது.
பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ஆலோசகர்களும் பயிற்சியாளர்களும், அநுராதபுரம் வான் படை முகாமுடன் தொடர்புகளைத் தொடர்ச்சியாகப் பேணி வருவதுடன், அவ்வப்போது நேரடியாக அங்கு வந்து போவதும் உண்டு.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா படைகள் குண்டு வீசுகின்ற பலத்தை, இந்தத் தாக்குதல் முறியடிக்கா விடினும், கடற்படை மற்றும் வான் படையின் கண்காணிப்பு, புலனாய்வு மற்றும் படையினரைக் காவிச் செல்லும் பணிகளை மிக மோசமாகத் தாக்கியிருக்கின்ற இந்தத் தாக்குதல், மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியையும் படைத்தரப்பிற்கு உருவாக்கியிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சிறிலங்கா அரச படைகள் தாக்கியழித்ததற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக அல்லது, வடக்கில் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக, அநுராதபுரம் வான்படைத் தளம் மீதான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருக்கலாம்.
தொலை நோக்குப் பார்வையும், தெளிவான சிந்தனையும், சீரிய திட்டமிடலும், தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருக்கிறது என்பதையே இந்தத் தாக்குதல் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அண்மைக்கால பின்வாங்கல்களும் இழப்புக்களும், விடுதலைப் புலிகளின் மனோபலத்தில் எந்தக் குறைபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
கிழக்கு மாகாணத்தை இழந்தமை, எவ்விதத்திலும் அவர்களது பலத்தைக் குறைக்கவில்லை. சிறுபான்மைத் தமிழினத்திற்கான அரசியல் வெற்றியை அடைகின்ற அவர்களது இலட்சியப் பயணத்திற்கான மன உறுதிப்பாடு இரட்டிப்பாக உயர்ந்திருப்பதையே, இந்த வான்படைத்தளம் மீதான தாக்குதல் சுட்டி நிற்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Wednesday, October 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment