Thursday, March 27, 2008

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்!!!

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

"பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார்.

இதற்கு தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசு, சட்டவாளர் ஆர்வலன் உள்ளிட்ட பலரும் அப்படத்தை தமிழ் வெளியிட முயற்சித்த நிறுவனத்துக்கு நேரில் சென்று கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்.

மேலும் தமிழின உணர்வாளர்களுக்குத் திரைப்படத்தை காண்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடம்பாக்கம் எம்.எம்.திரையரங்கில் இன்று வியாழக்கிழமை காலை அத்திரைப்படம் தமிழின உணர்வாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் முத்துக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்யராஜ், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் அப்படத்தைப் பார்த்தனர்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:

இத்திரைப்படம் முழுமையாக தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற படம்.

இப்படிக் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். சட்டம் ஒழுங்கு கெடும்.

இது தொடர்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் முறைப்பாடு செய்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தை மீறி அப்படச் சுருள்கள் வெளியே போகக் கூடாது.

இப்படத்தை வெளியிடாமல் தடுக்க நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் தொல். திருமாவளவன்.


நன்றி>புதினம்

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எனக்கென்னவோ இது வாலை விட்டுத் தும்பைப் பிடித்த கதையாகத் தெரிகிறது. நாளும் நடுவண் அரசும் தமிழக ஊடகங்களும் ஈழ எதிர்ப்புச் செய்திகள், பரப்புரைகளை வெளியிடுகையில் அவர்களைத் தட்டிக் கேட்காமல், கையில் அகப்பட்ட தனி ஆளை அடித்துத் துவைப்பது சரியா? இந்தக் கோபம், செயற்பாடுகள் யாவும் ஊடகங்கள், அரசை நோக்கித் திரும்பும் நாள் வர வேண்டும்.

Unknown said...

இந்தப் படத்தை பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. உண்மையில் இது ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்துவதாக இருந்தால், கண்டிப்பாக திரையிடக் கூடாது.

அதே சமயம், அந்த இயக்குனரைத் தாக்கியதும் சரியான செயல் இல்லை.

ஈழபாரதி said...

படத்தை பார்த்தவர்களின் கருத்துக்கள் இங்கே
http://eelabarathi-1.blogspot.com/2008/03/blog-post_28.html