Friday, March 28, 2008

சிங்களப் படத்துக்குத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு!!!


தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பிரபாகரன்" என்ற சிங்கள மொழித் திரைப்படத்தை இன்று வியாழக்கிழமை பார்த்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தப் படம் கலர்ப்படம் அல்ல. கலப்படம். படத்தின் தலைப்பே சரியில்லை. தமிழர்களை அவமானப்படுத்தக் கூடியது. திரையிடுவதை வெளியிடுவது பற்றி யோசித்தே முடிவு செய்வோம் என்றார் அவர்.

நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், தமிழர்களை அவமதிக்கும் படம் இது. வன்மையாக இப்படத்தை கண்டிக்கிறோம் என்றார்.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கூறியதாவது: படத்தின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசுக்கும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சுக்கும் நன்றி என்று இடம்பெறுகிறது. அத்துடன் படத்தில் ஒரு காட்சியில் கூட ஒரு சிங்கள படைத் தளபதியோ படையைச் சேர்ந்தவரோ இடம்பெறாமையிலிருந்தே இந்தப் படத்தின் நோக்கம் தெரிய வருகிறது.

இலங்கையில் தமிழர்களை சிறிலங்காப் படைதான் ஒடுக்கி அடக்கி வருகிறது. ஆனால் வரலாற்றையே தலைகீழாய் மாற்றி சிங்கள மக்கள் பாதிக்கப்படுவது போல் சித்தரிப்பது ஒரு பெரிய மோசடி.

மேலும் சமாதான நடவடிக்கைகளை போலி சமாதானம் என்று இப்படத்தில் நிராகரித்திருப்பதன் மூலம் படம் எடுத்தவரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்: தமிழின மக்களை இழிவு செய்து எடுக்கப்பட்ட ஒரு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை தமிழ்நாட்டிலே வந்து செய்து கொண்டிருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டு எதிர்ப்புத் தெரிவித்தோம். தமிழினத்தை இழிவு செய்வதை மானமுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொள்ள முடியாது- பொறுத்தும் கொண்டிருக்க முடியாது.

இப்படி இழிவு செய்கிறவர்கள் இனித் தமிழ்நாட்டில் அப்படிச் செய்ய இயலாது என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறோம். தமிழ் மக்கள் வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகிறவர்கள் இல்லை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இல்லாமல்- மானமுள்ளவர்கள் ஒரு பகுதியினராவது இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். கருத்துரிமை என்பது வேறு. இனத்தை இழிவு செய்வது என்பது வேறு.

கற்பனை- புனைவு என்பதில் கருத்துச் சொல்வது வேறு.

ஒரு வரலாற்றைப் படைக்கின்றபோது திரித்தும் மாற்றியும் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

தமிழீழ மக்கள் அனைவரும் கொடுமையானவர்கள்- சிங்கள மக்கள் அனைவரும் கருணையே உருவானவர்கள் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் திரிபு. கருத்துரிமை உரிமை அல்ல என்றார்.

இயக்குனர் சீமான்: தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் சிங்களப் படத்தைத் தடுக்கின்றபோது படைப்புச் சுதந்திரம் பற்றி சிலர் பேசுகின்றனர். காற்றுக்கென்ன வேலி திரைப்படம் தடுக்கப்பட்டபோது படைப்புச் சுதந்திரம் பற்றி பேசினார்களா? தமிழர்களை இழிவுபடுத்தும்போதுதான் படைப்புச் சுதந்திரம் பற்றி பேசுவார்களா? என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா, கவிஞர்கள் மு.மேத்தா, பொன். செல்வகணபதி, தமிழ் முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் முன்னிலையில் இப்படம் காண்பிக்கப்பட்டது.

நேற்று சென்னையில் வைத்து தாக்கப்பட்ட இயக்குனர் மேலதிக சிகிச்சைகளிற்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பிரபாகரன் என்ற பெயரில் திரைப்படம் இயக்கிய இலங்கையை சேர்ந்த இயக்குனர் துஷார பீரிஸ் நேற்று சென்னையில் வைத்து தாக்கப்பட்டார்.

சிங்கள மொழியில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக சென்னை சென்ற வேளையிலேயே இச்சமபவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளிற்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி>தமிழ்வின்

1 comment:

mraja1961 said...

தமிழன் தன் மானம் உள்ளவன் என்பதை நிருபிக்க வேண்டும். அடித்து விரட்டியதுக்கு எல்லோருக்கும் நன்றி.

மகாராஜா