Thursday, March 27, 2008

சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சென்னை சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சி!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்கள மொழித் திரைப்படமான "பிரபாகரன்" திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தெரிகிறது.

"பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார்.

இதற்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசு, ஆர்வலன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்.
மேலும் தமிழின உணர்வாளர்களுக்குத் திரைப்படத்தை காண்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடம்பாக்கம் எம்.எம்.திரையரங்கில் இன்று வியாழக்கிழமை காலை அத்திரைப்படம் தமிழின உணர்வாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதனிடையே சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகமானது அப்படத்தை வெளியிடும் பொறுப்பை தாங்கள் ஏற்பதாக சிங்கள இயக்குநரிடம் உறுதியளித்திருப்பதாக உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா, சிங்கள இயக்குநருடன் விவாதித்ததாகவும் இந்திய மத்திய அரசு நிர்வாகத்திடம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக புதுடில்லி தூதரகத்துக்கு தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும் அந்த இயக்குநரிடம் கூறியுள்ளார்.

மேலும் எமது தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்- அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு இது என்றும் அம்சா கூறியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழகக் காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மூலமும் அம்சா செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தனது இஸ்லாமியாத் தொடர்புகள் மூலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி மூலமாக இன்று சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒரு முறைப்பாட்டு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அதில் "பிரபாகரன்" படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்மையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் றிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில், தமிழ்நாட்டில் தாயக விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை இஸ்லாமியத் தமிழரான அம்சா, தமிழின எதிர்ப்பு ஊடகங்களின் துணையுடன் மேற்கொண்டு வருகிறார் என்பதை அம்லப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: