Monday, March 31, 2008

"இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள்!!!


விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை.

அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டுகளைப் போட அவர் தேர்ந்தெடுத்த இடம் தமிழர்களின் தலைநகரமான சென்னை.

பெரிஷின் சென்னைப் பயணம் படுரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், அந்தத் தகவல் விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் தரப்புக்கு எப்படியோ கசிந்து விட்டது. வி.சி.களின் ஊடகப்பிரிவு பொறுப்பாளரான வன்னியரசு தலைமையில் ஒரு குழு சுற்றித்திரிந்து, ‘பிரபாகரன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் ‘லேப்’பில் நடப்பதைக் கண்டுபிடித்தது. அந்தத் தகவல் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் பறந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன், இயக்குனர் சீமான், வன்னியரசு போன்ற தமிழ் ஆர்வலர்கள் கொண்ட டீம் ஜெமினி கலர் லேப்பை முற்றுகையிட்டது. அங்கிருந்து தப்பியோட முயன்ற இயக்குனர் பெரிஷை இவர்களுடன் சென்ற தமிழ் ஆர்வலர்கள் போட்டு நையப்புடைத்தனர். ‘‘எங்கள் இனத்துக்கு எதிராகப் படம் எடுத்து, அதை எங்கள் மண்ணிலேயே பிரிண்ட் எடுக்க வந்தாயா? என்ன துணிச்சல் உனக்கு? தமிழ்இனத்தின் உணர்வு செத்துப் போகாதுடா’’ என்று சொல்லிச் சொல்லி விழுந்தது அடி. பெரிஷின் சட்டை எல்லாம் கிழிந்து கந்தர்கோலமாகி விட, கடைசியில் சுபவீ, சீமான் ஆகியோர் தலையிட்டு அவரைக் காப்பாற்றி புதிய டீஷர்ட் வாங்கித் தர வேண்டியதாயிற்று.

அதைத் தொடர்ந்து போலீஸ§ம் வந்துவிட ஓர் ஒப்பந்தம் ரெடியானது. ‘பிரச்னைக்குரிய ‘பிரபாகரன்’ படத்தை 27_ம்தேதி காலையில் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்பட தமிழ் ஆர்வலர்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும். அந்தப் படம் தமிழினத்துக்கு எதிரானது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டால், இயக்குனர் பெரிஷ் படப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கொழும்புக்கு நடையைக் கட்ட வேண்டும். படத்தில் வில்லங்கம் இல்லாவிட்டால், படத்தை இறுதி எடிட் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.’ இதுதான் அந்த ஒப்பந்தம். இதற்கு பெரிஷ் ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

அன்றிரவு தனியறையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த பெரிஷை நாம் சந்தித்துப் பேசினோம். மிரண்டு போய் இருந்தார் அவர். ‘என் படத்தைத் தப்புத்தப்பாக இங்கே புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயத்தைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன். தமிழர்களுக்கு எதிரான படமில்லை இது’’ என்றார் அவர். ‘‘சிங்கள அரசின் நிதியுதவியுடன் எடுத்த படமா இது?’’ என்று கேட்டபோது ‘‘ஆமாம்’’ என்றார்.

எதுவாக இருந்தாலும் 27_ம்தேதி காலையில் தெரிந்து விடும் என்ற எண்ணத்தில் நாமிருந்தபோது, மறுநாளே மத்திய உளவுப்படை மற்றும் தமிழக உளவுப்பிரிவினர் உதவியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெரிஷ் தலைதெறிக்க கொழும்புக்கு ஓடிவிட்டார் என்பது நமக்குத் தெரிய வந்தது.

27_ம்தேதி காலை, தி,நகரில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘பிரபாகரன்’ படத்தைப் போட்டுப் பார்க்க ஏற்பாடானது. போலீஸார் குவிந்ததைக் கண்டு அந்த தியேட்டர்காரர்கள் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட, கோடம்பாக்கம் எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் படத்தைத் திரையிட்டுப் பார்க்க முடிவானது.

டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் இருந்து வர தாமதமானதால் பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமாரை அனுப்பி வைத்தார். பழ.நெடுமாறன் வெளியூரில் இருந்ததால் வரவில்லை. சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன், இயக்குனர்கள் தங்கர் பச்சான், சீமான், கௌதம், நடிகர் சத்யராஜ், கவிஞர் மேத்தா உள்ளிட்ட பலரும் வந்துசேர கடைசியாக வந்து சேர்ந்தார் திருமாவளவன்.

பத்திரிகையாளர்கள் யாரும் தியேட்டருக்குள் வரவேண்டாம் என்று தங்கர்பச்சானும், ஜெமினி பட லேப் நிர்வாக அதிகாரி பாரதியும் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு படம் திரையிடப்பட்டது. படம் முடிந்தபின் அந்தப் படத்தைப் பற்றி தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்குள் பதினைந்து நிமிடம் கூடிப்பேசி விட்டு வெளியே வந்தார்கள். அவர்களது முகத்தை ஆவலுடன் பார்த்தனர் பத்திரிகை நிருபர்கள். அப்போதே ரிசல்ட் தெரிந்து விட்டது.

படம் பற்றி பா.ம.க.துணைத்தலைவர் முத்துக்குமார், ராமநாதன், திருமாவளவன் ஆகியோர் நிருபர்களிடம் பேசினார்கள். ‘எங்கள் கருத்து ஒரே கருத்துதான். ஒரே முடிவுதான்’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

‘‘என்ன முடிவு? என்ன கருத்து?’’ என்று சுபவீயிடம் முதலில் கேட்டோம். ‘‘பொதுவாக சிங்களப்படம் என்றால் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐந்து பிரதிகள் (பிரிண்ட்கள்)தான் எடுப்பார்கள். ஆனால் ‘பிரபாகரன்’ என்ற இந்தத் தமிழ்ப்படத்தை அறுபது பிரிண்ட்கள் வரை எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இதைத் திரையிட்டு தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் திட்டம் இது. போராளிக்குழுக்களை இந்த அளவுக்கு கொச்சையாக எந்தப்படத்திலும் சித்திரித்தது இல்லை. இந்தப் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார் அவர்.

அடுத்து சீமானிடம் பேசினோம். ‘‘சுபவீ அண்ணன் சொன்ன அதே கருத்துதான் எனக்கும். இந்த மாதிரி மோசமான, கற்பனைக்கு ஒவ்வாத, ‘கலப்பட’ படத்தை இங்கே மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார் சீமான். ‘‘நீங்களும் ஓர் இயக்குனர்தானே? ஒரு படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்வது படைப்புச் சுதந்திரத்தைப் பாதிக்காதா?’’ என்று நாம் கேட்டபோது பொங்கியெழுந்து விட்டார் அவர்.

‘‘ ‘காற்றுக்கென்ன வேலி?’ ‘ஆணிவேர்’ போன்ற படங்களை இங்கே நமது சகோதரர்கள் எடுத்தபோது அந்தப்படங்களை புலிகள் ஆதரவுப்படங்கள் என்று சொல்லி, சென்சார் என்ன பாடுபடுத்தியது? அப்போது உங்கள் படைப்புச் சுதந்திரம் எங்கே போனது?’’ என்று திருப்பிக் கேட்டார் அவர்.

கடைசியாக திருமாவளவனிடம் பேசினோம்.

‘‘இலங்கை ராணுவத்துக்கும், அதன் தளபதிகளுக்கும் நன்றி’ என்று டைட்டில் கார்டு போட்டுத்தான் இந்தப் படமே ஆரம்பிக்கிறது. புலிகள் பள்ளிச் சிறுவர்களை மட்டுமே கடத்திச் சென்று அவர்களை மட்டுமே போராளிகளாக்குவதாக படத்தில் சித்திரித்திருக்கிறார்கள். அதில் பிரபாகரன் என்ற சிறுவன், ‘அப்பாவி (சிங்கள) மக்களைக் கொல்லமாட்டேன், ரத்தக்களறி எனக்குப் பிடிக்கவில்லை’ என்று கூறி ஒரு சிறுவர் கூட்டத்துடன் புலிகள் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான். அப்போது அந்தச் சிறுவர் கூட்டத்தைப் புலிகள் குண்டுவீசி அழிப்பது போலக் காட்டியிருக்கிறார்கள். ‘இதுதான் புலிகள் இயக்கம்’ என்பது போல பதிய வைக்கிறார்கள்.

பிரபாகரனின் அக்கா கமலி ஒரு சிங்களவரை மணந்து கர்ப்பிணியாகிறாள். அந்தச் சமயத்தில் புலிகள் அவளை மனிதவெடிகுண்டாக மாறும்படி வற்புறுத்துகிறார்கள். மனிதவெடிகுண்டாகப் போகும் அவள், பிறக்கப்போகும் தன் பிஞ்சுக்குழந்தையின் மேலுள்ள ஆசையால் கடைசி நேரத்தில் பின்வாங்கி விடுகிறாள். இதனால் எரிச்சலாகி விடும் புலிகள், ஒரு காரில¢ வந்து கமலியைப் பார்த்து ஒரு வெடிகுண்டு பார்சலைத் தந்து வீட்டில் வைத்திருக்கச் சொல்கிறார்கள். அது தன்னைத் தீர்த்துக் கட்டப் பார்க்கும் சதி என்பதைப் புரிந்து கொள்ளும் கமலி, புலிகள் ஏறிவந்த காரின் பின் சீட்டிலேயே அவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்து வைக்கிறாள். புலிகள் அந்த காரோடு சிதறுகிறார்கள். கர்ப்பிணிப் பெண் கமலி தன் கணவனோடு நடக்கிறாள். அதோடு படம் முடிகிறது.

‘புலிகள் கர்ப்பிணிப் பெண்ணைக்கூட மனிதவெடி குண்டாகப் போகச்சொல்லும் இரக்கமற்ற அரக்கர்கள்’ என்பது போல இந்தப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. மற்றவர்களுடன் கலந்து பேசி சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதைச் செய்ய இருக்கிறோம். அதற்காக ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ அனைவருடனும் பேசி ஒன்று திரண்டு போராடும்’’ என்றார் அவர்.

‘பிரபாகரன்’ திரைப்படம் ஒரு பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. இப்போது இந்தப் பிரச்னையில் இடைவேளை. இதற்குமேல் என்ன நடக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

படங்கள்: நாதன்
பா. ஏகலைவன்
குமுதம் ரிப்போர்ட்டர், 03 -04- 2008

No comments: