Wednesday, February 06, 2008
எமது போராட்டம் புதுடில்லியில் ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது: கொளத்தூர் தா.செ.மணி!!!
இந்திய அரசே! இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடில்லியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் கனடிய தமிழ் வானொலியில் (CTR) ஒலிபரப்பாகும் "வணக்கம் ரொறன்றோ" நிகழ்ச்சியில் இன்று புதன்கிழமை தொலைபேசியூடாக பங்கேற்று கொளத்தூர் மணி தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:
பெரியார் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் தமிழீழச் சிக்கல் குறித்து எமக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.
இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு "இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே!" என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் முன்வைத்து தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெறப்பட்ட ஏறத்தாழ 7 லட்சம் கையெழுத்துகள் கொண்ட கையெழுத்துப் படிவங்களை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கச் செல்வதற்கு முன்பாக அதனை ஜனநாயக முற்போக்குச் சக்திகளின் கவனத்தை ஈர்க்க மக்கள் மத்தியில் ஒரு பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
எமது ஒற்றைக் கோரிக்கை இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என்பதுதான்.
புதுடில்லியிலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பையிலிருந்தும் கர்நாடகம் மாநிலம் பெங்களுரிலிருந்தும் பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு ஏறத்தாழ புதுடில்லி வாழ் பொதுமக்கள் என்கிற அளவில் 50 பேர் கலந்து கொண்டனர்.
இன்று முற்பகல் 11:30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக் குழுவில் இருக்கின்ற வழக்கறிஞர் துரைசாமி முதலில் தொடக்க உரை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோரும் தமிழ்நாடு மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக நான் உரையாற்றினேன். அதன் பின்னர் பேரணி தொடங்கியது. பேரணி தொடக்கத்தின் முன்பாக
இந்திய அரசே! இந்திய அரசே!
இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!
எங்கள் தமிழரைக் கொல்லாதே!
எங்கள் வரிப்பணத்தில்
எங்கள் தமிழர்களைக் கொல்ல
ஆயுதம் கொடுக்காதே!
கொடுக்குது கொடுக்குது
காந்திதேசம் கொடுக்குது!
கொல்லுது கொல்லுது
புத்ததேசம் கொல்லுது!
அங்கே எம்
தமிழர்களைக் கொல்லுது!
இலங்கையிலே நடக்கிற கொடுமைகளை
உலக நாடெல்லாம் கண்டிக்குது
இந்தியாவோ ஆயுதம் கொடுக்குது
உடனே அதனை நிறுத்திடு!
ஆகிய முழக்கங்கள் தமிழில்- ஆங்கிலத்தில்- ஹிந்தியில் எழுப்பப்பட்டன.
இந்தியத் தலைமை அமைச்சரான பிரதமரிடம்தான் அந்தக் கையெழுத்துப் படிவங்களை கையளிக்க இருந்தோம். ஆனால் அவரைச் சந்திப்பதற்கு எமக்கு நேரம் ஒதுக்கித் தருவதில் சிக்கல்கள் இருந்த காரணத்தால் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். இன்று மாலை 4:30 மணிக்கு அவர் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் வேறு சில சிக்கல்கள் காரணமாக நாளை முற்பகல் 10:00 மணி முதல் 10:15 வரை இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தில் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். தேவைப்பட்டால் நேரத்தை கூட்டிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையெழுத்துப் படிவங்களை கையளிக்கின்ற போது, புவியல் சார் இந்தியாவின் அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டு நாங்கள் உதவி செய்வதாக அவர் கூறும் நிலையில் இந்தச் சிக்கலில் சிறிலங்காவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் உதவுகிற நிலைமையைக் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம்.
அதேபோல். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இந்திரா காந்தி மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் எடுத்துக்காட்டி தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக சிறிலங்காவிற்கு ஆயுதங்களைக் கொடுப்பதன் மூலமாக் ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்த இந்தியா, வழிதவறப் போய்க்கொண்டிருப்பதாக உலக நாடுகள் எண்ணிக் கொண்டிருப்பதனையும் நாம் சுட்டிக்காட்ட எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்.
இந்திய அரசின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றிருப்பதன் மூலமாக ஒரு பெரும் கொள்கை மாற்றத்தை- தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று நாம் உறுதியாக நம்பவில்லை.
ஆனால் இப்படிப்பட்ட எந்தக் கோரிக்கையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படவில்லை.
தமிழ் மண்ணைத் தவிர வேறு பகுதிகளில் இது தொடர்பிலான கவன ஈர்ப்பு- கருத்து ஈர்ப்பு செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதனை மாற்றுகின்ற ஒரு புதிய தொடக்கமாக மட்டுமே இந்த நிகழ்வு அமையும் என்று நாம் நம்புகின்றோம்.
இதன் தொடர்ச்சியாக புதுடில்லியில் உள்ள முற்போக்கு சக்திகள்- புரட்சிகர அரசியல் எண்ணம் கொண்ட சக்திகள் -மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிடமும் இந்தப் பிரச்சனையை விளக்கி புரியவைத்து அவர்களுடைய தலையீட்டையும் கொண்டுவருவதற்கு ஒரு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதின் தொடக்கமான இதனை நாம் கருதுகிறோம்.
பொதுவாக இந்திய நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் ஏறத்தாழ ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியாகத்தான் காணப்படுகின்றது.
அலுவலர்களும் உணவு விடுதிக்காரர்களும்தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.
ஆனாலும் கூட அந்த நேரத்தில் முதலில் எங்கள் தோழர்களின் குழந்தைகள்- பெண்கள் ஈழத்தில் நடைபெறுகின்ற தாக்குதலை நினைவூட்டும்படியாக காயக்கட்டுகளை தங்களது தலையில் நெற்றியில் பதியவைத்துக் கொண்டு- கால்கள் பாதிக்கப்பட்டவரைப் போலவும் சதைகள் பிய்ந்து தொங்குவது போலவும் தங்களை காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளோடு வந்தனர்.
அதனை அவர்கள் கண்டபோதுதான் எங்கள் பக்கம் வந்தனர். அப்போது எங்கள் முழக்கங்கள் அவர்களிடத்திலே சென்றடைந்திருக்கின்றது.
கோரிக்கைகள் தொடர்பான பதாகைகள்- ஈழத்தில் நடைபெறுகின்ற படுகொலைகள் தொடர்பிலான படங்களைக்கொண்ட பதாகைகளும் எடுத்து வரப்பட்டன.
அவை ஒரு புதிய எண்ணத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் புதுடில்லியில் கல்லூரியில் கல்வி கற்கக்கூடிய தமிழரல்லாத பிறமொழி பேசும் மாணவர்கள் தொடர்ந்தும் எங்களுடன் பேசி வருகின்றனர். ஒரு கிளர்ச்சியை இங்கு உருவாக்கியிருக்கின்றது என்று சொல்லலாம்.
புதுடில்லியில் உள்ள செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்திகளைப் பதிவு செய்து சென்றிருக்கின்றனர். நாளை அவை வெளியாகக் கூடும்.
தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த ஊர்வலத்தை விரிவாகக் காட்டிக் கொண்டிருப்பதாக தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு தொலைபேசிச் செய்திகள் வருகின்றன.
எனவே ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றது- ஒரு சிறு பொறியை உண்டாக்கியிருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.
இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கூடுகின்றபோது இந்தப் பகுதியில் ஒருவார காலமாவது தங்கியிருந்து இதில் தொடர்புள்ள அறிஞர்களையும் அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் இதனை விளக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருக்கின்றோம். அது ஒருவேளை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
தமிழக நிலைமை
பொதுவாக, ஈழச் சிக்கல் என்பது தமிழ்நாட்டில் விவாதிக்கப்படுகின்ற போது அதனைத் தீர்த்து வைக்கின்ற நோக்கம் இருக்காது. தங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம்தான் இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இது.
தங்களுக்குப் பேச செய்தி கிடைக்காத காங்கிரஸ் கட்சியினர் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களது அரசியல் துணை தேவை என்று கருதுகின்ற அரசு அதற்கு கொஞ்சம் தலையாட்டி சம்மதித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிற சூழல் உள்ளது.
ஆனால்
ஈழத் தமிழர்களுக்காக பட்டினிப் போராட்டம் நடத்தினால் கூட ஏதோ தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நடத்துகின்றார்கள் என்று கூறி தடை செய்ய வேண்டும் என்று கேட்கிற காங்கிரஸ் கட்சி-
அதனைத் தடை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கின்ற காங்கிரஸ் கட்சி
இப்போது டில்லியில் அந்தக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பகுதிகளில்- நாட்டின் தலைநகரில் ஊர்வலம் நடத்த அனுமதித்திருக்கும் நிலையில்
தமிழ்நாட்டில் இனி அப்படிப்பட்ட எதிர்ப்புக்குரல் எழுப்பமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
தமிழ்நாடு அரசும் இதனை சுட்டிக்காட்டி அவர்களுக்கு மறுப்புக்கூற ஒரு வாய்ப்பாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.
இந்தியாவின் தற்போதைய நிலைமையும் எதிர்காலமும்
இந்தியா- இந்தியாவை இப்போது வழிநடத்துகிற அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் இந்த சிக்கல் குறித்து முடிவெடுக்கின்ற உரிமையை தங்கள் கையில் வைத்துக் கொள்ளாமல்- அதிகார வர்க்கத்தின் கையில் விட்டிருப்பதுதான் பேரவலமாக இருக்கிறது.
அதனை மாற்றி அரசியல் தலைவர்கள் அந்த அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும்
தமிழர் சிக்கல் என்கிறபோது தமிழ்நாட்டுத் தலைவர்களினது கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற போக்கே காணப்படாமல் இருப்பதும்
தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதில் உறுதியாக இருந்து கூட்டணியில் இருக்கின்ற தலைவர்களும் உறுதியாக வலியுறுத்தாத சூழலும்தான் இப்போது உள்ளது. உண்மைதான்.
ஆனால்
இது எப்போதும் மாறாதது என்று சொல்ல முடியாது.
காரணம் இப்போது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கிற அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் இறுதியில் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் என்பதனை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
அந்தச் சூழலில் நாங்கள் எடுக்கின்ற போராட்டங்கள் ஒரு தாக்கத்தை ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றோம் என்றார் அவர்.
நன்றி>புதினாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment