Wednesday, February 13, 2008

உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல், "சமாதானம் 2005" புலிகள் பாவிப்பு!

பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

"சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.

"சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை.

இந்தக் குண்டு சுமார் முந்நூறு கிலோ வெடிப் பொருளுடன் சுமார் ஐந்நூறு கிலோ எடையுடையதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ள புலனாய்வு வட்டாரங்கள் அது வந்து விழுந்து வெடிக்கும் பிரதேசத்தில் 50 மீற்றர் முதல் நூறு மீற்றர் வரையுள்ள சுற்றுப் பகுதியில் பேரழிவையும் பெரு நாசத்தையும் ஏற்படுத்தும் என்றும் கருதுகின்றனர் எனத் தெரிகின்றது.
இந்த மோட்டார் அல்லது ஷெல்லின் ஏவு வீச்சு எவ்வாறு என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன், ஏவுகணைப் பொறிமுறையை அல்லது பீரங்கிப் பொறிமுறையை அல்லது இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தி இதனை ஏவுவதற்கான ஓர் உத்தியை தொழில்நுட்ப ரீதியில் புலிகள் உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
90 களில் "பஸிலன்' என்ற உள்ளூர் தயாரிப்பு பாரிய ஷெல் மூலம் யுத்த முனைகளில் புலிகள் பெரும் சேதத்தையும் படையினருக்குப் பீதியையும் விளைவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்திவர முடியாத முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் புலிகள், தாமே தங்களுக்குரிய இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு அரச உயர்மட்டத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
http://www.sudaroli.com/pages/news/today/04.htm

No comments: