சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்திய நாடாளுமன்றம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.
பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.
இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-
இனப்படுகொலைக்குத் துணை போகாதே!
ஆயுத உதவி வழங்காதே!
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை ஒரு பாரிய கவன ஈர்ப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.
சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ள படிவங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தின் இன்று மாலை 4:00 மணியளவில் நேரில் கையளிகக் உள்ளனர்.
இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:
- தமிழீழ நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.
- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை இந்திய அரசிடம் நாங்கள் முன்வைக்க வேண்டியுள்ளது.
இருப்பினும் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்காதே என்ற ஒற்றைக் கோரிக்கையையே இப்போது நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிராக இந்திய அரசே இராணுவ வழித் தீர்வுக்காக இராணுவ உதவிகளை வழங்கும் முரண்பாட்டை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ்நாட்டினது அனைத்து கட்சியினரும்- மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட- தமிழ்நாட்டு அமைச்சர்கள்- தமிழகத்தின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பு தமிழ்நாட்டு மக்களும் இந்த கோரிக்கைகாக கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்தியக்கத்தை முன்னெடுத்தது பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும் இந்தக் கோரிக்கை இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கை என்றார் அவர்.
பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், அமைதி வழித் தீர்வை வலியுறுத்திக் கொண்டே இராணுவ வழித் தீர்வுக்கான ஆயுத் உதவிகளை செய்யக் கூடாது என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். சிறிலங்கா அரசுக்கான ஆயுத உதவிகளை தொடர்ந்தும் மத்தியிலே ஆளும் காங்கிரசு அரசாங்கம் வழங்குமேயானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்பது வேரடி மண்ணோடு வீழ்ந்துபோய்விடும் என்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நாம் சொல்லவும் விரும்புகிறோம் என்றார்.
நன்றி>புதினம்.
Wednesday, February 06, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment