Thursday, November 30, 2006

ஐ,நா விடம் அனைத்துலக யூறிகள்சபையின் (ICJ) அவசரகோரிக்க.

ஐக்கிய நாடுகளிடம் அனைத்துலக யூறிகள் சபை இன்று ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகளின் அமைப்பிடம் விடுத்த கடுமையான வேண்டுகோளில் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படும் இந் நிலைமையை வெகு உன்னிப்பாக அவதானித்து உடன் நடவடிக்கை எடுக்கும் படியும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான மனிதஉரிமைகள் ஆணைக்குழு ஒன்றை இலங்கையில் நிறுவும்படியான தங்களின் கடுமையான நிலைப்பாட்டை மீளவலியுறுத்தியுமுள்ளது.

இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மனிதஉரிமை மற்றும், மனிதாபிமான பேரவலம் குறித்தும் கட்டுப்பாடற்ற படைகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் (ICJ) பெரும் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் அமைப்பு வாளாதிருக்க முடியாது. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுக்கும் வகையிலும் சர்வதேச சட்டங்கள் மீறப்படாததை உறுதிப்படுத்தும் அதேசமயம் தண்டனைகள் பற்றிய பயம் எதுவுமற்ற சூழலில் மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபடும் தரப்புகளை முறியடிக்கும் வகையிலும் ஐ.நா மனிதஉரிமைகள் அமைப்பு உடன் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கடந்த கூட்டத்தொடரின் பின்னர் பொதுமககள் மீதான கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் (ICJ), பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுதல், காணாமல்போதல், சித்திரவதைக்குட்படுத்தப்படல், வலிந்த தூண்டுதலாலான இடப்பெயர்வுகள், குழந்தைகள் படையில் சேர்க்கப்படுதல் போன்ற போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக விசனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 10ல் கொழும்பில் இடம்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நடராசா ரவிராஜின் திட்டமிட்ட கோரப்படுகொலையால் அதிர்ச்சியடைந்திருக்கும் இவ் அமைப்பு ஒரு ஆண்டு காலத்தில் இவருக்கு முன் கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராஐசிங்கம் படுகொலை பற்றிய விசாரணைகளில் நீதி நிலைநாட்டப்படவில்லை எனறு விசனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படைகள் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அனைத்துலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்தவிதிமுறைகளை (இராணுவமற்ற பொதுமக்கள் இலக்குகள் தொடர்பில் தெளிவான வேறுபாடுகளை விளங்கி செயற்படுதல்) மதிக்காது செயற்படுவதால் வாகரையில் நவம்பர் 8இல் 40க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் 100க்கு அதிகமானோர் காயங்களுக்கும் உள்ளானது போன்றும் அவலங்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருக்கும் இவ் அமைப்பு இதுதொடர்பில் கடுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளின் அவசியம் பற்றியும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவசாதனங்களையும் போராளிகளையும் பொதுமக்களுக்கு அண்மித்த இடங்களில் வைத்திருக்காததை உறுதிப்படுத்தும்படி விடுதலைப்புலிகளையும் (ICJ) கோரியுள்ளது.
நன்றி>பதிவு.

No comments: