Wednesday, January 31, 2007

இனப்பிரச்சினையில் மீண்டும் இந்தியா? முக்கியஸ்தர்கள் புதுடில்லியில் பேச்சு!

இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ள சம்பவங்களைத் தொடர்ந்து இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்திருக்கின்றது.


சிறிலங்காவின் முக்கிய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் புதுடில்லிக்குச் சென்றுள்ளதையடுத்தே இராஜதந்திர வட்டாரங்களில் இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன ஆகியோர் புதுடில்லிக்குச் சென்றுள்ளதையடுத்தே இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பிரதமர், எதிர்ககட்சித் தலைவர் ஆகியோர் புதுடில்லி சென்றுள்ள பின்னணியில், சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாககமவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அழைப்பொன்றைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி பயணமாகியிருக்கின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரையும், முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கும் அவர், சிறிலங்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பாக விளக்கிக் கூறுவார் எனத் தெரிகின்றது.

சிறிலங்கா அரச சமாதான செயலகப் பணிப்பாளரும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோகன்னவும் இந்தியா சென்றிருக்கின்றார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும், சர்வ கட்சிக் கூட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும் அவர் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் இந்தியப் பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ள பின்னணியிலேயே புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன நெருக்கடியுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருப்பது சமாதான முயற்சிகள் தொடர்பாக இந்தியா முமேற்கொண்டுள்ள ஒரு புதிய நகர்வின் ஒரு அங்கமாகவே இருக்கவேண்டும் என இராஜதந்திர வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தின் மாதிரியுடனேயே பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கவும், பாலித கோகன்னவும் புதுடில்லிக்குச் சென்றிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தீர்வு யோசனைகள் தொடர்பாக இந்தியா தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளையில், இனநெருக்கடிக்கு அதிகாரப் பகிர்வின் மூலமாக தீர்வைக் காண்பதற்கான புதிய செயற்திட்டம் ஒரு மாத காலத்தில் முன்வைக்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க புதுடில்லியில் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி>புதினம்.

Tuesday, January 30, 2007

உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு, இலங்கைக்கு பெரும் பின்னடைவு?

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாகவம் எனினும் அரசாங்கம் எதிர்பாhக்கும் உதவிகள் நேரடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றி முக்கிய பிரதிநிதிகளின் உரைகள் இதனை தெளிவு படுத்தியுள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் மோதல்களை முடிவிற்கு கொண்டு வந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலம் தீர்வு காணப்பதற்கு முன்வர வேண்டும் என்றம் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

இலங்கையின் அமைதி முயற்சிகளில் இந்தியா மறைமுக மத்தியஸ்தம்?

இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்தியா மறைமுக மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இராஜதந்திர தரப்புகளில் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளமை குறித்து பல்வேறு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஸ்ரீலங்கா பிரதமர் ரட்ன ஸ்ரீ விக்கிரமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்

இதேவேளை ஸ்ரீலங்காவின் சமாதான செயலக பணிப்பாளரும் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவும் இந்தியா சென்றுள்ளார்

ஸ்ரீலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர் ரோஹத போகொல்லாகமவும் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை இனப்பிரச்சினையுடன் நெருக்கமான தொடர்புடையவர்களின் இந்திய விஜயமானது இந்தியாவின் புதிய அரசியல் நகர்வாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்ட மாதிரியுடன் பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாய்காகவும் பாலித கோகனவும் இந்தியா சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த தீர்வு திட்டம் குறித்து இந்திய அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
நன்றி > பதிவு

உதவி வழங்கும் சமூகம் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்பு!!!

இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம், விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது.


மோதலுக்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஜப்பான், அமெரிக்கா, உலக வங்கி என்பன கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ''இந்தப் பயங்கரமான மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வைக்காண முடியாது என்பது எமது உறுதியான நம்பிக்கை'' என்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் காலியில் நடைபெறும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கின்றார்.

அதிகாரப் பகிர்வு யோசனைகளுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தக்கூடிய சந்தர்ப்பத்தை சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உரையாற்றுகையில் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

அதேவேளையில் இன நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதிலேயே சிறீலங்காவின் எதிர்காலம் தங்கியிருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிரிவுத் தலைவர் பிரவுல் பட்டேல் தெரிவித்திருக்கின்றார். இந்தவிடயத்தை நாகரீகமாக மூடிமறைத்துவிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஜப்பானியத் தூதுவர் சியோசி அராகி தமதுரையில், சிறீலங்காவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக எச்சரித்தார். இலங்கையின் மோதலை வன்முறையால் அல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இதேவேளையில், சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கான வளங்களை உள்நாட்டு யுத்தம் சின்னாபின்னப்படுத்துவதாக உதவி வழங்கும் சமூகம் கவலை தெரிவித்திருக்கின்றது. இதனால், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தியிருக்கின்றது.

1983 ல் மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 வரையிலான வீதத்தை மோதல்கள் ஏப்பம் விடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் 40 லட்சம் கிராம மக்களை வறுமைப் பிடியிலிருந்து மீட்கும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் திட்டமானது நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதிலேயே தங்கியிருப்பதாகவும் உதவி வழங்கும் சமூகம் கூறியிருக்கின்றது.

அமெரிக்காவோ வேறு எந்த அரசாங்கமோ வழங்கும் அபிவிருத்திக்கான தொகையானது மோதலுக்கு நிரந்தரத் தீர்வைக் காணாதவிடத்து எந்தவொரு அபிவிருத்தி தொடர்பான அனுகூலத்தையும் ஏற்படுத்த மாட்டாது என அமெரிக்கத் தூதுவர் பிளேக் இங்கு வலியுறுத்திக் கூறினார்.
நன்றி>புதினம்.

Monday, January 29, 2007

''இலங்கை விஷயத்தில் இந்தியகொள்கை மாறவேண்டும்''

தியாகுவுடன் ஒரு சந்திப்பு,
பேட்டி: சுதா அறிவழகன்

ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர்.

ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை:

ஈழம் இன்று?

ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள்.

2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழல் இருந்து வந்தது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோதே, அமைதிச் சூழலை கெடுப்பதாக வாக்குறுதி கொடுத்து தான் ஜெயித்தார். அதை நேரடியாக அவர் சொல்லாவிட்டாலும் கூட, அமைதி ஒப்பந்தத்தை திருத்தி எழுதுவோம் என்று சொல்லி ஜெயித்தார்.

அதிகாரப் பரவல் என்ற கருத்தையே நிராகரித்து, தமிழர்களின் தனி அடையாளத்தை வெறுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளின் ஆதரவோடும், கூட்டணியோடும் தான் அவர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக் கூடாது.

சிங்கள மக்களுக்கும், பேரினவாதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மீண்டும் போர் தொடுப்பது, போரின் மூலம் தீர்வு காண்பது, விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பது, தமிழீழத்திற்கான வாய்ப்பே இல்லாமல் செய்வது ஆகியவைதான் ராஜபக்ஷேவின் இப்போதைய செயல்பாடுகள்.

அதேபோல போர் நிறுத்த உடன்படிக்கையின் மிக முக்கியக் கூறுகளிலிருந்து அதாவது, மீன் பிடித் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது, அதி உயர் பாதுகாப்பு வளையங்களை அகற்றுவது, துரோக தமிழ்க் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போன்ற வாக்குறுதிகளிலிருந்து சிங்கள அரசு பின் வாங்கி விட்டது. ஜெனீவா பேச்சுவார்த்தையின்போதும் இந்தப் பிரச்சினைகள்தான் எழுப்பப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காத சிங்கள அரசு, இப்போது கூடுதலாக யாழ்ப்பாண மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உணவு, மருந்து போவதை தடுத்திருக்கிறார்கள். ஏதோ அந்த மக்கள் எல்லாம் குற்றம் செய்தவர்கள் போல, பொருளாதாரத் தடையை விதித்துள்ளனர்.

சிங்கள அரசின் இந்த செயலை, ராஜபக்ஷேவை ஆதரிக்கும் பன்னாட்டு அமைப்புகளும், ஏடுகளும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம நெடுஞ்சாலையை திறக்கப் போவது போல பேச்சு எழுந்தது. ஆனால் ஆளும் வர்க்கத்தில் இருக்கக் கூடிய சில அதிகார மையங்களும், ராணுவத் தலைமையிடமிருந்து வந்து பிடிவாதப் போக்கும் இந்த முயற்சிகளை முறியடித்து விட்டன.

அதேபோல போரின் மூலம் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க முடியும், கடலில் கூட்டு ரோந்து செல்வதன் மூலம் புலிகளை வெல்ல முடியும், பணிய வைத்து விட முடியும் என்று நம்பிக் கொண்டு, தீவிரப் போர் தயாரிப்பிலும், முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டிய காரணிகள்: ஈழத்தில் உள்ள தமிழர்களைப் போல பன் மடங்கு தமிழர்கள் இந்தியாவில் உள்ளனர். 6 கோடித் தமிழர்களின் தாயகம் இந்தியாவில் குடியிருக்கிறது. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழீழ மக்கள் பால் கொண்டுள்ள ஒருமைப்பாட்டு உணர்வை, நேச உணர்வை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

இந்த மக்களைக் கருத்தில் கொண்டு இந்தியா, தமிழீழ மக்களுக்குச் சாதகமான, குறைந்தது, அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கக் கூடிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்தியாவிடமிருந்து அது வரவில்லை.

அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு படையெடுப்பு நேர்ந்து, ஒரு சிங்களனைக் கூட இந்தியப் படைகள் கொல்லவில்லை. மாறாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இந்திய வீரர்களால் சிதைக்கப்பட்டவர்களும் தமிழ்ப் பெண்கள்தான். தமிழர்களுக்குத்தான் இந்திய அமைதிப்படை அதிக சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் வேறு வழியின்றி திரும்பி வந்தது.

இந்திய, இலங்கை அமைதி உடன்படிக்கையின் முக்கிய அம்சமான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட இன்றைக்கு கொழும்பு உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கிறபோது, அதுகுறித்து இந்தியா கவலைப்படவில்லை. ஒரு சர்வதேச உடன்படிக்கையை, இரு நாட்டுத் தலைவர்கள் சேர்ந்து செய்த உடன்படிக்கை போகிறதே, நமது வாக்குறுதி என்னவானது என்று இந்தியா கவலைப்படவில்லை.

சென்னைக் கடற்கரையில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி, அமெரிக்காவுக்குப் போகவிருந்தவரை, பயணத்தைத் தாமதப்படுத்தி, ராஜீவ் காந்தி அழைத்து வந்து, தூக்க முடியாத எம்.ஜி.ஆரின் கையைத் தூக்கிக் காட்டி, உலகத்தில் தமிழர்களுக்கு 2வது மாநிலம் உருவாகிறது என்று கூறினார்களே, அதைப் பற்றி இப்போது பேசக் கூட இல்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நேரடியாகவும், சுற்றடியாகவும், ராணுவ வகையில் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகளைச் செய்து வருகிறது. லீத்தல் வெப்பன், நான் லீத்தல் வெப்பன் என்றெல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். ரேடார் நான் லீத்தலா, லீத்தலா என்று ஆராய்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்க் கப்பல் கொடுக்கிறார்கள். பயிற்சியும் கொடுக்கிறார்கள். பயிற்சி லீத்தலா, நான் லீத்தலா? இந்தியா பதிலளிக்க வேண்டும்.

இலங்கைக்கு, அமெரிக்காவாலோ, பாகிஸ்தானாலோ, சீனாவாலோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, எனவே அந்தப் படைக்கு பயிற்சி கொடுக்கிறோம் என இந்தியாவாலேயே கூற முடியாது. அவர்களுடைய உள்நோட்டுப் பிரச்சினை எனக் கருதப்படக் கூடியது தமிழீழ பிரச்சினை மட்டுமே.

அல்லது, முன்பு ஜேவிபி கலகம் செய்தது போல சிங்களர்களுக்குள் புரட்சி நடக்கிறது, எனவே அதை ஒடுக்க ஆயுதம் தருகிறோம் என்றும் இந்தியாவால் கூற முடியாது.

இந்தியா, இலங்கைக்கு என்ன உதவிகள் செய்தாலும், அது தமிழர்களுக்கு எதிரானதுதான். இதை தெரிந்தே இந்தியா செய்து கொண்டிருக்கிறது. இரு தரப்புகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவர்கள்தான் தீர்வு காண முடியும். தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தமிழர் சார்பான அமைப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, இதை இரு நாட்டு அரசுகளின் பிரச்சினையாக கருதியதுதான் ராஜீவ் காந்தி செய்த தவறு.

1985ம் ஆண்டு நடந்த திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா, இலங்கை அமைதி ஒப்பந்தம் வரை, பொதுவாக இருந்து பேச வைக்கிற முயற்சியை, அனுசரணையாளர் என்ற பொறுப்பை தவிர்த்து விட்டு, தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, புரோகிதரே, பொண்ணுக்குத் தாலி கட்டுவது போல, இந்தியாவே இறங்கி ஒப்பந்தம் போட்டார்களே அதுதான் அடிப்படைத் தவறு.

இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலும் பேச வேண்டும். ஆனால் ஒரு தரப்போடு டூ விட்டது போல உள்ளனர். புலிகளோடு பேசுவதற்கே வழியில்லை. இன்றைக்குக் கூட இவ்வளவு நடவடிக்கை எடுத்தபோதும், இலங்கையில், புலிகளுக்கு தடை விதிக்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்து கொண்டுள்ளது. தடை பண்ணி விட்டால் யாரிடம் பேசுவது, பிற்காலத்தில் பேச வாய்ப்பே இல்லாமல் போய் விடுமே?

ஆனால் சிக்கலுக்கு நேரடித் தொடர்பில்லாத இந்தியா புலிகள் அமைப்பை தடை செய்துள்ளது. தடை செய்வதற்காக இந்தியா சொன்ன குற்றச்சாட்டுக்கள் எல்லாமே பொய்.

தமிழகத்தைப் பிரிக்கப் பார்த்தார்கள், ஈழத்தை இணைத்து அகண்ட தமிழகம் அமைக்கப் பார்த்தார்கள், இந்தியப் பிரிவினைக்கு உதவி செய்தார்கள் என்று அவர்கள் கூறிய எதுவுமே உண்மை இல்லை. இது இந்திய அரசுக்கும் தெரியும். இன்றும் அந்தப் பொய்யை வைத்துக் கொண்டுள்ளதால்தான் இரு தரப்பிலும் பேச முடியவில்லை.

இரு தரப்பையும் சமமாக கருத மறுக்கிறது இந்தியா. ஆயுதத் தலையீடு, ராணுவத் தலையீடு மற்றும் இப்போது ராஜதந்திர தலையீட்டிலும் இந்தியா இறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் 2 கட்சிகளுக்கடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் பின்னணியில் இந்தியா உள்ளது. இது பகிரங்க ரகசியம்.

ரணிலை இங்கே வரவழைத்து அரசுடன் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லியது, மேனன் போன்றவர்களை அங்கே அனுப்பி பேரத்தை பேசி முடித்து வைத்தது இந்தியாதான்.

இதன் நோக்கம் என்ன?

பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும். அது அந்த மக்களுக்கான தீர்வா என்ற கவலையெல்லாம் இல்லை. ஒரு தீர்வு, அவ்வளவுதான். ராஜபக்ஷே இந்தியா வந்தபோது கூட பஞ்சாயத்து ராஜ் பற்றிப் பேசுகிறார். எனவே இது இந்திய பாணியிலான தீர்வு, இதற்கென்று வரையறை கிடையாது.

இந்தத் தீர்வுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் தமிழர் பிரதிநிதிகள், உண்மையில் அவர்கள் தமிழர்களுக்கான பிரதிநிதிகளே கிடையாது. தமிழ் மக்களின் 1 சதவீத ஓட்டுக்களைப் பெறக் கூட முடியாதவர்கள் எல்லாம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் சிங்கள ராணுவக் கூடாரத்திற்குள்தான் குடும்பம் நடத்தக் கூடிய நிலையில் உள்ளவர்களும் அங்கு உள்ளனர். இவர்களை தமிழர்களின் அடையாளமாக இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது.

இலங்கையில் 21 பேர் தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ளனர். ஆனால் தமிழர்களின் துரோகியாக கருதப்படும் டக்ளஸ் தேவானந்தாவை மட்டும் அழைத்துப் பேசுகிறார்கள். பிரதிநிதித்துவமே இல்லாத ஆட்களை வலியுறுத்தி டெல்லிக்குக் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பேசிவிட்டு பொதுவான தீர்வை எட்டி விட்டோம் என்று சொல்வதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவது, அப்படிச் செய்வதன் மூலம் ராணுவ ரீதியான தீர்வை அடைய நினைக்கிறார்கள். இப்படிச் செய்து விட்டு, புலிகள்தான் பிடிவாதமாக சண்டை போடுகிறார்கள் என்று கூறி தனிமைப்படுத்தி சர்வதேச அளவில் புலிகளை தனிமைப்படுத்துவது. இதுதான் இந்திய அரசின் எண்ணம். இது ராஜதந்திர தலையீடு, கொள்கைத் தலையீடு.

இருப்பதிலேயே இந்த கொள்கைத் தலையீடுதான் மோசமானது. இந்தியாவிலிருந்து சென்ற அமைதிப் படையினர் அங்கு 50,000 தமிழர்களைத் திரட்டி ஆயுதங்கள் கொடுத்தனர். ஆனால் ஒரு நாள் கூட அது நிலைக்கவில்லை. இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் பத்திரமாக தங்களது வீடுகளுக்குப் போய் விட்டனர்.

எந்தத் தீர்வாக இருந்தாலும் அது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என இந்தியா கூறுகிறது. இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறுகிறது. அங்கு ஒருமைப்பாடுதான் பிரச்சினையே என்கிறபோது, அதை வைத்து எப்படி தீர்வு காண முடியும்? அரசியலமைப்பே சிக்கல் என்றால் அதற்கு உட்பட்டு எப்படித் தீர்வு காண முடியும்?

ஒரு நோயைத் தீர்க்க அந்த நோய்க்குக் காரணமான காரணிகளையே வைத்து எப்படி சரி செய்ய முடியும்? வங்கதேசத்தில் சிக்கல் வந்தபோது பாகிஸ்தான் அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காண இந்தியா சொல்லவில்லை. அதேபோல பாலஸ்தீனம், இஸ்ரேல் ஒருமைப்பாட்டுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்லவில்லை. கிழக்கு தைமூர் விஷயத்திலும் அப்படிச் சொல்லவில்லை.

நமீபியா தென்னாப்பிரிக்காவிடமிருந்த பிரிய போராடியபோதும், எத்தியோப்பியாவுக்கு எதிராக எரித்ரியா போராடியபோதும் நாம் அப்படிச் சொல்லவில்லை. அவர்களுக்கு எல்லாம் இல்லாத நிபந்தனையை தமிழர்களுக்கு மட்டும் விதிப்பது ஏன்?

இலங்கை ஒருமைப்பாட்டுக்குள் உட்பட்டு தீர்வு காணுங்கள் என்று நிபந்தனை விதிப்பது எந்த வகையில் நியாயம்? சிங்கள அரசுக்குச் சார்பான கொள்கைப் பாட்டை வைத்துக் கொண்டு அணுகுகிறது இந்தியா என்றுதான் இதற்குப் பொருள்.

உண்மையில் தமிழீழம், சிங்களம் என்பது இரு வேறு தேசம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திலேயே சிங்களமும், தமிழும் இரு தேசிய மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மொழி என்பது வேறு. ஆனால் தேசிய மொழிகள் என்பது இரு வேறு இனங்கள் என்று பொருள்.

ஐநா மனித உரிமைப் பிரகடனத்தின்படி, ஒவ்வொருவரும் ஒரு தேசிய இனத்தவராய் இருக்க உரிமை உள்ளது. ஒன்றாக இருக்கவோ அல்லது பிரிந்து செல்லவோ முடிவு செய்ய, சுய நிர்ணய உரிமை உள்ளது. தமிழர்கள் ஒரு தேசிய இனம், தேசிய மொழி என்கிறபோது, சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டா, இல்லையா? இதற்கு இந்தியாவின் பதில் என்ன?

சுய நிர்ணய உரிமை உண்டு என்றால் அதை பயன்படுத்துகிற முறை என்ன? அதை யார் தீர்மானிப்பது? யார் அந்த மக்களோ அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சமீபத்தில் கனடாவில், ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது.

அங்குள்ள கியூபெக் பிராந்தியத்தில் பிரெஞ்சுதான் தேசிய மொழி. மற்ற 3 மாகாணங்களிலும் ஆங்கிலம்தான் தேசிய மொழி. எனவே கியூபெக்கை தனி தேசம் என கனடா அங்கீகரித்திருக்கிறது.

கியூபெக் ஒரு மாநிலமோ, மாகாணமோ அல்ல, அது ஒரு தேசம் என அங்கீகரித்துள்ளனர். அதை ஒரு தேசமாக ஏற்றுள்ளனர். அங்கு என்ன அரசு வர வேண்டும் என்பதுதான் அடுத்த பிரச்சினை. முதலில் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

இந்த அங்கீகாரத்தை கொடுக்காததால் தான் தமிழீழ மக்கள் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தில் குதிக்க நேரிட்டது. ஏற்கனவே இருந்த, இப்போது இழந்து விட்ட இறையாண்மையை மீட்க நடக்கும் போராட்டம் இது.

சமீபத்தில் பிரிட்டிஷ் தூதர் கொழும்புக்கு வந்தபோது, இந்த துன்பத்திற்கு நீங்கள் எந்தளவுக்கு பொறுப்பு. காரணம் நீங்கள்தானே இந்த தேசத்தை 200 ஆண்டுகள் ஆட்சி செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சொல்கிறார், நாங்கள் இந்தத் தீவுக்கு வந்தபோது இலங்கை என்ற நாடே இல்லை. 3 அரசுகளாக இருந்தது. நாங்கள்தான் நிர்வாக வசதிக்காக ஒன்றாக சேர்த்தோம்.

அப்போது இருந்தது கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு. நாங்கள் இந்த தேசத்தை விட்டு வெளியேறும்போது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினோம். அதில் தமிழ்ச் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறி விட்டதாக இப்போது கருதுகிறோம் என்றார்.

எனவே இது வரலாற்றில் இருந்த, இழந்த இறையாண்மையை மீட்க நடக்கும் போராட்டம். இப்படிப்பட்ட போராட்டத்தை அந்த மக்கள் நடத்துகிறார்கள் என்றால் அதை முதலில் இந்தியா ஒப்புக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும். அதை நடத்துகிற இயக்கத்தை அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்குவதுதான் சமத்துவமாக இருவரையும் கருதுவதற்கான அடையாளம். அப்படி இருந்தால்தான் தீர்வுக்கு வழி காண முடியும்.

இந்தியா இப்போதைய கட்டத்தில் இரண்டைச் செய்ய வேண்டும். தமிழீழ மக்களை தேசிய இனம் என்றும், அப்போராட்டத்தை தேசிய சுய நிர்ணயப் போராட்டம் என்றும் அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இதைச் செய்தால்தான் போரைத் தவிர்க்கும் சூழ்நிலை உருவாகும். வேறு எதைச் செய்தாலும், உணவு அனுப்பினாலும், மருந்து அனுப்பினாலும் அது சரியான தீர்வாக இருக்க முடியாது.

கருணாநிதியின் நிலைப்பாடு?

முதல்வருக்கோ, தமிழக அரசுக்கோ தனியாக அயலுறவுக் கொள்கை என்று எதுவும் கிடையாது. இவர்கள் தமிழீழப் போராட்டத்தை அங்கீகரிக்கிறார்களா, இல்லையா என்பது பிரச்சினை இல்லை. இதை உணர்ந்துதான், டெல்லியின் கொள்கைதான் எனது கொள்கையும் என்று கருணாநிதி கூறுகிறார்.

தமிழகத்தில் யார் முதல்வராக இருந்தாலும், சட்டம் என்ன சொன்னாலும், அதிகாரப் பட்டியல் என்ன சொன்னாலும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தை பிரதிபலிக்கிற உரிமை, கடமை சட்டசபைக்கு உண்டு. அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தை சட்டமாக்க முடியாது. ஆனால் அதற்கென்ற ஒரு அற மதிப்பு உண்டு. செஞ்சோலைச் சம்பவத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் அப்படி நிறைவேற்றப்படவில்லை. கண்டிக்கிறோம் என்று வலியுறுத்தக் கூட இல்லை.

திமுக தலைவர் என்ற முறையிலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் தமிழீழம் தான் தீர்வு என்பதை கருணாநிதி ஏற்றுக் கொண்டவர். அமைதிப் படையை 'அமளிப் படை' என்று கண்டித்தவர். இந்திய அரசின் பொய் பசப்புரைகளை கண்டித்தவர். இப்போதும் அதில் அவர் உறுதியாக இருந்தால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

தமிழீழம்தான் எனது கொள்கை என்று அவர் பகிரங்கமாக அறிவிக்கட்டும். ஆனால் தமிழீழத்தை ஏற்க முடியாது என்ற கொள்கை கொண்டது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசின் கருத்துதான் எனது கருத்தும் என்று கருணாநிதி கூறுகிறார். எனவே கருணாநிதி தனது நிலையை தெளிவாக விளக்க வேண்டும்.

இந்திய அதிகாரிகளின் பங்கு?

எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் அதிகாரிகள், அரசின் கொள்கையை செயல்படுத்துகிறார்கள். ஒருவர் தீவிரமாக இருக்கலாம், இன்னொருவர் ஜி.பார்த்தசாரதியைப் போல அடக்கி வாசிக்கலாம்.

தீக்ஷித் என்கிறபோது தீவிரமான அணுகுமுறை இருக்கலாம். ஆளுக்கு ஆள் வேறுபடலாம். மன்மோகன் சிங்கை நல்லவராகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேனனையும், நாராயணனையும குறை சொல்ல வேண்டியதில்லை. முதலில் அரசின் கொள்கை மாற வேண்டும்.

கடந்த காலத்தில் அயலுறவுச் செயலாளராக இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன், ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜீவ் தன்னிடம் கலந்து கொள்ளாமலேயே முடிவுகளை எடுக்கிறார் என்று குற்றம் சாட்டி தனது பதவியைத் தூக்கி எறிந்தார். ஈழப் பிரச்சினையில் ராஜீவின் அணுகுமுறை தவறு என்றார். புலிகள் மீது மதிப்பு வைத்திருந்தவர். போராட்டத்தை மதித்தவர்.

தீக்ஷித் கூட பேட்டி கொடுக்கும்போது ஜெயவர்த்தனேவுக்கு பிரச்சினையை தீர்க்கும் அக்கறையே கிடையாது. இந்திய ராணுவத்தை இழுத்து விட்டு, புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.

மேனனும், நாராயணனும் சென்னை வந்தனர், கலைஞரை சந்தித்துப் பேசினர் என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யக் கூடிய பிரச்சினை அல்ல இது.

கருணாநிதியை சந்தித்த பின்னர் நாராயணனிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். இலங்கைக்கு உணவுப் பொருள் அனுப்பப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே, அதை எப்படி எந்த வழியில் கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்கின்றன்ர. அதற்கு நாராயணன் கூறுகிறார், கொடுக்க வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும். தேவை ஏற்படுமாயின் எப்படிக் கொடுப்பது என்பது குறித்து அப்போது பார்க்கலாம் என்கிறார்.

இத்தனை டன் உணவுப் பொருட்களை கொடுக்கப் போகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் யோசிக்க வேண்டும் என்று நாராயணன் கூறுகிறார். யாரை ஏமாற்ற பிரதமரின் அறிவிப்பு? எனவே இந்திய அரசு, தவறான, மிக மோசமான, சிங்கள அரசுக்குத் துணை போகிற, தமிழர்களை, தமிழகத்தில் உள்ள தமிழர்களையும் சேர்த்து துச்சமாக மதிக்கிற ஒரு அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது.

இலங்கை படையினருக்கு பயிற்சி, கூட்டு ரோந்து குறித்து?

மத்திய அரசு எப்போதுமே இரட்டை நிலையை எடுத்ததில்லை. உண்மையில் அது ஒற்றை நிலைதான். ஒன்று உண்மை, இன்னொன்று வேஷம். தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பது போல காட்டிக் கொள்வது, இலங்கை அரசை எச்சரிக்கிறோம் என்பது போல அமைதித் தீர்வு என்பதெல்லாம் நாடகம். உண்மையில், சிங்கள அரசின் போர் முயற்சிக்கு துணை போவதுதான் இந்திய அரசின் எண்ணம்.

நம்மிடம் கடலோரக் காவல் படை உள்ளது, இரு தரப்பும் காவல் காத்துக் கொண்டுதான் உள்ளனர். இவர்கள் அவர்களுக்கும், அவர்கள் இவர்களுக்கும் தகவல்களை பரிமாறிக் கொண்டுதான் உள்ளனர். இரு நாட்டு வீரர்களும் தனித் தனி கப்பலில் பயணிக்கிறார்கள் அவ்வளவுதான். இரு வீரர்களும் ஒரே கப்பலில் பயணிக்க வேண்டும் என்பது ராஜபக்ஷேவின் பேராசையாக இருக்கலாம். எப்படியாவது பிரச்சினைக்குள் இந்தியாவை இழுக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

இந்தியா நேரடியாக படையை இறக்கி போரில் தலையிடாமல் இருப்பதற்குக் காரணம்; வடக்கே காஷ்மீரில் மண்டை இடி. வட கிழக்கில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது, நேபாளத்திலும் அடி. இத்தனை சிக்கல்கள் இருப்பதால், எதற்காக ஈழத்தில் கால வைக்க வேண்டும் என நினைக்கிறது. ஈழத்தில் கால் வைத்தால், காஷ்மீரில் தலை போய் விடும்.

விடுதலைப் புலிகள் போரைத் தவிர்த்து அமைதி வழியில் தீர்வு காண எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டனர். கடந்த கால கசப்பான அனுபவங்களையும் கூட ஒதுக்கி வைத்து விட்டு முயற்சி செய்து விட்டார்கள். இதற்காக பெரிய இழப்புகளையும் சந்தித்தார்கள். இறங்கி வந்தும் பார்த்து விட்டனர்.

இதையும் மீறி போர் திணிக்கப்படுகிறது என்றால் அதற்கு முகம் கொடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வியட்நாம் மக்களைப் போல எதையும் சந்தித்து முறியடித்து வென்றெடுக்க அவர்களால் முடியும் என்று நம்புகிறேன்.

தமிழகத்தின் பங்கு?

ஈழத் தமிழர்களுக்கு முதலில் கடமைப்பட்டுள்ளது தமிழக மக்கள்தான், தமிழகம்தான். அரசியல் பின்தளமாக இருக்கிற கடமை தமிழகத்திற்கு உண்டு. சீன விடுதலைக்கு சோவியத் ரஷ்யாவும், தென்னாப்பிரிக்க விடுதலைக்கு ஆப்பிரிக்க மக்களும், பாலஸ்தீன போராட்டத்திற்கு அரபு மக்களும் உதவியதைப் போல தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு, உயிர் வாழ்க்கைப் போராட்டத்திற்கு, தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும்.

தங்களது வாழ்க்கை அழிந்து விடாமல் நிற்பதற்கான தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு உதவ வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உள்ளது. அதற்காக பெட்ரோல், ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று பொருள் இல்லை. இந்திய அரசின் கொள்கையை மாற்றுவதில், இயன்றால் அடியோடு மாற்றுவது, அது தமிழர்களுக்கு எதிராக செலுத்தக் கூடிய வீரியத்தைக் குறைக்கும் பங்கு நமக்கு உள்ளது.

தமிழீழ மக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகளுக்கான தடையை நீக்க வேண்டும். இந்த அடிப்படைக் கோரிக்கைகளுக்காக, தமிழக மக்களை ஒன்று திரண்டு உறுதியாக போராவடுதான் ஈழ மக்களுக்கு செய்யம் உதவி. அதை தமிழக மக்கள் செய்வார்கள் என எங்களைப் போன்ற தமிழீழ ஆதரவு அமைப்புகள் நம்புகின்றன. அந்த உணர்வுப் பொறியை இத்தனை காலமாக பாதுகாத்து வந்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை இந்தப் பிரச்சினையில் பேசாமல் இருந்த பல கட்சிகளை பேச வைத்துள்ளோம். எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் இப்போது பேச முன்வந்துள்ளனர். தேர்தல் சந்தர்ப்பவாத கட்சிகள் கூட தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளன. இது மாற்றத்திற்கான அறிகுறி. அதை முறையாகப் பயன்படுத்தி இந்திய அரசை வலியுறுத்துவதன் மூலம் ஈழ மக்களுக்கு உதவி செய்ய முடியும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையின் தாக்குதல்?

கச்சத்தீவை நாம் இழந்தபோதே எல்லாவற்றையும் இழந்து விட்டோம். கொடுக்கக் கூடாது என்று தமிழக கட்சிகள் எல்லாம் கோரின. ஆனால் எல்லைப் பாதுகாப்பு, இறையாண்மை என்று எதுவும் தமிழகத்திற்கு இல்லாததால், மத்திய அரசு கச்சத்தீவை தூக்கிக் கொடுத்து விட்டது. அதை நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை.

தமிழ் இனம் இந்தியாவில் எந்தளவுக்கு அவலமான, நிராதரவான நிலையில், நிலப்பரப்பை இழந்தாலும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு சிங்களப் படையின் தமிழின விரோதப் போக்கே முக்கியக் காரணம். அவர்களுக்கு எல்லாத் தமிழர்களும் விரோதிகள்தான், அனைவருமே விடுதலைப் புலிகள்தான். அதனால்தான் இலங்கையில் மீன் பிடி தொழிலையே தடுத்து வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இந்தியப் படையால் காக்க முடியவில்லை என்றால், மீனவர்களுக்கு ஆயுதம் கொடுங்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்.

இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையும், கப்பல் படையும் மீனவர்களை பாதுகாக்கவில்லை. இதுவரை சிங்களப் படையுடன் இந்திய படை மோதியது, மீனவர்களை காப்பாற்றியது, மீட்டுக் கொண்டு வந்தது என ஒரு செய்தி கூட வந்ததில்லை. ஒருமுறை கூட இந்தியப் படைகள் அப்படி செயல்பட்டதில்லை.

புலிகளுக்கு தடை இல்லை என்ற இலங்கையின் முடிவு?

தடை இருக்கிறதா, இல்லையா என்பதில் பெரிய வேறுபாடு இல்லை. தடை இல்லை என்ற முடிவு சர்வசே அளவில் நாங்கள் ஜனநாயகத்தை காக்கிறோம், ஜனநாயகமாக இருக்கிறோம். பாருங்கள் போரிடுகிற அமைப்பைக் கூட நாங்கள் தடை செய்யவில்லை என்று காட்டிக் கொண்டு, ஜனநாயக தகுதியை உயர்த்திக் கொள்ளவே இந்த நாடகம்.

நார்வே குழுவின் முயற்சிகள்?

நார்வேக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியமானாலும், அமெரிக்காவானாலும், பிரிட்டன் போன்ற நாடுகளானாலும் கூட அமைதித் தீர்வு என்பதை நிர்ணயிக்கிறபோது சிங்கள அரசை அங்கீகரிக்கப்பட்ட அரசாகவும், புலிகளை போராடுகிற கொரில்லா குழுவாகாவும்தான் பார்க்கிறார்கள். ஆனால் நார்வேயின் அணுகுமுறை என்னவென்றால் இரு தரப்புகளையும் சம தரப்புகளாக கருதுகிறார்கள். எந்தத் தீர்வையும் நிபந்தனையாக விதிக்கவில்லை.

அமெரிக்கா , இந்தியா சொல்வது நிபந்தனையாக எந்தத் தீர்வையும் நார்வே கூறவில்லை. போர் வேண்டாம், அமைதித் தீர்வுக்கு வாருங்கள், என்ன தீர்வு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றுதான் நார்வே கூறுகிறது. போர் நிறுத்த மீறல்கள் என்று வருகிறபோதுகூட சிங்கள அரசை நார்வே கண்டித்துள்ளது. இதற்கு வரலாற்றுக் காரணம் ஒன்றும் உள்ளது.

நார்வே நாடு பிறந்த விதம் அப்படி. 1904ல் ஸ்வீடன் நாடாளுன்றத்தில் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு பெரும்பான்மை அடிப்படையில், விரும்பினால் நார்வே தனியாகப் பிரியலாம் என அறிவித்தனர். நார்வே பிரிந்தது குறித்து என்ற தலைப்பில் லெனின் தனி அதிகாரமே எழுதியுள்ளார்.

தேசிய இனம் பிரிந்து போக விரும்பினால் அதற்கு ஆதாரமாக நார்வேயைத்தான் லெனின் உதாரணமாக குறித்துள்ளார். நார்வே பிறந்த விதமே அப்படித்தான் என்பதால் அவர்கள் இப்பிரச்சினையில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர்.

அமைதி பேசுவதற்கான அணுசரணையாளர், இரண்டு தரப்பையும் சமமாக கருதும் நிலைப்பாடு அவர்களிடம் உள்ளது. அற்றக் கூலியும், அனைத்து உரிமையும் வைத்துள்ள முதலாளியும் கூட சமமாக அமர்ந்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெற முடியும்.

ஈழத்தில் மீண்டும் முழு அளவில் போர் வெடிக்குமா?

பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையை, ஏதோ நாளைக்கே போர் மூளப் போகிறது என்பது மாதிரி புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் உரையின் நோக்கம், வழிமுறைகளைப் பற்றி அல்ல. அதன் பொருள், தனி அரசுதான் ஒரே தீர்வு என்பதை எப்படி அண்மைக் காலத்திய நிகழ்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுகிறார். சிங்களப் பேரினவாதம் எந்தத் தீர்வையும் அழித்து விடும் என்றுதான் பிரபாகரன் சொல்கிறார். ராஜபக்ஷே அணுகுமுறை என்பது பேசிக் கொண்டே அழிப்பதுதான். எனவேதான் நமக்கான தீர்வு, தனித் தமிழ் அரசுதான் என்பதை நினைவூட்டியுள்ளார். வரலாற்று நோக்கில் பார்க்கும்போது, ஆயுதப் போர் மூலம் தீர்வு காண முடியும் என்பதுதான் சரி. புலிகளுக்கு மட்டும்தான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை, இலங்கை அரசுக்கு இல்லை, என்று சொல்ல முடியாது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவே ஆயுதம் மூலம்தான் தீர்வு காண முடிந்தது. காஷ்மீரிலும் இந்தியா 'பஜ கோவிந்தம்' பாடிக் கொண்டிருக்கவில்லை. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தலையிட்டதே அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்து விட்டது. எனவே என்னதான் புஷ் ஆசைப்பட்டாலும் இன்னெரு மண்ணில் கால் வைக்க வாய்ப்பே இல்லை.

ஈழத்தில் போர் வெடித்தால் இந்தியா தலையிடுமா, இல்லையா என்று கேட்டுப் பார்க்கத்தான் வேண்டும். அப்படியெல்லாம் பார்க்கும்போது, முடிந்தவரை நமது படைகளை தனிமைப்படுத்துவதும், நண்பர்களை ஆதரவாக திரட்டிக் கொள்வதும், ஊசலாடக் கூடிய சக்திகளை செயழிக்கச் செய்வதும் போர் உத்திகளின் வழிமுறைகள். இதையெல்லாம் தெரிந்தவர்கள்தான், புலிகள் அமைப்பின் தலைமையிடத்தில் உள்ளனர்.

போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். எப்படி விடுதலைப் புலிகள் அதை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது படை வலிமை, தலைமையின் ராணுவ உத்தி, ஆயுத வலிமை இவற்றை மட்டும் பொறுத்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும் அது காரணிகள்.

புலிகளை மக்கள் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் மேலும் வீரர்கள் அணிவகுப்பதற்கேற்ப மக்கள் எப்படி ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கி��
�ார்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்திய ராணுவத்தை சந்தித்த காலத்தைக் காட்டிலும், அதன் பிறகு நடந்த நிகழ்வுகளைக் காட்டிலும், போர் மூளுகிறபோது பன்மடங்கு கூடுதலான அரசியல் விழிப்போடும், ஆயத்தத்தோடும், கட்டமைப்புகளோடும் புலிகள் தயாராக உள்ளனர். முன்பைக் காட்டிலும் இப்போது வலு அதிகம் உள்ளது. ஆதரவு விரிவடைந்து உறுதிப்பட்டுள்ளது. பல படி முன்னணியில் உள்ளனர் என்றார் தியாகு.
http://thatstamil.oneindia.in/specials/art...agu_061213.html

அரசுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தை நேற்று சீற்றத்துடன் கிழித்து வீசியது ஐ.தே.கட்சி.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அணியினர் நேற்று அரசுத் தரப்பில் போய் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்தக் கட்சி தாவும் படலத்தால் சீற்றமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தான் செய்துகொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தது.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்றுமுற்பகல் கூட்டப்பட்ட ஒரு விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆவணம் துண்டு துண்டாகக் கிழித்து வீசப்பட்டது.

ஐ.தே.கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க ஒப்பந்த ஆவணத்தைக் கிழித்து வீசியதோடு அரசிற்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் இருந்த அனைத்துத் தொடர்புகளும் இத்தோடு துண்டிக்கப்படுகின்றன என்று அறிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கூட்டப்பட்டது. இச்சந்தின்போதே இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்து வீசப்பட்டது.

இச்சந்திப்பின்போது ருக்மன் சேனாநாயக்க ஊடகவியலாளர்களுக்கு உரையாற்றுகையில், நாட்டின் நிலையான சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் அரசுக்கு ஆதரவு வழங்குவதற்காக நாம் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தில் அரசு ஈடுபட்டால் இந்த ஒப்பந்தம் கிழித்தெரியப்படும் என அரசிற்கு அப்போது அறிவித்திருந்தோம்.

ஒப்பந்தத்தின் எட்டாம் பிரிவின்படி கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் கட்சி உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடுதல் போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டால் ஒப்பந்தம் கிழித்தெரியப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்த ஒப்பந்தத்தை நாம் இப்போது கிழித்தெறிகின்றோம். எமது கட்சியை நாம் அரசிற்கு வழங்கி வந்த ஆதரவை மதிக்காத இந்த அரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இனியும் மதித்து நடக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.

இந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவது மாத்திரமன்றி அரசுடன் நாம் வைத்திருந்த எல்லாத் தொடர்புகளையும் நாம் இத்தோடு துண்டித்து விடுகிறோம்.

கயந்த கருணாதிலக
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் ஊடகப் பேச்சாளரும் எம்.பியுமான கயந்த கருணாதில கூறுகையில்,
இன்றைய நாள் ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்கிய நாள். கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக நாம் பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
எமது தலைவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் அவரது தலைமையின் கீழ் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ஜோன்ஸன் பெர்னாண்டோ
ஐ.தே.கட்சியின் எம்.பி. ஜோன்ஸன் பெர்னாண்டோ கூறுகையில்,
அரசின் பக்கம்போய்ச் சேர்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் மக்களுக்கும், இந்த தேசத்திற்கும் துரோகமிழைத்த தேசத் துரோகிகளாகக் கணிக்கப்படுவர்.

ஐ.தே.கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று அரசுடன் இணைந்துகொண்ட இவர்களை மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்.
அரசைப் பலப்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு அரசு இவர்களை தம் பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. நிச்சயமாக இனித்தான் அரசு பலமிழக்கப்போகின்றது என்றார்.
நன்றி>லங்காசிறீ

சமாதானத்தை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை.

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது.

முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பட்டேல் தெரிவித்தார்.

தற்போது எம்மிடம் 750 மில்லியன் டொலர் திட்டமிட்டமுள்ளது. இதில் 25 % நிதி வடக்கு கிழக்கில் வீடமைப்பு பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் மற்றும் விவசாயம் என்பவற்றிக்கு முதலிடப்படவுள்ளது. எனவே இலங்கையிலுள்ள உள்நாட்டு மோதல்களை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பட்டேல் மேலும் தெரிவித்ததாக ஏ.எப். பி செய்தி தெரிவித்துள்ளது.

THANKS: WWW.VIRAKESARI.LK

Sunday, January 28, 2007

இலங்கையில் புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்தது.

சுதந்திரக் கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்வை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க, தமது கட்சியின் மாற்று அணியினர் அரசாங்கத்தில் இணையும் போது, புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.

இதனிடையே சிறீலங்கா அரசாங்கத்திற்கு கட்சி தாவியிருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீன அணியாக நாடாளுமன்றத்தில் செயற்படப் போவதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.


ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவது குறித்து கவலை கொள்ளவில்லை

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கவலை கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேச ரீதியிலும் உள் நாட்டிலும் மிக்பபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார்

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த் மகிந்த ராஜபக்சவின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையால் முறிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கு மிகவும் அடிப்படையானது என சர்வதேசத்தால் கருதப்பட்ட ஒப்பந்தம் முறிவடையும் நிலையை மகிந்த ராஜபக்ச ஏற்படுத்தியுள்ளமை சர்வதேச ரீதியில் மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடியை மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படுத்தும் என சுட்டிக்காட்பட்டுள்ளது

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மத்தியில் அது அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் இதன் காரணமாக அரசாங்கத்தினை சுமூகமான நடத்திச் செல்ல முடியாத நிலை மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார்.

உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை நடத்துவது மகிந்த ராஜபக்சவிற்கு இயலாத காரியம் என்றும் தனது தவறுகளுக்காக அவர் வருந்தும் காலம் விரைவில் ஏற்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்

இதன் காரணமாகவே கட்சி தாவல் குறித்து அக்களை கொள்ளாமால் அவர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
நன்றி>பதிவு.

சிறிய நாட்டில் உலகின் மிகப்பெரிய அமைச்சரவை.

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கத்துக்கு கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அரசில் இணைய உள்ளனர். அதேவேளையில், இவ்வாறு அரசுடன் இணைந்து கொள்பவர்களையும் உள்ளடக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பும் இன்று நடைபெற உள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அதிருப்தியடைந்துள்ள சுமார் 17 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசில் இணைந்து கொள்வார்கள் என அரசு எதிர்பார்க்கின்றது.

ஆனால் 13 உறுப்பினர்களே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் சிறப்பு வைபவம் ஒன்றில் இவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து கொள்வதுடன், புதிய அமைச்சர் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசு உள்வாங்குவது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்கசவினது இரட்டை வேடத்தை உள்நாட்டிலும் அனைத்துலகத்திலும் அம்பலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவரட்ன தெரிவித்துள்ளார். அதேசமயம் "சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காகவே தாம் அரசில் இணைவதாக" சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுடன் இணைவதைத் தொடர்ந்து இன்று காலை சிறிலங்கா அரசின் அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் கங்கிரசும் அரசில் இன்று இணைந்து கொள்வார்கள் என அரச தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக அரச தரப்பு மேலும் தகவல் தெரிவிக்கையில்:

"புதிய அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் இன்று காலை 10.00 மணியளவில் அரச தலைவரின் செயலகமான அலரி மாளிகையில் நடைபெற உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அரசில் இணையவும், அமைச்சர் பதவிகளை ஏற்கவும் முன்வந்துள்ளனர். மேலும் அரசில் இணையும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு செய்துகொள்ளாது. ஏனெனில் இந்த புதிய ஒப்பந்தத்தால் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் றெல உறுமய போன்ற கட்சிகளுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குழப்பம் ஏற்படலாம்.

கட்சிதாவும் 17 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேருக்கு அமைச்சர் பதவிகளும் 7 பேருக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதுடன், இது தொடர்பாக நேற்று இரவும் கட்சிதாவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச லைவருக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றது" என அவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச தரப்புக்கு கட்சிதாவும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

கரு ஜெயசூர்ய, எம்.எச்.மொகமட், பி. தயாரட்ன, தர்மதாசா பண்டா, ஜி.எல்.பீரீஸ், காமினி லொக்குகே, மிலிந்த மொறகொட, பந்துல குணவர்த்தன, மனோ விஜயரட்ன, ரஜித சேனாரட்ன, ஹேமகுமார நாணயக்கார, நவீன் திஸநாயக்க, நோமல் பெரேரா, எம்.முஸ்தப்பா, பி.சூரியாராச்சி, லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, எட்வேட் குணசேகர ஆகியோர் இன்று அரசில் இணைய உள்ளனர். மேலும் ரஞ்சித் மதுமபண்டாரா பின்னர் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் புதிய அமைச்சரவை 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியானால் இது உலகத்தில் மிகப் பெரிய அமைச்சரவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Saturday, January 27, 2007

கொழும்புதுறைமுகத்தில் உண்மையில் என்ன நடந்தது?

கொழும்பு துறைமுகத் தாக்குதல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா?

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகம் மீது நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலானது அரசினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


தாக்குதலில் தாக்குதலாளிகளால் 4 கடற்கலங்கள் அழிக்கப்பட்டதாக நேற்று மாலை கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், சிறிலங்கா கடற்படையினர் தாம் சந்தேகத்திற்கு இடமான 3 படகுகளை அழித்ததாக நேற்று காலை தெரிவித்திருந்தனர்.

பின்னர் துறைமுகப்பகுதியிலிருந்து தப்பியோடிய சந்தேகத்திற்கு இடமான 9 பேரை கைது செய்திருப்பதாக நேற்று கடற்படையினர் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னர் சுமார் இரண்டரை மணிநேரம் துறைமுகம் மூடப்பட்டதுடன் ஊடகவியலாளர்களும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக உள்ள உட்துறைமுகப்பகுதிக்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று காலை நான்கு பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களை கொழும்பின் கடற் கரையோரமாக தாம் கேட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சிறிலங்காவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்தும்" என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளதாவது:

"இத்தாக்குதல் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகையை அதிகரிக்கச் செய்வதுடன் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படத்தலாம். அதாவது சிறிலங்காவின் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகை அனைத்துலகத்தில் அதிகரிக்கலாம்.

கொள்கலன்களை இறக்கும் கப்பல்களின் உரிமையாளர்கள் அதிகளவிலான கட்டணங்களையும், அதிகளவிலான காப்புறுதித் தொகையையும் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இக்கட்டண உயர்வுகள் இறுதியில் வாடிக்கையாளர்களான பொதுமக்களையே பாதிப்படையச் செய்யும். தற்போதைய காப்புறுதி தொகை 0.05 விகிதம் இது பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பொறுத்து மாற்றமடையலாம்" என்றார் அவர்.

"நேற்றைய தாக்குதலால் உடனடியான பாதிப்புக்கள் ஏற்படாது. ஆனாலும் சிறிலங்காவிற்கு வரும் கப்பல்களினதும், கொள்கலன்களினதும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கலாம்" என கடல்வள காப்புறுதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறிலங்காவின் கப்பல்துறை, துறைமுகங்கள் அமைச்சர் மங்கள சமரவீர, கப்பல்துறை துறைமுகங்கள் பிரதியமைச்சர் துமிந்த திசநாயக்கா ஆகியோர் நேற்று துறைமுகத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

தாக்குதல் தொடர்பாக துமிந்த திசநாயக்கா கூறியுள்ளதாவது:

"இத்தாக்குதல் துறைமுகத்திற்கு வெளியே இடம்பெற்றதால் கப்பல் போக்குவரத்தை பாதிக்காது. முன்பு நடந்த தாக்குதல்கள் போல் அல்லாமல் இத்தாக்குதலில் கப்பல்கள் சேதமடையவில்லை. துறைமுகத்திற்கு வெளியில் தரித்து நின்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றில் இருந்த 3 கொள்கன்ங்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.

கொள்கலன்களின் சேதத்திற்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக அதன் உரிமையாளர்களுடன் இன்னும் கலந்துரையாடவில்லை. இத்தாக்குதல் முறியடிப்பு துறைமுகத்தின் உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே கப்பல் போக்குவரத்திலோ அல்லது பொருளாதாரத்திலோ பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாது" என்றார்.

1996 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்திலும் கொழும்புத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் துறைமுகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் துறைமுகத்திற்கு அண்மையில் மீன்பிடிப்பதும் தடை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது
நன்றி>புதினம்.

திருமலையில் 500 ஏக்கர் நிலம் பறிமுதல்.



திருமலை மூதுர் கிழக்கு - மேற்கு ஆகிய பகுதிகளில் அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கென பொதுமக்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

இதனால் தற்போது 500 ஏக்கர் காணியை அரசாங்கம் கபளீகரம் செய்திருப்பதால் 600 க்கும் அதிகமான குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருப்புகளை இழக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளதாக அறியமுடிகிறது.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை சம்பூர் பகுதிக்கு நேரில் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் அங்கு அனல்மின் நிலையத்தை நிறுவுவதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
நன்றி>பதிவு.

கடற்புலிகளின் பலத்தை முற்றாக முறியடிக்க முடியாது!!!

இன்று காலை 5.30 மணியளவில் கொழும்பு தறைமுகத்தின் வெளிச்ச வீடு வரை ஊடுருவிய இந்த படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் தாக்குதலில் ஒரு படகு மூழகடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனைய இரண்டு படகுகளும் அங்கிருந்து தப்பிச் சென்ற இரண்டு படகுகளையும் கடற்படை படகுகள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலத்தை முற்றாக முறியடிக்கும் தாக்குதல்களை தொடரவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இடம்பெற்றுள்ள இந்த ஊடுருவல் நடவடிக்கையானது, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை கருத்து வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தவறானது என்றும் யுத்தத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியாத சக்தியாக விடுதலைப் புலிகள் விளங்குகின்றார்கள் என்பதை இந்த சம்பவம் தெளிவு படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயம் வரை கடற்புலிகளின் படகுகள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளமை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த படகுகள் தாக்குதல் நடத்தும் நோக்கில் கொழும்பு துறை முகத்தினுள் நுழையவில்லை என்றும் தம்மால் கொழும்பு வரை கடல் மார்க்கமாகவும் வந்து செல்முடியும் என்பதை வெளிப்படுத்துவதே இந்த ஊடுருவலின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற் புலிகளின் தளமொன்றில் இருந்து இந்த படகுகள் சுமார் 125 மைல் தூரம் பயணம் செய்திருக்க வேண்டும் என்றும் அந்த படகுகள் கொழும்பு துறை முகத்தினுள் நுழையும் வரை ஸ்ரீலங்கா கடற்படைகளால் அந்த படகுகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் வெற்றி கொண்டு விடலாம், என்ற மகிந்த சிந்தனையை இந்த நடவடிக்கை கேள்விக்குறியாக்கியிருப்பதாக, சிங்கள ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின்மீது தாக்குதல் திட்டமாம்.

சிறிலங்கா தலைநகரில் உள்ள கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றைத் தாம் இன்று காலையில் முறியடித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன.


அதிவேகப் படகுகள் மூலம் வந்து துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும், இவ்வாறு விடுதலைப் புலிகள் வந்த படகுகளில் ஒன்று கடற்படையினரது தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர்.

மூன்று படகுகளிலேயே விடுதலைப் புலிகள் வந்ததாகவும், அவற்றில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய இரண்டு படகுகள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைக் கடற்படையினர் முடுக்கிவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திலும், அதனையடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. முப்படையினரும் அப்பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவிருந்தது.
நன்றி>புதினம்.

'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ்.

"திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்:

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான வாகரையை கைப்பற்றிய சிறிலங்கா அரசு, போரைத் தொடர்ந்து முன்னெடுத்து விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை முற்றாக அழித்துவிடுவதன் மூலம் 20 வருட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் நம்புகின்றது.

சிறிலங்காவின் அரச தலைவரும் அவரின் படையினரும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடுகின்றார்கள். அதன் மூலம் 1983 ஆம் ஆண்டிலிருந்து 67,000 பொதுமக்களும் கடந்த ஆண்டு 4,000 மக்களும் கொல்லப்பட்ட கொடூரமான போருக்குள் அரசு ஆழமாக இறங்கப் போகிறது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இது ஒரு சக்கரம் அவர்கள் (அரசு) நினைக்கலாம் தாம் வெற்றியடைந்து விடலாம் என்று. அவர்கள் ஏதோ ஒன்றை முயற்சித்து பார்க்கப் போகின்றார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் போர் தொடரப் போகிறது என்றே, ஏனெனில் இரு தரப்புக்கும் அதனை நிறுத்தும் எண்ணம் கிடையாது. மறுபக்கம் பார்த்தால் அரசும் அதன் சிந்தனைகளும் மேலும் போரை நோக்கியே செல்கின்றன. அதற்கான காரணம் தாங்கள் வெற்றியடைந்து கொண்டு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே தாங்கள் எங்கும் தாக்குதலை நடத்தலாம் என அரசு எண்ணுகின்றது. இதனை நிறுத்த விடுதலைப் புலிகள் ஏதாவது செய்தே ஆகவேண்டும்" என தனது பெயரை குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பகுதி காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி அழிப்பதிலும், புதிதாக கைப்பற்றப்பட்ட கிழக்கின் கரையோரப் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்துவதிலும் அரச படையினர் காட்டிவரும் உற்சாகம் அவர்களின் ஆதிக்கம் தற்போது மேலோங்கி உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் பிறிதொரு சமருக்காக விடுதலைப் புலிகள் தற்போது பின்வாங்கியுள்ளார்கள், அவர்களின் சமரிடும் பலம் தக்கவைக்கப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இராணுவம் விடுதலைப் புலிகளினது இராணுவத் தளங்களை தேடி அழிக்கப் போவதாகவும் அதில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகாளால் நிர்வகிக்கப்படும் வடபகுதியும் அடங்கும்" எனவும் அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேன்ஸ் பாதுகாப்பு வார இதழின் ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவிக்கையில்:

"இது ஒரு தெளிவான அறிவித்தல். அதாவது அரசு, விடுதலைப் புலிகள் மீதான போரை முழுமையாக மேற்கொள்ளப் போகின்றது. விடுதலைப் புலிகளால் அரச படைகள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் உண்டு.

எனவே எதிர்வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் மிகப்பொரும் சமர்கள் ஆரம்பமாகலாம். விடுதலைப் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் அல்லது அவர்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலே அமைதிப் பேச்சுக்கள் சாத்தியமாகலாம்.

விடுதலைப் புலிகளின் பலமான கடற்புலிகளின் பலம் குறைந்து விடவில்லை அவர்கள் தற்போதும் தமது போரிடும் திறனை தக்கவைத்துள்ளனர். அதாவது அவர்கள் முழு அளவிலான மோதல்களுக்கு முகம் கொடுத்து தமது படைகளை இழக்காது பின்வாங்கியுள்ளனர். எனவே தற்போதும் பலமான எதிரியாகவே அவர்கள் விளங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் வாகரையை கைப்பற்றியது அரசபடைகள் போரில் மேலோங்கி உள்ளதையே காட்டுகின்றது. ஆனால் அதன் மூலம் புலிகளின் இராணுவ வலிமை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமில்லை.

கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக விடுதலைப் புலிகளை வெளியேற்றுவது இராணுவத்தின் மிகப்பெரிய நடவடிக்கை. ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்படும் போது விடுதலைப் புலிகள் புதிய களமுனைகளை திறக்கமாட்டார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

போரை நிறுத்தும்படியும், படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் அனைத்துலக நாடுகளினாலும் அமைப்புக்களினாலும் விடுக்கப்படும் அறிவித்தல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது.

கடந்த காலங்களிலும் மற்றும் அண்மையிலும் இடம்பெற்று வரும் மோதல்களால் இடம்பொயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கு தரமான தங்கும் இடங்கள் கூட அற்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே மோதல்கள் உக்கிரமடைந்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என பொதுமக்களும், அவதானிகளும் கவலை தெரிவித்தள்ளனர்.

நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தகவல் தெரிவிக்கையில்:

"கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதுலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையானது மோதல்கள் எல்லா இடங்களுக்கும் பரவுவதற்கே வழிவகுக்கும். இரு தரப்பினரும் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் இது போர்நிறுத்த உடன்பாட்டின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல" என்றார் அவர்.
நன்றி<புதினம்.

Friday, January 26, 2007

'இராணுவத் தீர்வே அரசின் திட்டம்'

இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தடுக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மௌனம் சாதிக்கக்கூடாது எனவும், சமாதான முயற்சிகளினுடாக இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்தியா மற்றும் கனடாவுக்கான தூதுவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.


இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத், பிரதித் தூதுவர் ஏ.மாணிக்கம் ஆகியோருடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலையும், கனடியத் தூதுவருனான சந்திப்பு நேற்றுப் பிற்பகலும் இடம்பெற்றது.

இந்த இரு சந்திப்புக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு சந்திப்புக்களிலும் இந்திய மற்றும் கனடியத் தூதுவர்களுக்கு நாட்டின் தற்போதைய நிலைமைகளை விளக்கிய தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ ரீதியான முன்னெடுப்புக்கள் எவ்வித பலனையும் தரப்போவதில்லை எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சமாதான முயற்சிகள் தொடர்பாக இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறக்கணித்து விட்டு தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது என கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

இங்கு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:

'ஏ-9 மற்றும் ஏ-15 போன்ற பிரதான வீதிகளை மூடி பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி தனது சொந்த நாட்டு மக்களையே பட்டினிச்சாவுக்குள் வீழ்த்தி பழிவாங்கிக்கொண்டிருக்கின்றது. அரச படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக உள்ளுரிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ள இன்றைய சூழ்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு அரச படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கிழக்கில் மாணவர்களும், இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டு கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும், அரச படையினரின் தாக்குதல் சம்பவங்களும் திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நிகழ்ச்சித் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்து நீதியான தீர்வைக்காண்பதற்கு அழுத்தத்தைத் கொடுக்கவேண்டும்."

இவ்வாறு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய மற்றும் கனடிய தூதுவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

நன்றி>புதினம்.

'பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' -சர்வதேச ஜூரர்கள்.

தற்போது கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இச்சட்டம் காரணமாக பலவந்தமாகக் காணாமல் போதல் அதிகரித்திருக்கின்றது எனவும் இவ்வாணைக்குழு தெரியப்படுத்தியிருக்கின்றது.

சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்திருக்கும் ஆணைக்குழு, பலவந்தமாக காணாமல் போதலிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேசப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கத்தைக் கைச்சாத்திடுமாறு கேட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறிலங்காவில் பலவந்தமாகக் காணாமல் போதலின் வரலாற்றை கருத்திற்கொள்ளும் போது காணாமல் போதலிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமையும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

பலவந்தமாகக் காணாமல் போதல் என்ற கொடூரத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை இதன் மூலம் வெளிப்படுத்த முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

நன்றி>புதினம்.

Thursday, January 25, 2007

அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும், அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும்.

சிறுவர்களை படைக்கு சேர்ப்பதற்கு இராணுவம் உதவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவசியம் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் அவதானிப்புக்குழு நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதேசமயம், சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பான குற்றப் பொறுப்பில் அரசாங்கத்திற்கு சம்பந்தமிருப்பதான குற்றச்சாட்டானது அரசின் பாசாங்குத்தனத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும் மனித உரிமை அவதானிப்புக் குழு சாடியுள்ளது.

`காரணங்களை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் மீதான குற்றப் பொறுப்பு குறித்து தீவிரமான பக்கச்சார்பற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்' என்று மனித உரிமைக் குழுவின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

`அரசாங்கம் விசாரணை நடத்தாவிடில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் கெஹலிய

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துமெனக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அதேசமயம், இந்த மனித உரிமை அவதானிப்புக்குழு நம்பத்தகுந்த ஆதாரத்தை முன்வைக்க வேண்டுமென கூறியுள்ளார். வெறும் அறிக்கைகளுடன் மட்டுமல்லாது பெறுமதியான ஆதாரத்தை முன்வைத்தால் தேவை ஏற்படின் நாம் நடவடிக்கை எடுக்க முடியுமென்று அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அதேசமயம், இந்த மனிதஉரிமைக் குழுவின் சிறுவர் உரிமைக்கான சட்டத்தரணியான ஜோபெக்கர் கருத்துத் தெரிவிக்கையில், புலிகள் சிறுவர்களை படைக்குத் திரட்டுவதாக பல வருடங்களாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்து வருகிறது. இப்போது அதே குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
நன்றி>தினக்குரல்.

Wednesday, January 24, 2007

சிறார்களைப் போர்ப்படையில் சேர்ப்பதில் இலங்கை அரசு, ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து செயற்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் குற்றச்சாட்டு.


சிறார்களைப் போர்ப்படையில் பயன்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் ஒட்டுக்குழுக்களுடன் கைகோர்த்துச் செயற்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் அழுத்தக் குழுவான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் குற்றஞ்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் கருணா குழு, கிழக்கு மாகாணத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தண்டனை கிடைக்கும் என்ற பயம் எதுவும் இல்லாமல் சிறார்களையும், இளைஞர்களையும் தமது போர்ப்படையில் சேர்த்துவருவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

தாம் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படுவதை இலங்கை அரசும், கருணா அணியினரும் மறுத்துள்ளார்கள், அத்தோடு தமது அணியில் சிறார்கள் இருப்பதாகக் கூறப்படுவதை கருணா அணி மறுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பும் சிறார்களைத் தொடர்ந்தும் போர்ப்படைக்குச் சேர்ப்பதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறார்களை படையில் சேர்க்க வேண்டிய அவசியம் எதுவும் தமது அணிக்குக் கிடையாது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக் வெல்ல அவரகள், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா மற்றும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
நன்றி>பிபிசி

இறுதிப்போரை எதிர்கொள்ளும் விடுதலைப் புலிகள்.

எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாததொரு புதிய பரிமாண வடிவத்தை வெளித்தள்ளப்போகிறது நடைபெறவிருக்கும் இறுதி யுத்தம்.

எதிரியின் சமகால போரியல் உத்திகளை கூர்ந்து அவதானிக்குமொருவர், முன்னைய கால விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரங்களை முறியடிக்கும் தந்திர உபாயங்களை அரசு தற்போது பிரயோகிப்பதை உணர்ந்து கொள்வார்.

இருப்பினும் இனிவரும் யுத்த களத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் மரபு கெரில்லா போர் வழிமுறைகளைக் கற்று, அடுத்ததொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்படச் சாத்தியமில்லை.

ஆயினும் வடக்கை இழந்தாலும், கிழக்கையாவது தக்க வைக்கும் கடைநிலை முடிவினை தமது மூல உபாயத்தில் அரசு நிர்ணயம் செய்திருக்கும்.

நிர்வாக ரீதியாக வடக்கு - கிழக்கை மூன்றாகப் பிரித்தாலும், மூர்க்கத்தனமான இராணுவ அழுத்தங்களை கிழக்கிலேயே அதிகம் சுமத்துகிறது.

யாழ். குடாவில் 40,000 படைகளை தக்க வைத்தபடி, கிழக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள், புலிகளின் சமராடும் பலத்தை பரவலாக்குமென அதியுயர் இராணுவ தலைமை தனது வியூகத்தை வகுக்கிறது.

தற்போது கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நோக்கிய இராணுவப் படையெடுப்பை நிகழ்த்தியவாறு, வடபகுதியில் தமது முன்னரங்க நிலைகளிலிருந்து ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலோடு வான்வெளிக் குண்டுவீச்சினை நடத்துகிறது.

ஆகவே அரசின் இராணுவ நகர்வுகள் குறித்த நிகழ்ச்சி நிரலினை விடுதலைப் புலிகள் இலகுவாகப் புரிந்திருப்பார்கள். வன்னி வான்பரப்பில் ~வண்டு| என்று செல்லமாக அழைக்கப்படும் ஆளில்லா வேவு விமானம் வட்டமிட்டால், மணி ஓசையைத் தொடர்ந்து வரும் யானை போல், கிபீர் மிகையொலி விமானங்கள் குண்டு வீச்சினை நடாத்துமென்று வன்னிக் குழந்தைகளுக்கும் தெரியும்.

நாகர்கோவிலில் படை குவிக்கப்படுவதாக ஊடகச் செய்திகள் பெரிதுபடுத்தினால், கிளாலி முகமாலையூடாக வலிந்த படையெடுப்பை அரசு முன்னெடுக்கப்போவதாக புலிகளின் புலனாய்வுப் பிரிவு கூறித்தான் வடமுனைத் தளபதி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.

சிறிலங்காவின் தந்திரோபாய இராணுவ நகர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய பட்டறிவினை சாதாரண மக்களே அனுபவத்தினூடாக பெற்றிருப்பர்.

ஆயினும் ஹபரணைத் தாக்குலை முன்கூட்டியே அறியக்கூடிய வலிமையான புலனாய்வுப் பிரிவு அரசிடம் இல்லையென்பதே முற்றிலுமான உண்மை.

போரியல் பலமென்பது வெறுமனே படைவீரர்களின் எண்ணிக்கையிலும், கூடியளவு இராணுவத் தளபாடங்களின் பலத்திலும் மட்டுமே தங்கியுள்ளதென அரசு போடும் தப்புக்கணக்கு, முன்பு பல தடவைகள் பொய்யாகிப்போயுள்ளன.

இப்பலவீனமான இராணுவ நிலையை உணர்ந்துள்ள அரசு, ஒட்டுக்குழுக்களின் துணையுடன் புலிகளின் ஆதரவாளர்களை அழித்தொழிப்பதையும், தமிழீழ தேசியம் பேசுவோரை கொலை செய்வதையும் மேற்கொள்கிறது.

அத்துடன் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணிகளை (டுசுசுP) உருவாக்கி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் தாக்குலையும் தொடுக்கிறது.

பேச்சுவார்த்தை தேனிலவு காலத்தில், ஆழ ஊடுருவும் குழுக்களால் கொலையுண்ட மூத்த தளபதிகளின் எண்ணிக்கை மிக அதிகம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஓரங்கட்டி, அரசு தொடுக்கும் தாக்குதல்களால், ஊடுருவித்தாக்கும் செயற்பாடுகளை முன்னரங்க நிலைகளை அண்மித்த பகுதிகளிலேயே மேற்கொள்ள முடிகிறது.

கண்ணில் தென்படும் வாகனங்களை எழுந்தமானமாகத் தாக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. அத்துடன் தென்பகுதியில் இடம்பெறும் வெடிகுண்டுகள் தாக்குதலின் எதிர்வினையான மாற்றச் செயற்பாடாகவே இது அமைகிறது.

வடகிழக்கிலுள்ள மாவட்டங்களை தனித்தனியாக வகை பிரித்தால், அங்குள்ள இராணுவ அதியுயர் கட்டளைத் தலைமையின் உயிர்பீடப் பின்தளங்கள், திருமலையைத் தவிர்த்து, கிழக்கு மாகாணத்தில் பெரியளவில் இல்லையென்றே கூறலாம்.

வடக்கைப் பொறுத்தவரை, பலாலி, தள்ளாடி, வவுனியா போன்றவை பரந்த பிரதேசத்தினை கட்டுப்படுத்தும் பின்தள மையப்புள்ளிகளாக அமையும்.

மட்டக்களப்பு அம்பாறை பிரதேசத்தில் இராணுவ உயர்பீடம் நகரப்பகுதியில் அமைந்தாலும், விசேட அதிரடிப்படைப் பிரிவின் அணியும் இணைந்து செயல்படுகிறது.

இவ்வுயர் பீடம் பலாலி, திருமலை போன்ற பலம் பொருந்தியதொரு பின்தளமாக அமையவில்லை. விமானப்படைத்தளம் இப்பிரதேசத்தில் இல்லாதிருப்பதும் ஒரு காரணியாக இருக்கலாம்.

ஆனையிறவில் முன்பு படைகள் குவிக்கப்பட்டிருந்தது போன்று சகல பின்தளங்களிலும் இன்று படைவலு பரவலாக்கப்படடுள்ளது. சம்பூரைத் தக்க வைக்க மேலதிக படையினர் தேவைப்படுவதால் ஓடிப்போன படையினருக்கு நிரந்தர பொது மன்னிப்பு வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள் மஹிந்தர் தள்ளப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் பக்கம் எமது பார்வையை நுழையவிட்டால், அவர்களின் படைவலுவென்பது மேலோட்ட பார்வைத் தளத்தில் புதிராகவே இருக்கும்.

அண்மையில் இடம்பெற்ற முகமாலைச் சமரில் புலிகளின் புதிய வியூக போரியல் வெளிப்பாட்டை அரசு உணர்ந்திருக்கும். எதிரியை உள்நுழைய விட்டு, பெட்டி வடிவத்தாக்குதலைத் தொடுப்பதென்பது புலிகளின் தந்திர சமராக இருப்பினும், முப்படையின் நவீன வலுவினை எதிர்கொள்ளும் முறியடிப்புச் சமரின் புதிய பரிமாணம் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச படைவலு வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய புதிய வடிவங்களை தமது படைக்கட்டமைப்பிற்குள் இணைத்திருப்பதை மூதூர் இறங்குதுறை வரையான நீண்ட பாய்ச்சலில் புலிகள் நிரூபித்துள்ளனர்.

ஆனையிறவு பெரும் படைத்தளத் தகர்ப்பும், கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது தொடுத்த அழித்தொழிப்புத் தாக்குதலும், அரசின் எவ்வகையான வலிமை மிகுந்த இராணுவக் கட்டமைப்பையும் தங்களால் நிர்மூலமாக்க முடியுமென்கிற கள யதார்த்தத்தை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் புலிகள் புலப்படுத்தியுள்ளார்கள்.

இனிவரும் முழுமையான தேச விடுதலைப் போர் பின்தளச் சிதைப்பினூடே ஆரம்பிக்கப்படலாம்.

அதாவது பிரதேச கட்டளை மையங்களின் அழித்தொழிப்போடு வெடித்துக் கிளம்பலாம். ஆகவே முகமாலையிலிருந்து பலாலி வரை படை நகர்த்த வேண்டிய தேவையும் ஏற்படாது.
வன்னியை மையப்புள்ளியாகக் கொண்ட அரை வட்ட வடிவத்தின் வளைந்த கோட்டில், திருமலை, வவுனியா, மன்னார், யாழ். மன்னார், யாழ். குடா கட்டளைத் தளங்கள் அமைந்திருக்கின்றன.

வட்டத்தின் மையம், வன்னி நிலப்பரபில் எப்பகுதியில் நிலைகொண்டுள்ளதென்கிற ஊகத்தினை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

புலிகளின் படைக்கட்டுமானப் பிரிவுகளில், தரைநகர்வுப் படைகளுக்கும் சமனான அளவில் கடற்புலிகளின் பலமும் இருப்பதனை பல பாரிய சமர்களில் இனங்காட்டப்பட்டுள்ளது. இரண்டும் கலந்த ஈரூடகப் படையணியின் (ஆயசiநெ) களப்பங்களிப்பினை பனிச்சங்கேணி, மண்டைதீவு முறியடிப்புச் சமர்களில் கண்டுள்ளோம்.

இறுதியாக வெளிப்படுத்தப்பட்ட உந்துருளிப் படைப்பிரிவின் (மோட்டார் சைக்கிள்) உருவாக்கத்தின் பின், புதிய சமரணிகளும் தோற்றம் பெற்றிருக்கும்.

அரச முப்படைகளின் உபபிரிவினை எதிர்கொள்ளக்கூடிய நவீன போராளிகளையும் புலிகள் இணைத்திருப்பார்கள்.

ஆயினும் களமிறக்கப்படாத புலிகளின் வான்படை குறித்த எதிர்வு கூறல்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

இரண்டு இருக்கை கொண்ட சிறு விமானங்கள் புலிகளிடம் இருப்பதாகவே வெளிநாட்டு உளவுத்துறைகள் தாம் விரும்பியவாறு குறைத்துக் கணிப்பிடுகின்றன.

இரணைமடுவில் விமான ஓடுபாதை இருப்பதாக, ஆள் இல்லா வேவு விமானங்கள் பதிவு செய்த படங்களை ஊடகங்களில் உலவவிட்டு, இந்தியாவிடமிருந்து கண்காணிப்பு ராடர்களை (சுயனழசள) மட்டுமன்றி, விமான எதிர்ப்புக் கருவிகளை தமது இராணுவ முக்கியத்துவம் பெறும் நிலைகளில் அரசு நிறுத்திவைத்துள்ளது. இடைக்கிடையே வன்னி வான்பரப்பில் இனந்தெரியாத விமானங்கள் பறப்பதாக, புதினச் செய்திகள் கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தப்படுகிறது.

கேணல் சங்கர், கால்கோளிட்ட விமானப்படைப்பிரிவின் இன்றைய வளர்ச்சி நிலை குறித்து பலவித மயக்கமான ஊகங்கள் வெளிவந்ததாகவும் அதன் மொத்தப் பரிமாணமும் அந்திம களத்திலேயே முழுவீச்சாக வெளிப்படலாம் அன்று, புலிகளின் ~தீச்சுவாலையை| அரசும், அழிவுறும் மக்களை கைகட்டி வேடிக்கை பார்க்கும் சர்வதேசமும் உணரப் போகிறது.

ஓடுபாதையில்லாமலும், சில நவீன விமானங்கள் கிளம்புமென்பதை இராணுவ விற்பன்னர்கள் புரிவார்கள். மிக ஆழமான நிலத்தடி பதுங்கு குழிகளில் தரித்திருக்கும் விமானங்களுக்கு, ஓடுபாதையின் நீளம் அதிகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பதுங்குகுழியின் நீட்சித் தூரம் போதுமானதாகவிருந்தால், வெளித்தரையில் ஓடுபாதையின் முக்கியத்துவம் தேவையற்ற தொன்றாகிவிடும். இவையனைத்தும் வேற்று நாட்டு போராட்ட களங்களில் முன்பு கண்டறியப்பட்ட தந்திரோபாய, பாதுகாப்பு அரண் சார்ந்த விடயங்களாகும். இவ்வாறான நிலத்தடி ஆழப் பதுங்கு குழிகளை ஊடுருவிச் சென்று உடைப்பதற்கு புதியரக குண்டுகளைக் கொள்வனவு செய்ய அரசு அதிக அக்கறை செலுத்துகிறது.

இக்குண்டின் கொள்முதல் விலையானது ஆயிரம் பேரின் வேலை வாய்ப்பினை விழுங்கி விடுமென சில அமைச்சர்களுக்கு சுடலை ஞானச்சிந்தனையும் வரலாம்.

புள்ளிவிபரப் புதிர்கள், கேட்பவர்களுக்கு அச்சத்தைத் தரலாம். ஆட்சியை தக்கவைத்து நீடிக்க முனையும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கு இவையெல்லாம் மக்களின் வரிப்பணமென்பதும் புரியும்.

இறுதிக்காலத்தில், அரச வான்படைகளை எதிர்கொள்ள புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கைவசமிருக்கிறதாவென்கிற ஏளனப் பார்வையுடன் இராணுவத் தளபதிகள் நோக்குகிறார்கள்.

தமிழர் பகுதிகளின் மீது தாம் நடாத்தும் வான் தாக்குதல்களை எதிர்கொண்டு, ஒரு கிபீரையாவது புலிகளால் சுட்டு வீழ்த்த முடியவில்லையென்று பெருமிதம் கொள்கிறது சிங்கள அரசு. முன்பு வீழ்த்தப்பட்ட அரச வான் கலங்கள் பற்றிய புள்ளி விபரக் கொத்தினை மஹிந்தர் மறந்திருக்கலாம்.

அழிவினை ஏற்படுத்துவதையே வாழ்வியக்க வீச்சாகக் கொண்ட சிங்களத் தலைமைகளின் ஆளுமையை நேரிய வழியில் அழைத்துச் செல்ல அங்கு எவருமில்லை.

கட்டுநாயக்க வான் படைத்தள அழித்தொழிப்புச் சமர் பாரியளவு சேதத்தினை அதன் கட்டமைப்பில் ஏற்படுத்தினாலும் அவர்கள் திருந்தப் போவதில்லை. மேலாதிக்கச் சிந்தனையில் மாற்றமேற்படாது. இதுபோன்ற அழிப்புச்சமர் மேலும் நடைபெறும் வாய்ப்புக்கள் இல்லையென்று எதிர்வு கூற முடியாது.

இதுகாலவரை பிரயோகிக்கப்பட்ட சமராடும் போர் உத்திகளை ஒருங்கிணைத்து, பரந்துபட்டவாறு முழு இலங்கையிலும் புலிகள் செயற்படுத்தப்போகிறார்கள்.

வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள பொருளாதார இலக்கு மற்றும் இராணுவ விநியோக கட்டளை மையங்களை இயக்கமற்ற நிலைக்குச் செயலிழக்கச் செய்து போரின் வெப்ப நிலையை தணிக்க முற்படலாம்.

வன்னியை மையப்படுத்திய அரை வட்ட வளை கோட்டில் மறைந்துள்ள பலமிக்க பின்தளங்களை அழிப்பதனூடாக அரசின் வடகிழக்குப் படைவலுச் சமநிலை சீர்குலைக்கப்படலாம். இதை நிறைவேற்ற வான் வெளித்தாக்குதலோடு வேறு சில வழி முறைகளும் உண்டு. அதற்கு சிறிய ரக ~அக்னி| களும் உண்டு.

முற்றுகைச் சமரில் ஆனையிறவு பெருந்தளம் வீழ்த்தப்பட்டபோது, கட்டளைத் தளபதிகளின் இறப்பால், கீழ்நிலை அதிகாரிகளும் கடைநிலை சிப்பாய்களும், திறந்து விடப்பட்ட கிளாலிப் பாதையூடாகத் தப்பிச் சென்றார்கள். அங்கு மீட்டெடுக்கப்பட்ட படைக்கலங்கள், விடுதலைப் புலிகளின் படைவலுச் சமநிலையை அதிகரிக்க உதவின. அதுபோன்ற நன்கொடைகள் இனிவரும் சமரில் அதிகமாகவே கிடைக்கலாம்.

குடாநாட்டின் கட்டளை மையம் பலாலியில் இயங்கினாலும், படைவளங்கள் பெரும்பாலும் வரணி மற்றும் முகமாலை, நாகர்கோவில் முன்னரங்க நிலைகளிலேயே அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன.

மையம் சிதைக்கப்பட்டால், பரவலாக்கப்பட்ட இராணுவ வளங்கள் புலிகளின் வசப்படும், அரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலில் திருமலை மாவட்டத்தை பொறுத்தவரை, மூதூரை நோக்கிய எறிகணை வீச்சுக்கள், திஸ்ஸ கடற்படைத்தளம், குரங்குப்பாலம் மற்றும் கல்லாறு படைமுகாம்களிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு சீனன்குடா விமானத்தளத்தின் பங்களிப்பு குறைந்த நிலையில் காணப்பட்டாலும் கடல்வழி விநியோகப் பாதையில் புலிகளின், குறுக்கீடுகள் அதிகரிக்கப்பதால், படைக்கலங்களின் இறக்குமதி நிலையமாக இத்தளம் அமைகிறது.
அத்துடன் குண்டுவீச்சு விமானங்களின் தரிப்பிடத் தளமாகவும் விளங்குகிறது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதேச புவியியலை எடுத்துக் கொண்டால், வாகரை தவிர்ந்த ஏனைய கடற்பகுதிகள் புலிகளின் ஆளுமைக்குள் உட்படாத நிலையில் காணப்படுகின்றன.

கடலோடு அண்மித்த பகுதிகளில் அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அமைந்தாலும், இதற்கு அப்பாலுள்ள மாவட்ட எல்லை வரையான தரைப்பகுதிகள் புலிகளின் வசமுள்ளது.

பாரிய படைத்தளங்களற்ற நிலையில், தரைவழி மரபுச் சமர்களே இப்பிரதேசத்தில் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமுண்டு. அங்கு துணைப்படைகள் இன்னுமொரு ~ஜெயசிக்குறுவை| எதிர்கொள்ளலாம்.

அதேவேளை, வாகரைப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள கடற்புலிகளின் வலுநிலை மேலோங்கியிருந்தால், கடல்வழித் தரையிறக்கச் சமர்களில் அவர்களின் பங்களிப்பு அதிகமாயிருக்கும்.

ஆகவே முழுமையானதொரு மரபுசார் போரினை இப்பிரதேசத்தில் புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். துணைக்குழுக்களின் கரந்தடிப்போர் முறை ஆதரவோடு தமது மரபுவழி இராணுவத்தினரால் புலிகளை அழித்தொழிக்கலாமென மஹிந்தரும், இராணுவ தளபதிகளும் போர்த்திட்டங்களை வகுக்கலாம். இவையெல்லாவற்றையும் இயக்க அரசிற்கு மிக முக்கியமான கச்சாப் பொருளொன்று தேவை.

டாங்கிகள், விமானங்கள், பல்குழல் எறிகணைச் செலுத்திகளைத் தாங்கும் வாகனங்கள், சிப்பாய்களை ஏற்றி இறக்கும் கவச வண்டிகள் யாவும் இயங்குவதற்கு எண்ணெய் இன்றியமையாதது. அது இல்லாடிவில் இராணுவ அசைவியக்கம் செயலாற்றுப்போகும்.
இலக்குகளை இனங்காணுவது மிகச் சுலபமானது.

வரலாற்றை ஆசானாக வரித்துக்கொண்ட தலைமைக்கு, எதிர்கால நிகழ்வு குறித்த தரிசனங்கள், தெளிவாகப் புலப்படும். இத்தரிசனங்களை நிதர்சனமாக்க மக்களின் ஒருங்கிணைவு இரண்டறக் கலக்க வேண்டும். ஏனெனில் விடுதலை என்பது யாசித்துப் பெறுவதல்ல.
நன்றி>தமிழ்நாதம்.

வாகரையில் சிங்களத்தின் கொண்டாட்டம்.

வாகரையில் சிங்களத்தின் கொண்டாட்டம்.

போராளி!!!

போராளி என்பவன் யார்?

அமைதிப்பேச்சு என்று சொல்லும் அரசாங்கத்தை, எப்படி நம்பமுடியும்?

பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,
ஒரு பக்கம் கிழக்கில் போரை நடத்திக்கொண்டே மறுபக்கம் அமைதி பற்றி அரசாங்கம் பேசுகிறது. முன்பு ஜெனீவாவில் அமைதிப் பேச்சு நடந்தபோது, போர் நிறுத்த உடன்பாடு பற்றிப் பேசுவதற்கு நிதியுதவி வழங்கும் நாடுகளும் கண்காணிப்புக் குழுவினரும் வலியுறுத்திய வேளையில், சிறிலங்கா அரசாங்கமோ, நாங்கள் அது பற்றிப் பேசவரவில்லை என்று நிராகரித்து விட்டது.

இப்படி இருக்கையில் இப்போது அமைதிப் பேச்சு என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி நம்ப முடியும் என்றும் தமிழ்முரசிடம் கேள்வி எழுப்பினார் இளந்திரையன்.
அமைதி உடன்பாட்டைக் கையில் வைத்துக்கொண்டே, தாக்குதல்களை தொடர்ந்து நடத்துகிறது. அதேநேரத்தில் நிதியுதவி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்ற சிறிலங்கா அரசாங்கம் உதட்டளவில் இந்தக் கருத்துகளைக் சொல்லி வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கும் மேலாக பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது எனக்கூறினார் இளந்திரையன்.
அண்மைய காலத்தில் இராணுவத் தாக்குதல்களை எதிர்த்து எதிர்த்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தாததாலும் எதிர்ப்புக்காட்டமல் அவர்கள் பின்வாங்கி வருவதாலும் முகாம்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் அவதானிகள் கூறுவது பற்றி 'தமிழ்முரசு' கேட்டபோது, சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கிழக்கே மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றார் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.

அத்துடன் கிழக்கின் 95% நிலப்பகுதியை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை. அங்கு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்துதான் நாங்கள் விலகியிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் கட்டளைப் பணியகமும் போராளிகளும் இன்னமும் கிழக்கில் இருக்கிறார்கள். கிழக்கில் ஏராளமான நிலப்பகுதியும் மக்கள் வாழிடங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் வாகரையைவிட பல மடங்கு பரந்த நிலப்பகுதியையும் பல மடங்கு மக்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளனர். ஏறக்குறைய 85% நிலம் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. இதில் 95% எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றார் அவர்.

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் அரச படையினர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், இத்தகைய தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்துவதில்லை என்றார்.

எங்கள் நிலைப்பாட்டை அனைத்துலக அரங்கில் வந்து சொல்ல எப்போதும் தயாராகத்தான் இருக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுக்கள் எங்கள்மீது இருக்கும் தடையை நீக்கும் பட்சத்தில் நாங்கள்அவர்களைத் தாராளமாகச் சந்தித்துப் பேசலாம் எனவும் குறிப்பிட்டார்.
நன்றி>புதினம்.

Tuesday, January 23, 2007

இடப் பெயர்வுகள் மூலம் உடைந்து போகாத மக்கள்.

விடுதலைக்காகப் போராடி வருகின்ற எந்தவொரு இனமும் தனது விடுதலையை பெற்றுக் கொள்வதற்கு நெடிய பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட வரலாற்றின் போது விடுதலையை வேண்டிப் போராடுகின்ற இனமும் அவ்விடுதலைக்கான இயக்கமும் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகிறது. இச்சவால்களிற்குள் இடப் பெயர்வு என்பது மிகப் பெரிய சவலாகும். தமது பூர்வீக தாயகத்தை விட்டு அந்நியப்படாது பாதுகாப்பான இடத்தை நோக்கி சுதந்திர உணர்வு கொண்ட மக்கள் அனைவரும் நடப்பார்கள். இது மாபெரும் வரலாற்று வெற்றிக்கு வித்திடும்.

உலகில் விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்ற நாடுகளில் எல்லாம் விடுதலைக்காக பாரிய இடப் பெயர்வுகளை அம்மக்கள் சந்தித்தார்கள். இடப் பெயர்வின் துன்ப துயரங்களை மறுத்து சுதந்திர தாகம் கொண்ட மக்கள் அனைவரும் போராளிகள் காட்டிய பாதையில் நெடுந்தூரம் நடந்தார்கள். அதுவே அவர்களுடைய விடுதலையை ஈட்டிக் கொடுத்தது. 1943.10.16 இல் சீனாவில் மாவோசேதுங் தலைமையில் சுமார் 120000 சீனர்கள் சியாங்கை செக் இன் சோமின்டங் படைகளின் மரணப் பிடியில் இருந்து தப்பி கால் நடையாக மாபெரும் இடப் பெயர்வை மேற் கொண்டார்கள். வரலாற்றின் மிக நீண்ட பயணம் என அழைக்கப்படும் இவ்விடப் பெயர்வில் சுமார் 12500 கிலோமீற்றர் தூரத்தை அம்மக்கள் கடந்தனர். பஞ்சம், கொடிய நோய் எதிரியின் தாக்குதல் என்பவற்றால் இறுதியில் சுமார் 20000 பேரே எஞ்சினார். இவ் 20000 மக்கள் தொகையை வைத்தே மாவோ சேதுங் நவ சீனத்தை உருவாக்கினார்.

இதேபோல் 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாத அதிகாலைப் பொழுது ஒன்றில் எரித்திரியத் தலை நகர் அஸ்மராவிற்கு அண்மையில் உள்ள கெரன் நகரை விட்டு (EPLF) எதிரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி;யினரின் வேண்டுகோளை ஏற்ற எரித்திரிய மக்கள் மாபெரும் இடப் பெயர்வை செய்தார்கள். இதுவும் வரலாற்றில் ஒரு மையில்கல. இதன் பின்னர் ஏற்பட்ட கொள்ளை நோய், பசி பஞ்சம், எதிரியின் கொடூரமான விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல் மோசமான கால நிலை என்பவற்றுக் கெல்லாம் முகம் கொடுத்து போராளிகளும் மக்களும் இணைந்து தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எதியோப்பியா இராணும் மேற் கொண்ட கொடூரமான யுத்தத்தை போராளிகளுடன் மக்களும் சேர்ந்து இராணுவப் பயிற்சி பெற்று படைக் கட்டுமானங்களுடன் இணைந்து இறுதியில் தாம் இழந்த நிலங்களை மீட்டெடுத்தனர். கெரின் இடப் பெயர்வே இம் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. இந்த வகையிலே இடப் பெயர்வென்பதை சாதாரணமாக பின்னடைவாக எடை போட்டு விட முடியாது. அதை இராணுவ மொழியில் சொல்லப் போனால் மூலோபாயப் பின் வாங்கலாகவே கருத வேண்டும். மூர்க்கத்தனமாக வேகத்துடன் முன்னேறி வரும் எதிரியின் கையில் அகப்பட்டு அழிவதை விடுத்து- அல்லது நேரக்க நேர் நின்று போராடி அவ்வினமே அழிவதை விடுத்து மூலோபாய ரீதியாக பின் வாங்கி எதிரிக்கு முற்றிலும் சாதகமற்ற சூழலிற்குள் அவனைச் சிக்க வைத்து அவ்விடுதலை அமைப்பு தன்னை தக்க சூழலில் தயார் படுத்தி படிப்படியாக இழந்த நிலங்களை மீட்டேடுப்பதே சரியான வழி. இவ்வழிமுறையினை வெற்றி பெற்ற பல விடுதலைப்போராடடங்களிலே காணமுடியும்.

எமது தாயக விடுதலைப் போராட்டத்தை பொறுத்த வரை எமது விடுதலைக்கான நெருப்பாற்று நீச்சலில் பல கொடிய தடைகளை எம்மினம் சந்தித்திருக்கிறது. எம்மினம் பல முறை தமது சொந்த பூர்வீக நிலங்களை விட்டு ஏதிலிகளாக இடம் பெயர்ந்திருக்கின்றது. விடுதலைப் போராட்டம் புது வேகம் பிடிக்கத் தொடங்கிய 83 இலிருந்து இன்று வரை பல முறை எம்மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். 1983 இல் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ஆயிரக்கனக்கான அப்பாவித் தமிழர்கள் சிங்கள தேசத்தின் பகுதிகளிலிருந்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். ஏராளமான கொடூமைகளிற்கு மத்தியில் இவ்விடப் பெயர்வு நடை பெற்றது. இதன் மூலம் வடக்கு கிழக்கு பகுதி தமிழரின் மரபு வழித்தாயகம் தமிழரின் மரபு வழித் தாயகமே தமிழரிற்கு பாதுகாப்பு என்ற உண்மை உணரப்பட்டது.

தமிழர் வரலாற்றில் பதிவான மிகப் பெரிய இடப் பெயர்வாக யாழ் குடா நாட்டு இடப் பெயர்வை குறிப்பிடலாம். 1995 ஒக்ரொபர் மாதம் ஐந்து லட்சம் மக்களும் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத்தின் கலாச்சார தலை நகரான யாழ் குடா நாட்டை விட்டு வன்னியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இக்காலத்தில் விடுதலைப் போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. உணவுப் பஞ்சம் கொடிய நோய் விமானக்குண்டு வீச்சுக்கள் பொருளாதார இடர், மருத்துவத்தடைகள் எனப் பல நெருக்கடிகளுக்கு மக்களும் புலிகளும் முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் தேசியத் தலைவரின் மதி நுட்பமான திட்டமிடலால் வன்னி பெரு நிலப்பரப்பு ஒரு பரீட்சார்த்த களமாயிற்று அங்கு தமது நிர்வாகத்தை மிகச் செம்மையாக நடை முறைப் படுத்தி மக்கள் சந்திக்கவிருந்த பாரியளவிலான அழிவிலிருந்து அவர்களை மீட்டெடுத்தனர். புலிகள் அழிந்து விட்டார்கள் எனக் கூறிய அரசாங்கத்தின் உச்சந் தலையில் புலிகள் ஓங்கி அடித்தனர். தமது படைக்கட்டுமானங்களை நன்கு வளர்த்தெடுத்த தலைவர் முல்லைத் தளத்தை மீட்டு பாரிய ஒரு மரபுக்கட்டுமானத்தை உருவாக்கினார்.

இதன் பின்னர் விடுதலைப்புலிகளின் பிரதான தளமான வன்னியை கூறு போட்டு அவர்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டியது இராணுவம். பெரும் எடுப்பில் அவர்கள் தமது முன்னேற்றத்தை மேற் கொண்ட போது வன்னிப் பகுதி மக்கள் பாரியளவில் இடப் பெயர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜயசிக்குறுவிற்குப் பின்னான சத்ஜெயவிலும் தமிழரின் வன்னித் தள மையமான கிளிநொச்சியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவ்வாறு 1997,1998, 1999 என குறிப்பிட்ட கால இடை வெளிகளில் தமிழர் தாயகத்தில் இருந்த மக்கள் பாரிய அளவில் இடம் பெயர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களுடைய இடப் பெயர்வே அவர்களிற்கு உறுதியைக் கொடுத்தது. இடப் பெயர்வின் அவலங்களே அவர்களுக்கு விடுதலைக்கான ஓர்மத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பட்ட அவலங்களால் அவர்கள் பலம் பெற்றார்கள். அதனால் ஏற்பட்ட வடுக்களால் அவர்கள் உருப் பெற்றார்கள். மாபெரும் சக்தியாகி தலைவர் பின்னால் அணிதிரண்டார்கள். வன்னி பெரு நிலப்பரப்பை மீட்டெடுத்தார்கள்.

சூழல்கள் எப்படி மாறியபோதும் வரலாறு ஒரே திசையிலேயே இயங்குகிறது. ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் இக்காலம் சமாதான காலமாக இருந்த போதும் இடப் பெயாவும் அவலங்களும் அதன் அழிவுகளும் இடை வெளியின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாரியளிவலான துன்ப துயரங்களிற்கு மத்தியில் தமது சொந்த பூமியை விட்டு அவலப் பட்டு நிற்கின்ற மக்கள் விரக்தி அடைகின்ற நேரம் இதுவல்ல. உலக வரலாறுகளும், எமது நெருப்பாற்று நீச்சலில் அழிக்க முடியாத பதிவுகளும் ஒவ் வொரு தமிழனுக்கும் கற்பிதங்களாக அமைந்து விரக்தியைத் தகர்தெறிந்து விடுதலைத்தீயில் புடம் போடப்பட வேண்டும்.

துயர வாழ்வு கலைந்து புதியதோர் உலகைப் படைக்க விடுதலைப் பாதையில் அணி திரள்வது அனைவரதும்; கடமையாகும்.
நன்றி>பதிவு.

உடன் பேச்சுக்கு வாருங்கள், இல்லையேல் சண்டைதான். புலிகளுக்கு அரசு எச்சரிக்கை.

"மோதல்களை நிறுத்தி பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கு புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மேலும் மோசமான சண்டைக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்." இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது இலங்கை அரசு.வாகரையைக் கைப்பற்றிய இராணுவ வெற்றியை அடுத்து இலங்கைப் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இறுமாப்புடன் இவ்வாறு அறிவித்தார். இத்தகவலை "ரோய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்டது.

நைந்து போயுள்ள 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனக் குறிப்பிடப்படும் வாகரைப் பகுதியை ஒரு வாரகால கடும் பீரங்கித் தாக்குதல்களின் பின்னர் அரசுப்படைகள் கைப்பற்றியிருக்கின்றன. இதன் மூலம் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கின் முக்கிய பிரதேசம் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

இராணுவம் அப்பகுதியைத் துடைத்தழித்ததையடுத்து கிழக்கில் உள்ள தொப்பிகல காட்டுக்குள் புலிகள் தங்கள் முகாம்களை நகர்த்தியுள்ளனர். "தொப்பிகல ஸ்திரமற்ற ஒரு பிரதேசம். படையினர் நேரத்துக்கு நேரம் தாக்குதலுக்கு இலக்காகிடும் ஆபத்து அங்கு உள்ளது. ஆகவே, அந்த ஆபத்தையும் விலக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது." இவ்வாறு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்."மோதலை நிறுத்திவிட்டு, மீளப் பேச்சு மேசைக்குத் திரும்புவதற்குத் தாங்கள் தயார் என்று விடுதலைப் புலிகள் நாளையே அறிவிப்பார்களேயானால் நாம் உடனடியாகவே நிறுத்திவிடுவோம். அப்படி அவர்கள் செய்யா விட்டால், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ச் சிவிலியன்களை அவர்களது பிடியி லிருந்து விடுவித்து விட்டு அதன் பின்னரே அவர்களைப் பேச்சுக்கு அழைக்க வேண்டியிருக்கும்." என்றார் அமைச்சர் ரம்புக்வெல.

புலிகளை அவர்களது வட பகுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து விரட்டப் போவதாக அரசு எச்சரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "யுத்த நிறுத்தத்தையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலமும் அவர்கள் புரிந்தவற்றைக் கவனித்தால், பேச்சு மூலமான தீர்வில் அரசுக் குரிய பற்றுதியை வெளிப்படுத்தி நிரூ பிப்பதற்கும் இன்னும் அளவுக்கு அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கும்." எனப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

"கிழக்கில் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், போர் வலுவையும் தக்க வைப்பதில் ஒரு சமநிலை மாற் றம் அடிக்கடி மாறி மாறி நேர்ந்து கொண்டுதான் இருக்கின்றது." என்றும் புலிகளின் இராணுவப் பேச் சாளர் இளந்திரையன் மேலும் தெரிவித்தார் என்று "ரோய்ட்டர்' செய்தி குறிப்பிட்டது.

நன்றி>சுடர் ஒளி

Monday, January 22, 2007

இனப்பிரச்சினைக்கு சிறிலங்காவின் தீர்வு இனஅழிப்புத்தான்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களை அழிப்பது தான் என்பதை சிங்கள் தேசம் மீண்டும் ஒரு முறை நடைமுறைப்படுத்தத்தொடங்கி விட்டது என்பது உறுதியாகியுள்ளது. இதன் வெளிப்பாட்டைத்தான் மன்னார் இலுப்பைக் கடவை படகுத் துறை கிராமத்தின் மீதான தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது. இத்தாக்குதலானது இன அழிப்பு நோக்கில் சிறிலங்கா பேரின வாதிகளால் நன்றாகத் திட்டமிட்டப்பட்டு மேற் கொள்ளப் பட்டுள்ளது. இத்தாக்குதல் மேற் கொள்ளப் படுவதற்கு முதல் நாள் அதாவது கடந்த ஜனவரி முதலாம் நாள் சிறிலங்காப் படைதுறைப் பேச்சாளர் ஒருவர் மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தளம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்திருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளின் தளங்கள் எவையும் மக்கள் குடியிருப்புப்பகுதிகளில் இருப்பதில்லை என்பது சகலரும் அறிந்த விடயம்.

இந்தக் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன் பின்னர், தாக்குதல் நடத்தப் படுவதற்கு முதல் நாள் இவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. மறு நாள் 02 ஆம் திகதி செவ்வாய் கிழமை மன்னார் மாவட்டத்தின் இலுப்பைக் கடவை படகுத் துறை கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப் படையினர் தாக்குதல் நடத்தி 16 அப்பாவிப் பொது மக்களை படு கொலை செய்ததுடன் 37 வரையான மக்களையும் காயப்படுத்தி உள்ளனர். அத்துடன் இக்கிராமத்தை முற்றாகவே அழித்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் யாழ்ப்பாணம் நவாந்துறைப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மீனவக் குடும்பங்களே இந்தப் படகுத்துறைக் கிராமத்தில் தமது வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக குடியமர்த்தப்பட்டனர். நாளாந்தம் கடற்றொழிலை நம்பி வாழ்ந்த மக்கள் இன்று அழிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படகுத்துறை கிராம மக்கள் வழமை போல தமது நாளாந்தக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை காலை 9.30 மணிக்கு மூன்று கிபீர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதலை மேற் கொண்டனர். இதில் 37 வரையான பொது மக்களின் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 16 வரையான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படடனர். 37 வரையானோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கிராமத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 213 பேர் வாழ்ந்த அழகிய கிராமம். கடலை நம்பி கவலை போக்கி வாழ்ந்த இவர்களின் வாழ்வை சிங்களப் பேரின வாதிகள் சிதைத்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் சகல வழிகளிலும் மிகவும் பின்தங்கிய ஒரு இடமாக மன்னார் மாவட்டம் உள்ளது. இந்தத் தாக்குதல் நடை பெற்றதும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பலவேறு பட்ட இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை அழிக்க வேண்டியவர்களை 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மன்னார் நகருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன.

மன்னார் நகருக்கு அவசர நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சுலபமான ஒரு விடயமாகும். அதாவது போக்கு வரத்திற்கான வீதி மற்றும் நவீன வசதி கொண்ட மன்னார் மருத்துவமனை இதை விட மேலதிகச் சீகிச்சைக்காக வவுனியா அனுராத புரம் கொண்டு செல்லவும் முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மன்னார் பொது மருத்துவ மனையில் இருந்து இரண்டு நொயாளர் காவு வண்டிகள் தாக்குதல் நடை பெற்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மன்னாரில் இருந்து உயிலங்குளம் சோதனைச் சாவடி வரையும் வந்த நோயாளர் காவு வண்டிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்ட வில்லை. இரண்டு நோயாளர் காவு வண்டிகள் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னர் மீண்டும் மன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

காயமடைந்தவர்கள் மிகவும் மோசமான வீதிகளினூடாக சுமார் 127 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே கிளிநொச்சி மருத்துவ மனையில் மருத்துவ நிபுணர்களுக்கும், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு மாவட்ட மருத்துவ மனைக்கான வசதிகள் கூட இந்தப் பொது மருத்துவ மனைக்கு இல்லையென்பது இங்கு சுட்டிக்கபட்ட வேண்டிய விடயமாகும் காலை 9.30 மணிக்கு விமானத்தாக்குதல் மூலம் காயமடைந்த ஒருவரை பிற்பகல் 5.00 மணிக்கு பின்னர் தான் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு வர முடிந்தது. அவ்வளவிற்கு வீதிச் சீரின்மை, வாகன வசதியின்மை காரணங்களாகும். இவ்வாறு சிகிச்சைக்காக எடு;த்து வரப்பட்ட தாயும் அவரது குழந்தையும் மருத்துவ மனையில் வைத்து உயிரிழந்துள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தமிழீழ விடுதலை; புலிகள் அமைப்பைச் சேர்ந்த எவரும் உயிரிழக்கவில்லை. அனைவரும் சிறுவர்களும் குழந்தைகளும் பொது மக்களுமாகும். இந்தப் படுகொலையினை சிறிலங்கா அரசு மூடி மறைக்கும் நோக்கில் பல அப்பட்டமான பொய்களை கூறி வருகின்றது.

கடந்து சென்ற ஆண்டில் எமது மக்கள் துன்பங்களையும் துயரங்களையும் அழிவுகளையும் சந்தித்து, பிறந்துள்ள புதிய ஆண்டில் எதிர் பார்ப்பக்களை நம்பியிருந்தனர். வருடம் பிறந்து இரண்டாவது நாள் மன்னார் இலுப்பைக் கடவையில் கத்தோலிக்க மக்கள் வாழ்ந்த இந்தக் கிராமம் முற்றாக சிங்களப் பெரினவாதிகளால் அழிக்கப்பட்டிருக்கின்றது.

இது போன்று கடந்த 1993 அம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த சந்திரிகா காலத்தில் கிளாலி கடல் நீரேரி ஊடாக பயணித்த 50 இற்கும் அதிகமான அப்பாவி பொது மக்களை படு கொலை செய்தனர். இவ்வாறு அன்றைய படு கொலையும் இன்று நடை பெற்ற படுகொலையும் இனஅழிப்பின் தொடர்ச்சியை காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சனையை அவர்கள் மீதான படுகொலைகள் மூலம் தீர்க்க அரச பயங்கர வாதம் முனைகின்றது. இவ்வாறுதான் கடந்த 1948 களில் இருந்து சிங்களப் பேரினவாதம் செய்து வருகின்றது.

இனி வரும் நாட்களில் எம்மக்கள் மீதான படு கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வழிவகுக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் இவ்வாறான படுகொலைகளை நிறுத்த முடியும். இன்று படகுத்துறைக் கிராமம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் போக எஞ்சியுள்ள மக்கள் வாழ்விடங்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து அகதிகளாக அவலப் படுகிறார்கள்.



44 குடும்பங்களைக் கொண்ட 213 அங்கத்தவர்கள் வாழ்ந்த இக்கிராமத்தில் கொல்லப்பட்டவர்கள் படுகாயமடைந்தவர்கள் போக 168 பேர் வரை எஞ்சியுள்ளனர். இவர்களுடைய வாழ்வும் இனவாதிகளால் சிதைக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் இதற்கு முன்னர் நாவாந்துறையில் கடற்படையினரால் பலர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அதற்கு அஞ்சி தமது வாழ்வை தொடர்வதற்காக வந்து குடியேறியவர்கள்.



இவ்வாறான படு கொலைகள் தமிழர் வாழ்வில் பட்டியல்களாக நீண்டு செல்கின்றனவே தவிர அதற்கான தீர்வு அல்லது தடுப்பதற்கான வழி வகைகள் எவையும் ஏற்படுத்தப் படவி;ல்லை. எனவே இவ்வாறான படு கொலைகளை தடுக்க எமக்கான பாதுகாப்பு வழிமுறையை நாம் கையிலொடுக்க வேண்டும். வேறு வழியே இல்லை.
நன்றி>பதிவு

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் அதனை இரத்து செய்யவும்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் சார்பில் பிக்குமார்களான பெங்கமுவே நாலக தேரர், தம்பர அமில தேரர், ஓமாரே கஸ்ஸப்ப தேரர் மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச எம்.பி., சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எல்.குணசேகர போன்றோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் அரசின் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.

இதேநேரம், நாட்டின் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்காக சகலரினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து அவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின் போது இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தங்களது நிலைப்பாட்டை விளக்கும் கடிதமொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

ஒன்றியத்தினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்த கடிதத்தில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு அமைய, சட்ட விரோதமான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு 5 ஆண்டுகள் பூர்த்தி அடைவதற்குள் அதை ரத்து செய்ய வேண்டும், சமாதான செயற்பாடுகளில் இருந்து நோர்வேயை உடனடியாக வெளியேற்ற வேண்டும், அதிகார பகிர்வினூடான சமஷ்டி முறை தீர்வை கொண்டு வருவதற்கான செயற்பாட்டை முற்றாக நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்து, அவர்களை முற்றாக தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்ற 4 விடயங்களை நிறைவேற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

இவையனைத்தும் நிறைவேற்றப்படாத சூழ்நிலை ஏற்படுமானால், அதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்குமெனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் எச்சரிக்கை செய்துள்ளது.
நன்றி>லங்காசிறீ.

Sunday, January 21, 2007

பருத்திதுறையில் கடற்புலிகளின் கொமோண்டோ தாக்குதல்.


யாழ் பருத்தித்துறை துறைமுகத்தினுள் இன்று மாலை 5.00மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பருத்தித்துறை கடற்படைத்தளம் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர். மேலதிக சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை
நன்றி>சங்கதி.

Friday, January 19, 2007

கண்காணிப்புக்குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளோம்!!!

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது.
இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசைய்யா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
70-களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சயனைட்டை இன்னமும் நாங்கள் கழற்றவில்லை. மக்களின் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் போதுதான் அதனை நாங்கள் கழற்றுவோம்.

படை ரீதியாகத் தயார் நிலையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சிறிலங்கா அரசு எங்களைத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் வலிந்த தாக்குதலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். அந்த தாக்குதல்கள் தொடர்ந்தும் நடக்கின்றன.
சிறிலங்கா அரசின் இனவெறித் தாக்குதல்களில் ஏறக்குறைய 80,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எங்கள் மக்களின் பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் பற்றி இளந்திரையன் விவரிக்கையில்,
வாகரைப் பகுதியில் மூன்று நிலைகளில் இருந்து படையினர் தீவிர தாக்குதல் நடத்தியது. காலை 5.35 முதல் இரவு வரை இடம்பெற்ற இம்மோதலில் படையினர் தரப்பில் 65 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமானவர்கள் ஓரளவு காயமடைந்துள்ளனர்.

எமது தரப்பில் 12 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்தனர்.
மிக மோசமாக அடிவாங்கிய அரச தரப்பினர் நேற்று முன்தினம் குடிமக்கள் வாழும் பகுதிகளில் சூப்பர் சோனிக் விமானங்களில் வந்து குண்டு வீச்சை நடத்தினர்.
இதேவேளையில் கிழக்கைப் பிடித்து விட்டதாக படையினர் கூறிவருவது பற்றி கருத்துரைக்கையில்,

கிழக்கில் மட்டக்களப்பு எங்களது வலுவான நிலை. அம்பாறையில் நாங்கள் நகரும் முகாம்களையே வைத்துள்ளோம். இங்கே எங்கள் இடங்களைப் பிடித்திருப்பதாக சொல்வது நகைப்புக்கிடமானது. திருகோணமலை பகுதியில் மோதல் தொடர்கிறது என்றார் அவர்.

தொடர்புபட்ட செய்தி: விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு
நன்றி>புதினம்.

Wednesday, January 17, 2007

இனம்காணும் திறன் படையினருக்கு இல்லை - ஐனாதிபதி.

புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை ஸ்ரீலங்கா படைகள் படுகொலை செய்து வருவதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் நேற்று கொழும்பில் நடைபெற்ற கஜபாகு இராணுவ படையணியின் விருத வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி இது குறித்து ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

புலிகளையும் சாதாரண மக்களையும் இனம் காணும் திறன் ஸ்ரீலங்காவின் முப்படைகளுக்கும் இருக்க வேண்டியது அவசியம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார்
இதன் மூலம் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவிகளை ஸ்ரீலங்காவின் முப்படைகளும் படுகொலை செய்வதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

செஞ்சோலையில் அப்பாவி சிறுவர்களையும் படகுத்துறையிலும் வாகரையிலும் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள் மீது ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்ட தாக்குதல்கள் புலிகளின் இலக்குகள் மீதான தாக்குதல்களாக பரப்புரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
தற்போது இவ்வாறான தாக்குதல்கள் ஸ்ரீலங்கா படைகளுக்கு புலிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் வித்தியாசம் காணும் திறனற்று இருப்பதால் தான் இடம்பெற்றுள்ளதை முப்படைகளின் தளபதியான மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் மிக்கது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
நன்றி>பதிவு.

Friday, January 12, 2007

தென்னாசிய மனித உரிமை மீறல் முதலிடம் இலங்கைக்கே!!!

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தெற்காசியாவில் ஏனைய நாடுகளை விட முதலிடம் பெற்றுள்ளதாக கியுமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கடந்த வருடம் மோசமாகி இருந்தன.

தெற்காசியாவில் இலங்கை கடந்த வரும் மனித உரிமைமீறல் விடயத்தில் முதல் இடம்பெறுவதற்கான காரணம், தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களேயாகும்.

இதன்போது சர்வதேச மனித நேய சட்டங்களும் மற்றும் மனித உரிமை விடயங்களும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீதான கொலைகள் குண்டுதாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் சிறுவர்களை படைகளில் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் பாரதூரமானவையாகும்.

தமிழிழ விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குல்கள். தற்கொலை தாக்குதல்கள் மற்றும் சிறுவர்களை படைகளில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மனித உரிமைகளை மீறிவருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையின் நிலவரம் தொடர்பாக சர்வதேசம் கவலைகொள்வதாக 2006 ஆம் ஆண்டு முழுவதும் வெளியான கருத்துக்கள் ஒரு காலமும் ஏற்பட்டதில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நன்றி>பதிவு.

சர்வதேச அமைப்புக்களுக்கு அரசு எச்சரிக்கை!!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்குவதாகக் கண்டுபிடிக்கப்படும் உதவி வழங்கும் அமைப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இவ்விதம் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் அனைத்துலக அமைப்பொன்றின் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்குகின்றதா என்ற சந்தேகத்தின் பேரில் பல உதவி வழங்கும் அமைப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதுடன், அதனடிப்படையில் நெதர்லாந்து அமைப்பொன்று நாட்டைவிட்டு வெளியேற்றபபடலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அண்மையில் படையினர் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கஞ்சிகுடிச்சாறு பகுதியிலுள்ள புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றிய வேளையில் நெதர்லாந்தைச் சேர்ந்த 'சோஆ' அமைப்புக்கு சொந்தமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தங்களின் சின்னத்துடன் ஏதாவது உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பின் அது திருடப்பட்டதாகவே இருக்கும் என 'சோஆ' அமைப்பு தெரிவித்திருந்தது.

இதேவேளையில், குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றத்துக்குரிய அமைப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் விசாரணையின் கீழுள்ள அமைப்புக்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. 'சோஆ' என்று அரச சார்பற்ற அமைப்பொன்று விடுதலைப் புலிகளின் ஸ்ரான்லி முகாமிலுள்ள மருத்துவமனை ஒன்றை நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் ரம்புக்வெல, சில அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதேவேளையில், விசாரணையின் போது எமது சந்தேகங்கள் உறுதிசெய்யப்பட்டால், எமக்கு அவர்களது விசாக்களை இரத்துச்செய்ய வேண்டியிருக்கும். அல்லது அவர்களாகவே நாட்டைவிட்டு வெளியேறவேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

இருந்தபோதிலும் தம்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என 'சோஆ' அமைப்பின் பொது அலுவல்கள் முகாமையாளர் அன்ஸ் லெம் முனதற்றா தெரிவித்துள்ளார். அத்துடன் போரின் காரணமாக தாம் தமது அலுவலகத்தை மூடி வெளியேறும் போது எல்லாவற்றையும் எடுத்துவர முடியாது எனவும், பலவற்றைக் கைவிட்டு வரவேண்டியிருந்த பின்னணியிலேயே அவற்றைப் படைத்தரப்பு கைப்பற்றியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் கொழும்பு நாரகேன்பிட்டிய பகுதியிலுள்ள மேற்படி அரச சார்பற்ற அமைப்பின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் அதனை அடித்து நொருக்கியிருக்கின்றனர். அங்கிருந்த பணியாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வமைப்பு விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டியே ஹெல உறுமயவினர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
நன்றி>புதினம்.